For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளி-மலிவு விலைப் பட்டாசுகளால் ஆபத்து !

Google Oneindia Tamil News

Crackers
மதுரை: மலிவு விலைப் பட்டாசுகளால் ஆபத்து அதிகம் இருப்பதால் அவற்றை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மதுரை மாவட்ட தீயணைப்பு அதிகாரி தூயமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருமங்கலத்தில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி தூயமணி கூறியதாவது,

இந்த ஆண்டு விபத்தில்லாத தீபாவளியை தீயணைப்புத் துறை எதிர் நோக்கியுள்ளது.

தீபாவளி பண்டிகைய முன்னிட்டு, கடந்த ஒரு மாதமாக பொது மக்களிடம், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை தீயணைப்பு துறை நடத்தி வருகின்றது.

மனிதனின் செவித்திறனை பாதிக்காத 180 டெசிபல் ஒலி வரும் வகையில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளால் ஆபத்து இல்லை.

ஆனால், மலிவு விலையில் கிடைக்கும் பட்டாசுளால் ஆபத்து அதிகம். சோழவந்தான் வெடி விபத்தே இதற்கு உதாரணம். மலிவு விலை வெங்காய வெடிகளால் தான் இங்கு விபத்து நடந்தது என்பதை எல்லோரும் தெரியும்.

எனவே, பெரியவர்களின் துணையோடு மட்டுமே சிறுவர்களை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.

வீட்டிற்குள் கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகளை கொளுத்தக்கூடாது. பட்டாசு வெடிக்கும்போது அதன் அருகில் வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.

தீயணைப்பு துறையைச் சேர்ந்த 248 படைவீரர்கள், மதுரை மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் உள்ளனர். விபத்து ஏற்பட்டால் உடனடியாக 100, 101, 108 போன்ற எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

பட்டாசு வெடிக்கும்போது உடலில் தீக்காயம் ஏற்பட்டால் காயமடைந்த பகுதியை தொடர்ந்து 10 நிமிடம் வரை குளிர்ந்த தண்ணீரில் வைக்கவேண்டும். தீக்காயம் பட்ட இடத்தில் மை, எண்ணெய் போன்றவற்றை தடவக்கூடாது என்றார்.

ரூ. 800 கோடி பட்டாசு தயாரிப்பு..

இதற்கிடையே, இந்த ஆண்டு சிவகாசியிலிருந்து ரூ. 800 கோடி அளவிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ. 200 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் தயாராகி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் பட்டாசு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒவ்வொரு தீபாவளிக்கும் புது புது ரக பட்டாசுகளை உற்பத்தி செய்து அனுப்புவதில் சிவகாசிக்காரர்கள் கெட்டிக்காரர்கள்.

முன்பு ஓலை வெடி, ஊசி வெடி, குருவி வெடி, லட்சுமி வெடி என்று பட்டாசுகள் வரும். ஆனால் இது கம்ப்யூட்டர் காலமாச்சே..இதனால் வித்தியாசமான பெயர்களில், வெரைட்டியான பட்டாசுகள் களம் இறங்கி காதுகளைப் பிளந்து கொண்டிருக்கின்றன.

பிரமோஸ்...

கலர் மேஜிக், பிளவர் ராப், பிரமோஸ் ஏவுகணை, பிளிங்கஸ், பாரீஸ்பேன்சி, சோலார் லேசர், ஸ்கைடி ராபிக் என பல வகை புதிய ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சிவகாசியில் அனுமதி பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் 600 உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் பேர் இந்த பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

சமீப காலமாக பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளினால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்த தடவை சில இடங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ரூ. 200 கோடிக்கு மேல் பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 600 கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு சுமார் ரூ.800 கோடிக்குமேல் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

ஸ்வீடன், லண்டன், ஜப்பான் போன்ற பெயர்களில் கூட தற்போது பட்டாசுகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடுகளின் ஏவுகணைகளின் பெயர்களிலும் விதவிதமான ராக்கெட் பட்டாசுகள் தயாரித்து விற்பனைக்கு வந்துள்ளன.

தீபாவளி வந்து விட்டதால் தற்போது பட்டாசு விற்பனையும், வாங்கி வெடிப்போரின் உற்சாகமும் களை கட்டியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X