For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனைத்து டெலிகாம் ஊழல்களையும் விசாரியுங்கள்-சிபிஎம்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய தொலைத்தொடர்பு துறையில் நடந்துள்ள அனைத்து ஊழல் குறித்தும் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய புலனாய்வுக் கழகம், டெலிகாம் துறை அலுவலகங்களில் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் முறைகேடுப் புகார்கள் மீது சோதனை நடத்தியுள்ளது. இது அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே என்று கூறி, அத்துறைக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் ஆ.ராசா, எதிர்க்கட்சிகளின் ராஜினாமாக் கோரிக்கையை நிராகரித்து வந்துள்ளார்.

இதோடு நில்லாமல் அவர் பாஜக ஆட்சிக் காலத்தில் ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் இத்துறையில் நடைபெற்றுள்ளது என்று புதிதாக ஒரு புகாரை வெளியிட்டுள்ளார்.

ஆ.ராசாவின் ராஜினாமாவைக் கோரும் எதிர்க்கட்சிகளுக்கு உள்நோக்கம் கற்பித்து வரும் தமிழக முதலமைச்சர், கடந்த ஆறாண்டுக் காலமாகத் திமுக அமைச்சர்கள் பொறுப்பு வகித்த இத்துறையில், பாஜக ஆட்சிக் கால ஊழலுக்கு எதிராக மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து வாய் திறக்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஒருவேளை, அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் பங்கேற்றிருந்த நினைவு திமுக தலைமைக்கு நெருடலாக இருக்கிறதோ!.

டெலிகாம் துறையில் நடைபெற்றுள்ள அனைத்து ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதோடு, மத்திய அமைச்சர் ஆ.ராசாவைப் பதவி நீக்கம் செய்து சிபிஐ விசாரணை குந்தகம் ஏதுமின்றி நடைபெற பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாகச் செயல்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.

நீதிபதி தினகரனுக்கு எதிராக வருமானத்திற்கு மீறி சொத்துக் குவித்ததற்கான மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததற்கான புகார்கள் தகுந்த ஆதாரங்களோடு வெளிவந்த வண்ணம் உள்ளன.

உச்சநீதிமன்ற நீதிபதியாக அவரது நியமனத்தை, நிறுத்தி வைத்துள்ளதாக மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். நீதிபதிகள் நியமனம் குறித்த நீதிபதிகள் குழு, தினகரன் பிரச்சனையில் முடிவேதும் எடுக்காமல் காலதாமதம் செய்வது நீதித்துறையின் மாண்புகளையே மதிப்பிழக்கச் செய்வதாக உள்ளது.

இப்பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உடனடியாக முடிவெடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரே, 199 ஏக்கர் பொது நிலத்தை நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள்ளார் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ள பின்னணியில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் முள்வேலித் தடுப்புகளை தினகரன் குடும்பத்தார் அகற்ற முற்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஆக்கிரமிப்பு ஊர்ஜிதமான பின்னரும், தமிழக அரசு அந்த நிலங்களைக் கையகப்படுத்தாமல் தாமதிப்பது கண்டனத்திற்குரியது. இந்நிலங்களைக் கைப்பற்றி, நிலமற்ற தலித் குடும்பங்களுக்கு உடனடியாக வினியோகிக்க வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டு விரிவான விசாரணைக்குப் பிறகு தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் அன்றைய போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதற்கு முன்னதாக அவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யவும் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தனர்.

இந்த தீர்ப்பு வெளிவந்த மறுநாளே முதல்வர், போலீசாரின் சாதனைகளை பாராட்டி கடிதம் எழுதியுள்ளது வியப்பளிக்கிறது.

காவல் துறையினர் அத்துமீறல்களில் ஈடுபடும் போது ஜனநாயக அரசியலில் அக்கறை கொண்டுள்ள எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது இயல்பே. அப்படிப்பட்ட நேரங்களில், காவல்துறையை ஒட்டுமொத்தமாக யாரும் பழித்தது இல்லை.

ரெட்டணை துப்பாக்கிச் சூடு, காங்கியனூரில் தடியடி சம்பவம், பிப்ரவரி 19ல் நீதிமன்றத்தில் நடந்த வெறித் தாக்குதல் சம்பவங்கள் ஆகியவை காவல் துறையினரின் 'நெடிய தொண்டற வாழ்க்கையில்' இடம்பெற்ற 'சீரிய பணி' என்று கருதக் கூடியவையா?.

நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைவணங்கித் தமிழக அரசு சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கையைக் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு ஒரு கியாஸ் சிலிண்டர் இணைப்பு மட்டுமே வைத்துள்ளவர்களுக்கு வழங்கி வந்த ரூ.30 மானியத்தை திடீரென ரத்து செய்துள்ளது. இது விலைவாசி உயர்வால் அல்லல்படும் மக்களுக்கு கிடைத்துவந்த சிறிய நிவாரணத்தையும் தட்டிப் பறிப்பதாகும். அனைத்து குடும்பங்களுக்கும் இந்த மானியத்தை நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வரதராஜன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X