For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அகதி முகாம்களை மேம்படுத்த ரூ. 12 கோடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள 115 இலங்கை அகதிகளின் முகாம்களை மேம்படுத்த ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முகாம்களி்ன் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று அமைச்சர்கள், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்க கூட்டம் நடந்தது.

அதி்ல், அவரவரர் மாவட்டங்களில் உள்ள முகாம்களின் நிலையை நேரில் கண்டறிந்து வரும் 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செயயுமாறு அமைச்சர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர், முகாம்களி்ன் வசிப்பவர்களை அகதிகள் என்று பார்க்காதீர்கள். அவர்களை தமிழர்கள் என்று பாருங்கள் என்றார்.

முதல் கட்டமாக ரூ. 12 கோடியை ஒதுக்கி முகாம்களை மேம்படுத்தவும், தேவைப்பட்டால் அதிக நிதியை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் 115 முகாம்கள் உள்ளன. 19,340 குடும்பங்களை சேர்ந்த 73,241 பேர் முகாம்களில் உள்ளனர். முகாமுக்கு வெளியே 11,288 குடும்பங்களை சேர்ந்த 31,802 பேர் தங்கியுள்ளனர்.

இவர்கள் எல்லோருக்கும் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

2008ம் ஆண்டு முதல்- அமைச்சர் ஆணையின் பேரில் முகாம்களை அமைச்சர்கள் சென்று பார்த்து மத்திய அரசிடம் மதிப்பீடு அளிக்கப்பட்டது. அங்கிருந்து இன்னும் அதற்கான நிதி உதவி வரவில்லை. ஆனாலும் முதல்வர் அதை எதிர்பார்க்காமல் ஏற்கனவே ரூ.5 கோடி அளித்துள்ளார்.

செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமையும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் சென்று பார்வையிடுவார். அங்கு யாரும் சித்ரவதை செய்யப்படவில்லை.

இலங்கை அகதிகள் குடும்பத்தை சேர்ந்த 38 பேர் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள் என்றார்.

முன்னதாக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கையில் தமிழ் அகதிகள் முள்வேலி முகாம்களுக்குள்ளே அவதிப்படுவதை எண்ணி கண்ணீர் உகுத்து அவர்களை அந்த முகாம்களில் இருந்து விடுவிக்க தமிழகத்தில் இருந்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று,

அவர்கள் நிலை அறிய செய்த ஏற்பாட்டின் விளைவாக மாபெரும் வெற்றியோ, மகத்தான வெற்றியோ கிடைக்கா விட்டாலும்கூட; அடைபட்டிருந்த 3 லட்சம் பேர்களில் சுமார் ஒரு லட்சம் பேரையாவது இதுவரை அந்த கூண்டுகளில் இருந்து வெளியே கொணர்ந்து அவர்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அது போதுமானதல்ல; மேலும் அவர்கள் அனைவரையும் விடுவித்து, வாழ்வாதாரங்களை வகுத்தளித்து மீண்டும் அமைதியான நல்வாழ்வு பெற்றிட இந்திய அரசின் முயற்சிகளும், அதற்காக நமது தூண்டுதல்களும் தொடங்கப்பட வேண்டுமென்றே கருதுகிறோம்.

இந்த நிலையில் ஏற்கனவே நான் இந்திய மண்ணில் அகதிகளாக குடியேறியிருக்கின்ற இலங்கை தமிழர்களை இந்த மண்ணின் நிரந்தர குடிமக்களாக ஆக்கிட வேண்டும் என்று, அதற்கான முயற்சியிலே ஈடுபட்டு நமது வேண்டுகோளை பரிசீலிப்பதாக இந்திய பேரரசின் சார்பிலும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே இலங்கை முகாம்களில் இருக்கின்ற தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறமிருக்க தமிழ்நாட்டில் தொடர்ந்து பல ஆண்டு காலமாக இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகள் நிலை என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற வகையிலும், இன்னும் சொல்லப்போனால் நம் நெஞ்சத்தைக் குத்திக்காட்டுகின்ற நிலையிலும் நவம்பர் 11ம் தேதியிட்ட ஒரு ஆங்கில வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்துள்ள நீண்ட கட்டுரை ஒன்றை நான் படிக்க நேர்ந்தது.

இலங்கையில் அகதிகளாக உள்ள தமிழர்கள் வாடி வதங்குவது ஒரு புறமிருக்க இங்கே நமது தமிழ் மண்ணில் அகதிகளாக வந்து சேர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் மக்கள் தாங்கள் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரங்கள், வசதிகள் எதுவுமின்றி எத்துணை துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை புகைப்படங்களோடு அந்த வார ஏடு வெளியிட்டுள்ள காட்சிகளைக் கண்டு, கண்ணீர் பெருக்கியதோடு அவர்கள் கவலைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கை மேற்கொள்வது தான் நமது கடமை ஆகும் எனக் கருதினேன்.

இலங்கை தமிழ் அகதிகளை பாதுகாத்திடவும், அவர்கள் தம் பட்டினி போக்கிடவும், படிப்பு வாய்ப்பு வழங்கிடவும், அவர்களது குறைகளை நீக்கி தாய் மண்ணில் வாழ வழியின்றி தமிழ் மண்ணில் வாழ்வதற்கு வந்தவர்களை அமைதியாக வாழச் செய்திட இங்குள்ள தமிழக அரசின் அதிகாரம் பெற்ற எல்லா துறையினருக்கும் பொறுப்பு உண்டு.

இதை நிலை நாட்டி அவர்களுக்கு வாழ்வளிக்க ஒல்லும் வகையெல்லாம் உழைத்திடுவோம் என்ற உறுதியோடு செயல்பட வேண்டும் என தொடர்புடைய துறையினர் அனைவருக்கும் ஆலோசனை வழங்கி- ஆய்வுகள் மேற்கொண்டு, ஆவன செய்திடவும்- அவர் தம் அல்லல் போக்கிடவும் அட்டியின்றி உடனே அரும்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று ஆணையிடுவதற்கு வாய்ப்பாக இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரை அழைத்து விவாதிக்கவிருக்கிறேன்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இன்னல் இம்மியளவும் இல்லாத வகையில் இன்புற்று வாழ்ந்திட இன்றைய கூட்டத்தின் வாயிலாக தேவையான நிதி ஒதுக்கி, அவர் தம் தேவைகள் நிறைவு செய்யப்பட வழி வகுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ஆனந்தசங்கரி வலியுறுத்தல்:

இந் நிலையில் இலங்கை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்தசங்கரி முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

இந்தியாவில் உள்ளது போல அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால் பெரும்பான்மையான தமிழர்களுக்கு ஓரளவு திருப்தி ஏற்படும்.

திமுக கூட்டணி எம்பிக்கள் குழு அண்மையில் இலங்கை முகாம்களின் நிலைமையை நேரில் கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை குழுவினர் விரைவில் சந்திக்க உள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை குழுவை சம்மதிக்க வைக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீங்கள் (கருணாநிதி) அழுத்தம் கொடுக்க வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவியைப் பெற்றுத் தரவும் முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X