For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதித்துறையை மதிக்காமல் எல்லை மீறுகிறது கேரள அரசு - சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

Supreme Court
டெல்லி: மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காமல் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் இஷ்டத்துக்கு சட்டத்தை இயற்ற தொடங்கினால் மிகவும் கடுமையான விளைவுகள் ஏற்படும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் புதிய சட்டத்தை இயற்றியதன் மூலம் கேரள அரசு நீதித்துறையை மீறி நடந்து கொண்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை உள்ளிட்ட ஐந்து தென் மாவட்டங்களின் உயிர் நாடியாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் 142 அடியாக நீரைத் தேக்கி வைத்துக் கொள்ள கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆனால் இதை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் விதமாக கேரள சட்டசபையில் புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து விட்டனர். இதன் மூலம் அணையின் நீர்த் தேக்கம் 136 அடியாகவே நிரந்தரமாக இருக்கும் வகையில் மாற்றி விட்டது கேரளா.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே ஒன்றும் இல்லாமல் ஆக்கிய கேரளாவின் செயல் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. தற்போது முல்லைப் பெரியாறு அணையையே இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு புதிய அணை கட்ட கிளம்பி விட்டது கேரளா. இதற்கு ஜெய்ராம் ரமேஷை உடந்தையாக்கியுள்ளது கேரள அரசு.

இந்த நிலையில் கேரள அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது.

இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெயின், முகுந்தகம் சர்மா, லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

கேரளாவின் சார்பில் ராஜீவ் தவான் ஆஜரானார். அவருக்கும் நீதிபதிகளுக்கும் இடையே கடும் வாதம் நடந்தது.

அந்த சூடான வாத விவரம்..

கேரளா - தமிழகம் அணையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறது. இது தண்ணீர் பிரச்சினையாக மட்டுமே இருக்குமானால் இதை பேசித் தீர்த்துக் கொள்வது கடினமல்ல.

கோர்ட் - அப்டியானால் உங்களது கவலை அணை மட்டும்தான் என்று எடுத்துக் கொள்ளலாமா..?

கேரளா- அணைக்கு அருகே புலிகள் சரணாலயம் உள்ளது. நீர்மட்டம் உயர்ந்தால், விலங்குகளுக்கு சிரமம் ஏற்படும். இது மனிதனால் கட்டப்பட்ட பாலம்தான். எனவே அணையின் பாதுகாப்பு குறித்து கேரள மக்களை எப்படி அரசால் திருப்திப்படுத்த முடியும்?

கோர்ட் - 2006, பிப்ரவரி 26ம் தேதி இந்த கோர்ட் பிறப்பித்த தீர்ப்புக்கு முன்பும் கூட இந்த கவலைகள் இருந்தன. ஆனால் எங்களது தீர்ப்புக்கும், உங்களது சட்டத் திருத்தத்திற்கும் இடையிலான அந்த 15 நாட்களில் ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு நடந்திருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

கேரளா - அப்படியெல்லாம் எதுவும் இல்லை.

கோர்ட் - அப்படியானால், அணையின் பாதுகாப்புதான் உங்களது கவலையா?

கேரளா - தொடர்ந்து அணையைக் கண்காணிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கவலை.

கோர்ட் - நீங்கள் நீதித்துறையை மீறும் வகையில் நடந்து கொள்கிறீர்கள்.

நீதிபதி ஜெயின் - கோர்ட் அணையின் உயரம் குறித்து ஒரு நிர்ணயம் செய்தது. ஆனால் நீங்கள் 136 அடிதான் என்றீர்கள். அவர்கள் (தமிழ்நாடு) 152 அடி கேட்டார்கள். இரண்டுக்கும் இல்லாமல் 142 அடி என்று நாங்கள் சொன்னோம். ஆனால் நீங்கள் 136 அடிதான் என்று கூறி சட்டத்தை இயற்றி விட்டீர்கள். சட்லெஜ் யமுனை இணைப்புக் கால்வாய் குறித்த பஞ்சாபின் சட்டத்தைப் பார்த்தீர்களா. பிறகு கோர்ட்டின் புனிதத் தன்மை என்ன ஆவது..

கேரளா - நாட்டிலேயே மிகவும் பழமையான அணை இது.

தமிழக வழக்கறிஞர் பராசரன் - இதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

கோர்ட் - மீண்டும் அதே பிரச்சினையைத்தான் எழுப்புகிறீர்கள். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் 2006 தீர்ப்புக்கு முன்பும் எழுப்பப்பட்டவைதான். அணையை வலுவானதாக வைத்துக் கொள்ள உங்களுக்கு என்னதான் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு திட்டத்தை ஏற்படுத்தலாம். சொல்லுங்கள், உங்களது நிலைதான் என்ன...

பராசரன் - கேரளாவின் நோக்கமே இந்த அணையை இல்லாமல் செய்வது மட்டும்தான். புதிய அணையை கட்ட அவர்கள் விரும்புகிறார்கள். அணையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். புதிய அணை மட்டுமே அவர்களது ஒரே நோக்கம்.

கேரளா- சுயேச்சையான முறைப்படுத்தும் ஆணையம் ஒன்றை அமைக்கலாம். அதுதான் பிரச்சினையைத் தீர்க்கும் என்றால் அது சாத்தியம்தான் என்றார்.

இதையடுத்து வருகிற செவ்வாய்க்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X