For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'வரும் முன் காத்துக் கொண்ட ராசா': விஜய்காந்த்

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு மட்டும் 'வரும் முன் காப்போம் திட்டத்தை' செயல்படுத்திய அமைச்சர் ராசா, மழை-வெள்ளம் விஷயத்தில் தன்னைத் தேர்ந்தெடுத்த நீலகிரி மக்களுக்கு மட்டும் 'வரும் முன் காப்போம் திட்டத்தை' செயல்படுத்தியிருந்தால் பெரும் சேதத்தை தவிர்த்திருக்க முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களும், கடலோர மாவட்டங்களும் கனமழையைச் சந்தித்து வருகிறது.

சற்றும் எதிர்பாராத விதமாக நீலகிரி மாவட்டத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கனமழை விடாமல் பெய்து பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. பெருத்த மண் சரிவுகளால் கிராமங்கள் மூடப்பட்டுள்ளன. வீடுகளிலிருந்த மக்களுக்கு அந்த வீடுகளே சமாதிகளாக ஆகிவிட்ட அவலம் நேர்ந்துள்ளது. சாலைகள் துண்டிக் கப்பட்டுள்ளன. பாலங்கள் இடிந்துள்ளன, காடுகள் அழிந்துள்ளன, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

எத்தனைப் பேர் இறந்தார்கள் என்ற சரியான விவரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதே அதிர்ச்சியாக உள்ளது. கால்நடைகளும், பெரும் எண்ணிக்கையில் இறந்துள்ளன. விளை பொருட்கள் நாசமடைந்து உள்ளன. உயிர்சேதமும், உடைமைகளின் சேதமும் இன்னும் முற்றிலுமாக உணரப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து நீலகிரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ளவே அங்கு போக முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இயற்கை விளைவித்த இந்த பேரிடரில் இரவோடு இரவாக இறந்துவிட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்லாயிரக்கணக்கானோர் வாழ்விழந்து, வசித்த வீடும் வைத்திருந்த பொருட்களையும் இழந்து, பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் அவர்கள் வாழ்க்கையை புனரமைக்க அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் உயிர்ச் சேதங்களை உடனடியாகத் தடுக்க, அரசு இயந்திரம் தனது மெத்தனப்போக்கை கைவிட்டு துரிதமாகச் செயல்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களையும், மருந்துகளையும் மற்றும் தேவைப்படும் உதவிகளையும் உடனடியாகச் செய்ய வேண்டும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தமிழக அரசு ஏன் ராணுவத்தின் உதவியை நாடவில்லை என்பதும், ஹெலிகாப்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மலைப் பகுதியில் சிக்குண்ட மக்களை ஏன் சென்றடையவில்லை என்பதும் புரியாத புதிராக உள்ளது.

அரசு முதலில் உடனடி நிவாரணத்தை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்ற அதே நேரத்தில் நீலகிரியில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களைச் செப்பனிடும் பணியில் திட்டம் தயாரித்து அதற்குரிய நிதியை இந்தியஅரசிடம் இயற்கைப் பேரிடர் நிதியிலிருந்து தமிழக அரசு பெற்று மக்களுக்கு உதவிடக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

உதாரணமாக பயிர் சேதத்திற்கு இழப்பீடு, மீண்டும் விவசாயம் செய்ய விதை, உரம் போன்றவை இலவசமாக அளித்தல், கடன் வசதி போன்ற வழக்கமான வெள்ள நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற் கொள்ள வேண்டும். இழந்த கால்நடைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் திட்டம் ஓரளவுக்கே செயலில் உள்ளதே தவிர அனைத்து விவசாயிகளும் பயன் பெறுகின்ற வகையில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

விவசாயி சங்க பிரதிநிதிகளோடு கலந்து பேசி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செவ்வனே செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய காலத்தில் விவசாயிகளக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிதியுதவி கிடைக்கவில்லை என்ற குறையையும் அரசு நிவர்த்தி செய்ய வேண்டும்.

மலைப் பகுதிகளில் குடியிருப்புக்கள் அமைகின்ற பொழுது மண் சரிவுகளுக்கு அவை இலக்காகக் கூடியதா என்பதை அறிந்து முன்கூட்டியே அரசு நிர்வாகம் அனுமதி வழங்குகின்ற பொழுது முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

காடுகளையும், மரங்களையும் கண்மூடித்தனமாக அழிப்பதனாலேயே வேர்கள் மூலம் மண் பிடிப்பு இல்லாமல் மண் சரிவு ஏற்படுகிறது.

தற்பொழுது கூட வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகள் பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளன. வரும்முன் காப்போம் என்பதே சொல்லளவில் இல்லாமல் இநத அரசு செயல்படுத்தியிருந்தால் இத்தகைய பேரழிவுகளிலிருந்து அப்பாவி பொது மக்களை காப்பாற்றியிருக்க முடியும்.

தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய அரசில் அமைச்சராக இருக்கும் ராசா இந்தத் தொகுதியில் தான் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு மட்டும் வரும் முன் காப்போம் திட்டத்தை செயல்படுத்தியவர் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அதை செயல்படுத்த வேண்டாமா?.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆங்காங்கே உள்ள கழகத் தோழர்களும், குறிப்பாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கழகத் தோழர்களும் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக சென்று பார்த்து அவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்வதோடு மட்டுமல்லாமல் அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் நியாயமான முறையில் செயல்படவும்,

உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடையவும் லஞ்சம், ஊழலுக்கு இடமில்லாமல் செயல்படவும் கண்காணிக்கும்படியும், குறைகள் இருப்பின் தலைமைக் கழகத்திற்கு தகவல் அளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X