For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயவாடா-இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த 6 குழந்தைகள் பலி

Google Oneindia Tamil News

Incubator
விஜயவாடா: விஜயாடா அரசு மருத்துவமனையில் இன்குபேட்டர் சாதனத்தில் வைக்கப்பட்டிருந்த 6 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வார்டில் அப்போதுதான் பிறந்த குழந்தைகள் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

குறைந்த பிரசவத்தில் பிறந்த சில குழந்தைகள் இன்குபேட்டர் சாதனத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அவற்றில் 6 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

இன்குபேட்டர் சரியாக இயங்காததாலும் ஆக்சிஜன் கருவிகள் செயல்படாததாலும் குழந்தைகள் இறந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து குழந்தைகளின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். டாக்டர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பத்மா என்பவர் கூறுகையில், எனது பேரனை இங்கு வைத்திருந்தோம். எனது பேரன் திடீரென மூச்சுத் திணறலுக்குள்ளானான். இதையடுத்து நான் டாக்டர்களைக் கூப்பிடச் சென்றபோது அவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். வர மறுத்து விட்டனர்.

எனக்கு நீதி வேண்டும். எனது பேரனைப் போல பலரது குழந்தைகள் இன்று பலியாகியுள்ளன. இதற்கு நீதி வேண்டும் என்றார் கோபத்துடன்.

இறந்த குழந்தைகளின் பெற்றோர் கூறும்போது, எங்கள் குழந்தைகள் உடல் நலம் மோசமாக இருப்பதாக டாக்டர்களிடமும், நர்சுகளிடமும் தெரிவித்தபோது அதை கண்டு கொள்ளவே இல்லை. வேண்டுமானால் தனியார் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று அலட்சியமாக கூறினார்கள். கடைசியில் எங்கள் குழந்தைகளை இழந்து விட்டோம் என்று கதறினார்கள்.

ஆனால் டாக்டர்களோ 6 குழந்தைகள் சாவுக்கு இன்குபேட்டர் இயங்காதது காரணம் அல்ல. 3 குழந்தைகள் இயற்கையாக இறந்துள்ளனர். மற்ற குழந்தைகள் சாவு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

குழந்தைகள் இறந்தது பற்றி அறிந்ததும் உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் உமா மகேசுவரராவ், மல்லாடி விஷ்ணு ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களும் டாக்டர்கள் மீது குறை கூறினார்கள்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து அறிக்கை தருமாறு மாநில மனித உரிமை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நாகேந்தர் கூறுகையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த டாக்டர்கள் குழுவை விஜயவாடாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன என்றார்.

இதற்கிடையே, பல மாதங்களுக்கு முன்பே தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான ரூ. 70 லட்சம் மதிப்பிலான சாதனங்களை ஒதுக்கக் கோரி மாநில அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டதாம். ஆனால் அது ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று டாக்டர்கள் தரப்பி்ல குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால் இதை அமைச்சர் நாகேந்தர் மறுக்கிறார். அவர் கூறுகையில், அப்படி ஒரு கோரிக்கை எனக்கு வரவே இல்லை. என்னிடம், ரூ. 3800 கோடிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு உள்ளது. அப்படி இருக்கையில், ரூ. 70 லட்சத்தை நான் ஒதுக்கியிருக்க மாட்டேனா என்கிறார்.

அரசு அலட்சியமோ, டாக்டர்கள் அலட்சியமோ, இப்போது எங்களது குழந்தைகளை இழந்து விட்டோம். இதற்கு அரசும், டாக்டர்களும் பதில் சொல்லியாக வேண்டும் என்கிறார்கள் குழந்தைகள் அநியாயமாக இழந்த பெற்றோர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X