For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சொல்வது போல நான் என்ன பாவம் செய்தேன்?- கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பாவச் செயல்களுக்கு விமோசனம் கிடைக்காது என்று சொல்கிறார் ஜெயலலிதா. நான் என்ன பாவச் செயல்களைச் செய்து விட்டேன்? அவரை ஒருமுறை கூட பார்த்தது கிடையாதே? பேசியதில்லையே? வேறு என்ன பாவம் செய்துவிட்டேன்? பிரார்த்தனை, யாகம், பூஜை, புனருத்தாரணம் எல்லாம் ஜெயலலிதாவுக்குதான் கை வந்த கலை. தமிழ் மக்களுக்கு எதிராக நான் பாவச் செயல்களை செய்தேனா? அல்லது அவர் பாவச் செயல்களை செய்தாரா? என்பதை மக்கள் நன்கறிவார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

செப்டம்பர் 22ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் சந்தித்தனர். இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்கள் மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு திரும்பவும்; அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை நிறுத்த எச்சரிக்க வேண்டும்; இலங்கையில் முள் கம்பி வேலிகளுக்குள் துன்பப்படும் தமிழர்களின் உண்மை நிலையை நேரில் பார்த்துவர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று எம்.பிக்கள் கேட்டனர்.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்னை சந்தித்து பேசினார். பிரதமரை சந்தித்த கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவை அரசு செலவில் அனுப்பவில்லை. செலவுகளை அந்தந்த கட்சிகள்தான் ஏற்றுள்ளன.

இந்தக் குழு இலங்கைக்குச் சென்றுவர இந்திய, இலங்கை அரசுகள் அனுமதி அளித்துள்ளன. ஆனால், மூன்று மாத ஓய்வுக்குப் பின் தலைநகரம் திரும்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவியும், அவரோடு தோழமையிலே இருக்கிறோமா இல்லையா என்று தெரியாத நிலையில் உள்ள சில கட்சிகளும் தனித்தனியாக, அவசர அவசரமாக அறிக்கைகள் விட்டுள்ளனர். பேட்டிகளை அளித்துள்ளனர்.

அவர்களுக்கு இலங்கை முகாம்களில் தமிழர்கள் அவதிப்படுவதைப் பற்றியோ அவர்களின் நிலைமைகளை அறிந்து வர வேண்டும் என்பதைப் பற்றியோ கவலையில்லை.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கூட்ணியை தாக்கி அறிக்கை விட வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏன் அனுப்பவில்லை என்கிறார்கள். அந்தக் கட்சியிலே உள்ளவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்கள் பிரதமரைச் சந்தித்து, அனுமதி பெற்று சென்று பார்க்க வேண்டியதுதானே? அதை விடுத்து குறை கூறி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், அது இலங்கைத் தமிழர்களைக் காப்பதாக ஆகிவிடுமா? இலங்கைப் பிரச்சினை பற்றி அரசு நடத்துகின்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கபட நாடகம் என்று ஒவ்வொரு முறையும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

அறியாமைக்கும் அவசரத்துக்கும் பெயர் போன ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், நாடாளுமன்றக் குழுவுக்கு மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கப் போவதாக அறிவிப்பு வருகிறது. நாடாளுமன்றக் குழுவுக்கு மாநில அமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்படி தலைமை வகிக்க முடியும் என்று கேட்டுள்ளார்.

பத்திரிகையில் வெளி வந்த ஏதோவொரு யூகச் செய்தியைப் படித்துவிட்டு, மு.க.ஸ்டாலின் எப்படி தலைமை வகிக்க முடியும் என்று அறிக்கை விட்டிருப்பதைப் பார்க்கும்போது, ஜெயலலிதா எப்படி அவசரப்படுகிறார் என்பது புரிகிறதா இல்லையா?.

அடுத்து அந்தக் குழுவில், கருணாநிதியின் மகள் கனிமொழி இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது என்று என் குடும்பத்தினர் மீது வயிறு எரிகிறார். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமென்று நினைத்தாலும், வம்புக்கு இழுத்தால் என்ன செய்வது?.

இந்தக் குழு திரும்பியதும், கருணாநிதியிடம் அறிக்கையை அளிக்குமா? நாடாளுமன்றத்திடம் அறிக்கையை அளிக்குமா? என்றும் ஜெயலலிதா கேட்டிருக்கிறார். எங்கள் தோழமை அணியின் சார்பில் சென்றுள்ள குழு அது. அறிக்கையை எங்களிடம்தான் அளிக்கும்.

நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, அரசின் சார்பில் குழு சென்றிருக்குமேயானால், அரசிடமோ, நாடாளுமன்றத்திலோ அறிக்கையை அளிக்கும். இந்த நடைமுறை கூடத் தெரியாமல் அறிக்கை விடுகிறார் அம்மணி.

இலங்கையிலே முள்வேலி முகாம்களில் கஷ்டப்படும் தமிழர்களின் இன்னல்களைக் களைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதை கேலிக் கூத்தான நாடகம் என்று அறிக்கை விடுகிறார் என்றால், இலங்கைத் தமிழர்களிடம் அவருக்கு உள்ள அக்கறை நமக்குத் தெரிகிறதா இல்லையா?.

அறிக்கையிலே இறுதியாக ஆத்திரத்தின் உச்ச கட்டத்திற்குச் சென்று, திருக்குவளை கோயிலில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு என்னதான் பிரார்த்தனை செய்தாலும், தமிழ் மக்களுக்கு எதிராக கருணாநிதி செய்த பாவச் செயல்களுக்கு விமோசனம் கிடைக்காது என்று முடித்திருக்கிறார்.

ஜெ.வைப் பார்த்ததே இல்லையே...

நான் என்ன பாவச் செயல்களைச் செய்து விட்டேன்? அவரை ஒருமுறை கூட பார்த்தது கிடையாதே? பேசியதில்லையே? வேறு என்ன பாவம் செய்துவிட்டேன்? பிரார்த்தனை, யாகம், பூஜை, புனருத்தாரணம் எல்லாம் ஜெயலலிதாவுக்குதான் கை வந்த கலை.

தமிழ் மக்களுக்கு எதிராக நான் பாவச் செயல்களை செய்தேனா? அல்லது அவர் பாவச் செயல்களை செய்தாரா? என்பதை மக்கள் நன்கறிவார்கள். அவர் செய்த பாவச் செயல்களுக்குத்தான் தமிழ்நாட்டு மக்கள் பல முறை பாடம் புகட்டி மூலையிலே அவரை உட்கார வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலிலே கூட 100 இடங்களுக்கு 17 இடங்களில்தான் அந்தக் கட்சி வெற்றி பெற்றது என்ற ஓர் உதாரணம் போதுமல்லவா?
அயல்நாடு ஒன்றுக்கு, குழு ஒன்றை அனுப்ப வேண்டுமென்றால், அந்த அனுமதியின்றி அனுப்ப முடியாது என்பது சிறுபிள்ளைக்குக்கூடத் தெரிந்த விஷயம்.

அதனால்தான் இரண்டு அரசுகளின் அனுமதிகளை பெற்று எங்கள் தோழமைக்கட்சி உறுப்பினர்கள் சென்றுள்ளார்கள்.
இப்போதுகூட, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பிரசாரப் பயணம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். அது அவர்களுடைய கட்சியின் நடவடிக்கை. அதற்கு ஏன் எங்களை அழைக்கவில்லை என்றா கேட்க முடியும்?.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அனுப்பாவிட்டால் உண்மைகளை கண்டறிய முடியாது என்றும் அந்த இயக்கத்தினர் பேட்டியில் கூறியுள்ளார்கள். அந்த இயக்கத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு போய், பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைப்பதை யார் தடுத்தார்கள்? அதற்கான முயற்சியிலே ஈடுபடாமல், நாம் செய்கின்ற முயற்சிகளை கண் துடைப்பு நாடகம் என்று விமர்சனம் செய்வது சரியா?.

ராஜபக்சேயின் விருந்தினராக எம்.பி.க்கள் குழு போயிருக்கக்கூடாது என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறார். ராஜபக்சேயின் விருந்தினராக குழு செல்லவில்லை. அந்த நாட்டின் அதிபர் என்ற முறையிலே அவருடைய அனுமதியோடு சென்றுள்ளது. இலங்கையிலே அவதிப்படுகின்ற தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று எங்களாலான முயற்சிகளிலே ஈடுபடுகிறோம். இலங்கைத் தமிழர்கள்மீது எல்லோருக்கும் அக்கறை உண்டு.

அவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியுமென்று பார்க்க வேண்டுமே தவிர, ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டுக்கொண்டிருந்தால், இலங்கைத் தமிழர்களின் இன்னல் களைந்துவிடுமா? எதிர்க்கட்சிகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், எங்கள் மீது காய்ந்து விழுவதை நிறுத்திக் கொண்டு, இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற என்ன வழி என்பதிலே கவனத்தைத் திருப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் நமக்குள்ளே மோதிக் கொண்டு தானே, இலங்கை தமிழர்களிடையேயும் சகோதர யுத்தத்துக்கு வழிவகுத்து, இந்த அவலநிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டாமா?.

தமிழக சட்டமன்றத்தில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றிய தீர்மானத்தை மறந்துவிட இங்குள்ள தமிழ் மக்கள் ஏமாளிகளா? அல்லது கோமாளிகளா? யுத்தம் என்றால் அதில் அப்பாவி மக்கள் சாவது சகஜம்தான் என்று சொன்னது ; யாராம்? அவருக்கு என்ன பேராம்? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X