For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைத் தமிழர் இடர் களைந்திட ஒத்துழைக்க வேண்டும்: கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் இடர்களைந்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முரசொலியில் முதல்வர் எழுதியிருப்பதாவது:

தமிழ்நாட்டில், 26 மாவட்டங்களில் 115 முகாம்களில் (2 சிறப்பு முகாம்கள் உள்பட) இலங்கைத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதுநாள் வரை 19,340 குடும்பங்களைச் சார்ந்த 73,241 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 11,288 குடும்பங்களைச் சார்ந்த 31,802 பேர் முகாம்களுக்கு வெளியில் தங்கி உள்ளனர்.

2006-ம் ஆண்டில் ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில், 9,562 வீடுகளின் மேற்கூரைகள் சீர் செய்யப்பட்டன. ரூ.3 கோடி செலவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2006-ம் ஆண்டில் 86 முகாம்களில் அடிப்படை வசதிகளான கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ரூ.9 கோடியே 12 லட்சம் செலவில் செய்து கொடுக்கப்பட்டன. 2007-2008-ம் ஆண்டில் 50 முகாம்களில் புதியதாக கழிப்பறைகள் மற்றும் குடிநீர்வசதிகள் ரூ.5 கோடியே 24 லட்சம் செலவில் செய்து முடிக்கப்பட்டன.

2008-ம் ஆண்டில் 72 முகாம்களில் வீடுகள் புதுப்பிக்கவும், மற்றும் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கவும் ரூ.3 கோடியே 12 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 2009-10-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இத்தகைய பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்காக செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் என்னுமிடத்தில் 96 வீடுகள் ரூ.1.20 கோடி செலவிலும், நாட்டரசன்கோட்டை, சென்னல குடியில் 90 வீடுகள் ரூ.30.80 லட்சம் செலவிலும், வேலூர் மாவட்டம் குடியாத்தம் முகாமில் 62 வீடுகள் ரூ.21.08 லட்சம் செலவிலும், ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் 63 வீடுகள் ரூ.22.68 லட்சத்திலும், திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் 26 வீடுகள் ரூ.8.84 லட்சத்திலும் கட்டி முடிக்கப்பட்டு இலங்கைத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.

கரூர் மாவட்டம், ஆச்சிமங்கலம் என்ற இடத்தில் ரூ.1.16 கோடி செலவில் 450 வீடுகள் கட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், வேடர் காலனி முகாமில் புதியதாக 150 வீடுகள் ரூ.86 லட்சம் செலவிலும், திரூமூர்த்திநகர் முகாமில் புதியதாக 115 வீடுகள் ரூ.98 லட்சம் செலவிலும், வேலூர் மாவட்டம் சின்னப்பள்ளிக் குப்பம் முகாமில் புதியதாக 87 வீடுகள் ரூ.68.80 லட்சம் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம் நாராணம்மாள்புரத்தில் புதியதாக 9 வீடுகள் ரூ.7.74 லட்சம் செலவிலும், ஆலடிiர் முகாமில் 46 வீடுகள் ரூ.39.56 லட்சம் செலவிலும், அத்தியடிப்பிள்ளையார்கோவில் அகதிகள் முகாமில் 60 வீடுகள், ரூ.51.60 லட்சம் செலவிலும் புதியதாக கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

1.8.2006 முதல் மத்திய - மாநில அரசுகள் வழங்கும் பணக்கொடை குடும்பத் தலைவர்களுக்கு ரூ.200 என்பதிலிருந்து ரூ.400 ஆகவும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வயது வந்தோருக்கும் ரூ.144 என்பதிலிருந்து ரூ.288 ஆகவும், குடும்பத்தில் உள்ள முதல் குழந்தைக்கு ரூ.90 என்பதிலிருந்து ரூ.180 ஆகவும், குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு ரூ.45 என்பதிலிருந்து ரூ.90 ஆகவும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

ஒரு கிலோ அரிசி 57 பைசா என்ற அளவில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கான; டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுக்கான ஆறாயிரம் ரூபாய் நிதியுதவித் திட்டம் 2007 முதல் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, சுமார் 1,000 பேருக்கு 2007-08ம் ஆண்டிலும், 2,242 நபர்களுக்கு 2008-09ம் ஆண்டிலும் வழங்கப்பட்டுள்ளது,

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் இல்லத்து மாணவ- மாணவியர்களுக்கு 12-ம் வகுப்பு வரை இலவச கல்வியும், இலவச புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடை, மதிய உணவு மற்றும் பிளஸ்-1 மாணவ -மாணவியருக்கு இலவச மிதிவண்டியும் வழங்கப்படுகின்றது. கடந்த 2008-09ம் ஆண்டில் 20,106 மாணவ- மாணவியர்களும், 2009-10ல் 19,737 மாணவ- மாணவியர்களும் பயன் பெற்று உள்ளனர்.

இலங்கை தமிழ் மாணவ -மாணவியர்களுக்கு 2008-09 மற்றும் 2009-10ம் ஆண்டுகளில் கலைக்கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு நிரப்பப்படாத இடங்களில் இலங்கை மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள உரிய அனுமதி மற்றும் ஆணைகள் வழங்கப்பட்டு 2008-09-ம் ஆண்டில் 917 மாணவ -மாணவியர்களும், 2009-10ல் 1,084 மாணவ- மாணவியர்களும் பயின்று வருகின்றனர்.

முகாம்வாழ் மாணவ -மாணவியர்கள் வெளிமாவட்டங்களில் தங்கி உயர்கல்வி மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்பட்டு அவர்களுக்குரிய பணக்கொடையை அவர்களின் பெற்றோர்களிடம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

2009-10ம் ஆண்டில் இலங்கை தமிழ் மாணவ- மாணவியர்களை சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவில் ஏற்படும் காலியிடங்களில் சேர்க்க அரசின் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து முகாம்களிலும் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு பொது சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முகாம்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் மாதம் இரண்டு முறை மருத்துவக் குழுக்கள் முகாம்களுக்குச் சென்று தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டும் வருகின்றன.

சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இடங்களில் அந்தந்த மாவட்ட மற்றும் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் வாயிலாக உயர் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதியின் இலங்கைத் தமிழர் சிறப்பு நிவாரண நிதியில் இருந்து ரூ.15 ஆயிரம் விபத்து மற்றும் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்காக வழங்கப்படுகின்றது.

2006-ம் ஆண்டிற்கு முன் வரை இரவு 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. 2006-ம் ஆண்டிற்குப் பிறகு 24 மணிநேரமும் தொடர்ந்து மின்சாரம் வழங்க ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை பெருக்கிக் கொள்ளும் பொருட்டு காலை 6 மணி முதல் மாலை 6 வரை வேறு இடங்களுக்கு சென்று வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர வெளியூர்களில் சென்று தங்கி வேலை செய்ய விரும்புபவர்களுக்கு சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டு பணக்கொடை வழங்கப்படும் நாளில் மட்டும் வந்து பணக்கொடைகள் பெற்றுச் செல்ல ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழர்களுக்கு முகாமில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்குரிய அனைத்து நிவாரண உதவிகளும் உடன் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு உரிய இலங்கை பிறப்புச் சான்று சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகத்தில் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசினால் மேற்கண்ட அனைத்து உதவிகளும் தொடர்ந்து முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

இத்துடன் நம்முடைய கடமை முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. எனவேதான் நான் தொடக்கத்தில் எழுதியவாறு அவசர அவசரமாக இந்தக் கூட்டத்தைக் கூட்டினேன். அந்த முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான விடிவு காலம் பிறக்க வேண்டும் என்பதற்காக கடந்த 26.9.2009 அன்று காஞ்சியில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் இறுதித் தீர்மானமாக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்தபோது, "இவற்றிற்கெல்லாம் மேலாக; இவர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம், மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ், மறு குடியமர்த்தும் முயற்சியாக மத்திய அரசோடு கலந்து பேசி; அவர்கள் தமிழகத்திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தரவேண்டுமென்றும், அவர்கள் தங்குவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்குமான ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டுமென்றும்'' கேட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அதற்கடுத்த மறுநாளே 27.9.2009 அன்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை கிடைப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், அவர்களின் நல்வாழ்வுக்கு சமூக பொருளாதார ரீதியாக தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும்'' என்று எழுதியிருந்தேன்.

எனவே, இந்த அரசைப் பொறுத்தவரையில் -அவர்கள் இலங்கைத் தமிழ் அகதிகள் அல்ல; அவர்களும் தமிழர்கள்தான் -நம்மோடு தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள்தான் -அவர்களை வாழ்விக்கச் செய்யும் அனைத்து முயற்சிகளும் நம்மை நாமே வாழ்வித்துக் கொள்ளச் செய்யும் முயற்சிகள்தான் என்ற நோக்கோடு செயல்படுகின்றது.

"வார ஏடு'' ஒன்று சுட்டிக் காட்டியதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற குறைகளையும் கண்டறிந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத்தான் இந்த அரசின் சார்பில் 12 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் உதவிகளும் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

நமது அமைச்சர்கள் மட்டுமல்லாது; உன் போன்றவர்களும் இங்குள்ள இலங்கைத் தமிழர்களின் இடர்களைந்திட ஒல்லும் வகையெல்லாம் அவர்களுக்கும், இந்த அரசுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X