கேரளாவின் அணை முயற்சி-பிரதமர் தலையிட தங்கபாலு கோரிக்கை
சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே கேரள அரசு புதிய அணையைக் கட்ட மேற்கொண்டு வரும் முயற்சிகளை பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டுத் தடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் கேரள அரசு புதிய அணைக்கட்டு வதற்கு முதல் நடவடிக்கையாக ஆய்வு செய்யும் அனுமதியை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் நேற்று அம்மாநில அரசுக்கு வழங்கிய செய்தி தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது.
கேரள அரசு பிடிவாதமாகவும், பலவந்தமாகவும் அணை தாங்கும் திறன் குறித்து தேவையற்ற வினாவை எழுப்புவதும், தவறான தகவல்களை தருவதும் தொடர்ந்து புதிய அணை கட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதும் அறிவார்ந்த செயலாகாது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நிறைவேற்றாமல் கேரள அரசின் போக்கு ஒற்றுமை ஒருமைப்பாட்டின் அடிப்படையிலான ஜனநாயக நாட்டின் கொள்கைக்கு எதிரானதாகும்.
தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு ஜனநாயக நெறிமுறையை மீறி புதிய அணை கட்டுமானால் அது தமிழக விவசாயிகளின் வாழ்க்கையில் கேள்விக்குறியாக அமைந்து விடும்.
மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினையில் சம்பந்தப்பட்ட வல்லுநர்களை அழைத்துப் பேசி மத்திய அரசு தீர்வு காண வேண்டும். அல்லது நியாயங்களின் அடிப்படையில் முடிவு காண வேண்டும். இதுபோன்ற உணர்வுபூர்வமான பிரச்சினையில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் சம்பந்தப்பட்ட முதல்- அமைச்சர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்பதுதான் சரியான வழி.
இதற்கு மாறாக தமிழகத்தின் கருத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், எதிர்ப்பையும் தெரிந்து கொள்ளாமல் ஒருதலைபட்சமாக கேரள அரசின் நயவஞ்சக நடவடிக்கைக்கு ஆதரவாக ஆய்வு மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆணை வழங்கியது தமிழக விவசாயிகளையும், எங்களையும் பெரும் கவலைக்குள்ளாக்கி உள்ளது.
எனவே பிரதமர் மன்மோகன்சிங் இது சம்பந்தமாக உடனடியாக தலையிட்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கேரள அரசுக்கு வழங்கியுள்ள ஆய்வுப் பணி ஆணையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இரு மாநில முதல்-அமைச்சர்களை அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும்.
அல்லது உச்சநீதி மன்ற வழக்கு முடியும் வரை இப்பிரச்சினையில் தலையிடாமல் இருக்க உரிய ஆணையை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச் சகத்திற்கு வழங்கிட வேண்டுமென்று தமிழக விவசாயிகள் -மக்கள் சார்பிலும் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.