சிறையில் எஸ்ஏ ராஜாவுக்கு டாக்டர்கள் குழு பரிசோதனை
நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் அடைபட்டிருக்கும் எஸ்ஏ ராஜாவுக்கு மூன்று டாக்டர்கள் கொண்ட குழு மருத்துவ பரிசோதனை செய்தது.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலைவழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற எஸ்ஏ ராஜா பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 26ம் தேதி அவர் இதய நோய் காரணமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் சிகிச்சைக்கு பின்னர் அவர் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் தனக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. எனவை தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்கு அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் எஸ்ஏ ராஜாவை பரிசோதிக்க 3 டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி கேலக்ஸி மருத்துவமனை டாக்டர் மகபூப், நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கனிராஜ் பீட்டர், டாக்டர் ரவிசந்திரன் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று எஸ் ஏ ராஜாவை பரிசோதனை செய்தனர்.