For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கான்டிராக்டில் 1500 நீதிபதிகள் நியமனம்!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: கான்டிராக்ட் அடிப்படையில் மாதம் ரூ. 1 லட்சம் சம்பளத்திற்கு, 1500 நீதிபதிகளை நியமிக்க மத்திய அமைச்சவரை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, விசாரணை நீதிமன்றங்களில், ஒப்பந்த அடிப்படையில் 1,500 நீதிபதிகளை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவர்களுக்கு ரூ.1 லட்சம் மாத சம்பளம் அளிக்கப்படும். இவர்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்ற வேண்டும்.

இந்த நீதிபதிகள், ஓராண்டில் 2,500 வழக்குகளை விசாரித்து தீர்வு காண வேண்டும். இது சராசரியாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஓராண்டில் விசாரித்து தீர்வு காணும் வழக்குகளின் எண்ணிக்கை ஆகும். இந்த நீதிபதிகள், 2 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணியாற்றுவார்கள்.

இதுதவிர, தேசிய வழக்கு நிலுவை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது, கோர்ட்டுளில் தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும், அதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யும்.

இதேபோல, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி, 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கத்தக்க அனைத்து குற்றங்களிலும், ஒருவரை கைது செய்வதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி எழுத்துமூலம் எழுதித்தர வேண்டும்.

தேசிய பசுமை தீர்ப்பாயம்...

இதேபோல, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேசமயம், கல்வி தீர்ப்பாயம் குறித்த திட்டத்தை அமைச்சர்களைக் கொண்ட குழுவின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கவும் அமைச்சரவை முடிவு செய்தது.

கடந்த ஜூலை மாதம் தேசிய பசுமை தீர்ப்பாய சட்ட முன்வடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பின்னர் இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தில் பல்வேறு திருத்தங்களை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது.

மொத்தம் சமர்ப்பிக்கப்பட்ட 12 திருத்தங்களில், 10 திருத்தங்களை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆப்டிகல் கேபிள் பணி - சீனாவுக்கு டெண்டர் கிடையாது..

இந்த நிலையில், ரூ. 10,000 கோடி மதிப்பீட்டில், பாதுகாப்புப் படையினருக்கான ஆப்டிகர் பைபர் கேபிள் அமைக்கும் பணியில் சீன நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இத் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கும், பாதுகாப்புத் துறைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்தப் பணிகளை முடித்த பின்னர் பாதுகாப்புத் துறை தன் வசம் வைத்துள்ள 45 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை (3 ஜி சேவையை வழங்குவதற்குத் தேவையான 25 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை உள்ளடங்கியது) அடுத்த 3 ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையிடம் ஒப்படைக்கும்.

தற்போது தொலைத் தொடர்புத் துறையின் பல்வேறு சேவைகளுக்குத் தேவையான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் 40 சதவீதத்தை பாதுகாப்புத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பதிலாக நவீன முறையிலான ஆப்டிகல் பைபர் கேபிளுக்கு பாதுகாப்புப் படைகள் மாறவுள்ளன. ஏற்கனவே இதுதொடர்பான பூர்வாங்கப் பணிகளை பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். முடித்துள்ளன.

இந்த நிலையில், நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்குப் பிராந்தியங்களில் எல்லைப் புறப் பகுதிகளில் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளில், சீன நிறுவனம் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இப் பணியில் சீனாவைச் சேர்ந்த இசட்.டி.இ, ஹுவே ஆகியவற்றை ஈடுபடுத்த பி.எஸ்.என்.எல். திட்டமிட்டிருந்தது. தற்போது இவர்களைக் கைவிட பி.எஸ்.என்.எல் முடிவு செய்துள்ளது.

எந்த சீன நிறுவனத்தையும் இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று பாதுகாப்புத்துறை கண்டிப்பாக கூறியிருப்பதாக தொலைத் தொடர்புத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகம், நாட்டில் உள்ள முக்கியமான 5000 அரசு அலுவலகங்களை ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. சுனாமி போன்ற இயற்கைச் சீற்றத்தின்போது அரசின் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக இந்த
ஏற்பாடு செய்யப்படுகிறது.

பாதுகாப்புத்துறைக்கான ஆப்டிகல் கேபிள் பதிக்கும் பணி தொடர்பான டெண்டரை விரைவில் பி.எஸ்.என்.எல். அறிவிக்கவுள்ளது. அதற்கு முன்பு இந்தப் பணிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்.

ஏற்கனவே இந்திய விமானப்படைக்காக ரூ. 1,077 கோடி மதிப்பில் ஆப்டிகல் கேபிள் பதிக்கும் பணியை பி.எஸ்.என்.எல்லும், எம்.டி.என்.எல்லும் இணைந்து மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான செலவை தொலைத் தொடர்புத் துறை வழங்கும்.

இந்தப் பணியை முடித்தவுடன் வி்மானப்படை தன் வசம் வைத்துள்ள 42.5 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை தொலைத் தொடர்புத் துறையிடம் ஒப்படைக்கும். அதேபோல ராணுவம் மற்றும் கடற்படைக்குத் தேவையான ஆப்டிகல் கேபிள் பதிக்கும் பணியை அடுத்த 37 மாதங்களில் பி.எஸ்.என்.எல்.செய்து கொடுக்கும்.

இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 40,000 கிலோமீட்டர் தொலைவுக்கு, கேபிள்கள் பதிக்கப்படும். இதன் மூலம், 219 ராணுவ மையங்கள், 33 கடற்படை மையங்கள், 162 விமானப்பட மையங்கள் இணைக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X