For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை பக்ரீத்- ஜெ., தலைவர்கள் வாழ்த்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி...

தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நாளான பக்ரீத் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனுக்கு இணையாக எதுவுமில்லை என்னும் இறைப்பற்றை உணர்த்தும் நாள் பக்ரீத் திருநாள்! பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள் பக்ரீத் நாள்! தியாகத்தின் உன்ன தத்தை உணர்த்தும் நாள் பக்ரீத் திருநாள்!

தன்னலத்திற்காக பிறரை பலி கொடுக்கும் இவ்வுலகில், தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறை தூதர் இப்ராஹீம் அவர்களின் அர்ப்பணிப்பை தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து, அவரது வழியில் அன்பு, சகோதரத் துவம், ஒற்றுமை ஆகிய வற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல நாம் அனை வரும் பாடுபட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவரும் ஏற்றத்தையும், இன்பத்தையும் மன அமைதி யையும் பெற்று வளமுடன் வாழ மீண்டும் எனது பக்ரீத் நல்வாழ்த்துக்களை உரித் தாக்கிக் கொள்கிறேன்.

காங். தலைவர் தங்கபாலு...

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விடுத்துள்ள செய்தியில்,

இஸ்லாமியப் பெருமக்கள் தாங்கள் இறைவனுக்கு காணிக்கையாக்கிய உணவினை மூன்று பாகங்களாக்கி ஒன்று ஏழை எளியோருக்கும், மற்றொன்று உறவினர்களுக்கும் பகிர்ந்தளித்து மற்றதை தங்கள் குடும்பத்தோடு பங்கிட்டு உண்டு மகிழ்ச்சி அடையும் ஈகைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளில் அண்ணல் நபிகள் நாயகம் உலகுக்கு அருளிய அறநெறிகளுக்கு ஏற்ப மத, இன, சாதி, மொழிகளைக் கடந்து அனைத்து மக்களிடையேயும் நல்லிணக்கம் மேம்பட்டு, வன்முறைகள் ஒழிந்து, நாட்டில் அமைதி, சமாதானம், செழிப்பு, மகிழ்ச்சி பெருகிட அனைவரும் ஒற்றுமை, ஒருமைப்பாட்டு உணர்வோடு உழைப்போம் என்று உறுதியேற்போம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ..

லட்சக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் நிற, இன, மொழி, நாடு என்ற பேதங்கள் இன்றி இறுதிக் கடமையாம் புனித ஹஜ்ஜை நிறைவு செய்யும் நன்னாள் இந்நாள்.

நபி இப்ராஹிம் (ரலி) தம் தள்ளாத வயதில் பிள்ளை இல்லா குறை போக்க தவ மிருந்து நோன்பு நோற்று பெற்ற தம் பச்சிளம் பாலகனை ஏற்றுக்கொண்ட ஈமான் என்ற லட்சியத்திற்காக அறுத்துப் பலியிட முன் வந்த ஈகத்தை நினைவு கூர்ந்து இன்றும் இஸ்லாமியப்பெருமக்கள் தியாக உணர்வுடன் கொண்டாடும் ஈகத்திருநாளே இத்திருநாளாகும்.

இப்பொன்னாளில் சமய நல்லிணக்கம் தழைக்கவும், சமூக ஒற்றுமை நிலைக்கவும் இஸ்லாமும் இனிய தமிழ் நெறியும் வலியுறுத்தும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வினைப் பேணி வளர்க்கவும் பாடுபடுவோம் எனச்சூளுரைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கு இதய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

இதேபோல அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் ஜெய்னுலாப்தீன், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்டத் தலைவர் வீரைகறீம் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கேரளா, கோவை, துபாயில் இன்று கொண்டாட்டம்

இதற்கிடையே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள், கோவை, கேரளா ஆகிய பகுதிகளில் இன்று பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட்டது.

துபாயில், காலை 7 மணிக்கு பள்ளிவாசல்கள் தோறும் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. பல்வேறு நாட்டு முஸ்லீம் பெருமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து குர்பானி கொடுப்பது நடைபெற்றது. ஒட்டகங்கள், ஆடுகள், மாடுகள் ஆகியவை பலியிடப்பட்டன.

இதேபோல கேரளாவிலும், கோவை மாவட்டத்திலும் இன்று பக்ரீத் கொண்டாடப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X