For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு: கருணாநிதி துரோகம்-ஜெ

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக தெரியவில்லையா? என்று என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு பதிலளித்த கருணாநிதி, "முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதை மத்திய அரசு அறியும். எனவே, கேரள அரசுக்கு இதைப் போன்ற அனுமதியை கொடுத்திருக்காது என்று தான் நம்புகிறோம்'' என்று தெரிவித்தார்.

மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு, இதுபோன்று "நம்புகிறோம்'' என்று அறிக்கை விடுவதை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய அரசிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அப்படி அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், அதைத் தடுத்து நிறுத்த முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

மத்திய அரசை தட்டிக் கேட்டால், தமிழகத்தில் இருக்கும் தனது ஆட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்ற பயத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவை கழற்றி விட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில், கேரள அரசுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற்று விட்டதாக ஒரு வதந்தி கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் பத்திரிகைகளில் பரப்பப்பட்டது.

அதாவது, இந்தப் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் ராசா, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசியதாகவும், அப்போது கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிடுவதாக ராசாவிடம் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் உத்தரவாதம் அளித்ததாகவும் செய்திகள் வெளியாயின.

இந்தச் சூழ்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளதை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கேரள அரசின் இந்தத் திட்டம் முடக்கப்படும் என்ற அளவில் தமிழ் நாட்டிற்கு உறுதிமொழி கொடுத்திருப்பதாக வந்துள்ள செய்தியையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதன் காரணமாக, எதிர் காலத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.

மத்திய அரசில் அங்கம் வகிக்காத கேரள அரசு மத்திய அரசிடம் இருந்து அனுமதியை பெறுகின்றபோது, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, அந்த அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க முடியாதா?.

தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக தெரியவில்லையா?.

மத்திய அமைச்சரான தன் மகன் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமை குறித்தே அக்கறை செலுத்தாதவர் கருணாநிதி!. தனக்கு 'வர வேண்டியது' வந்தால் போதும் என்று நினைக்கிறார் போலும்!.

ஆய்வுக்கு பின்னர் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இது எனது ஆட்சிக்காலத்தில் உள்ள நிலைமை!.

கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்த நிலை மாறி, கேரள அரசு புதிய அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அதாவது 2006ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சாதகமாக இருந்த சூழ்நிலை, 2009 ஆம் ஆண்டு கேரளாவிற்கு சாதகமாக மாறிவிட்டது! இதுதான் கருணாநிதியினுடைய நிர்வாகத் திறமை!.

நான் முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பைக்காரா புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்தார் கருணாநிதி!.

அதாவது தமிழகத்தின் முதலமைச்சராக இல்லாமலேயே தமிழகத்திற்கு துரோகம் செய்தார். இன்று கருணாநிதியே தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய கட்சி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது. அப்படி இருந்தும், உச்ச நீதிமன்ற ஆணையை மீறி கேரள அரசுக்கு மத்திய அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த அனுமதி அளிக்கிறது.

முதலமைச்சராக இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்! கருணாநிதியால் தமிழகத்திற்கு துரோகம் தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X