ஜெவைப் பற்றி எம்.ஜி.ஆர். சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: ஜெயலலிதாவின் மனிதாபிமானம் பற்றி பேசவேண்டுமென்றால் அவரது ஆட்சிக் காலத்தில் "எஸ்மா'', "டெஸ்மா'' சட்டங்களால் பாதிக்கப்பட்ட அரசு அலுவலர்களையும், ஆசிரியர்களையும் கேட்டாலே கதை கதையாகச் சொல்வார்களே? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: தணிக்கைக் குழு ஆடிட்டர் ஜெனரல் அளித்த அறிக்கையில் வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 121 கோடி ரூபாயை திமுக அரசு இலவசத் திட்டங்களுக்காக செலவழித்துவிட்டது என்று சொல்லியிருக்கிறாரே?.

கருணாநிதி: நல்ல வேளையாக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 121 கோடி ரூபாயை செலவழிக்காமல் விட்டுவிட்டோம் என்றோ, அந்தத் தொகையை தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்றோ கூறவில்லை.

இந்த அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இலவசத் திட்டங்கள் கூடாது என்பது ஒரு சில பொருளாதார வல்லுநர்களின் கருத்து.

கடன் வாங்கியாவது நலத் திட்டங்கள்:

ஆனால் பல பொருளாதார வல்லுநர்கள் மக்கள் பெருமளவிற்கு வளர்ச்சி அடைகின்ற வரையில் அவர்களுடைய சமூகப் பாதுகாப்பிற்காக இலவசத் திட்டங்கள் அவசியமானவை என்றுதான் கூறுகிறார்கள். ஒரு அரசு கடன் வாங்கக் கூடாது என்பது ஒரு சிலரின் கருத்து. கடன் வாங்கியாவது நலத் திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பது பலரின் கருத்து.

அதைத்தான் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரவியல் துறை பேராசிரியராக உள்ள டாக்டர் ஆர்.சீனிவாசன் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில்,

கடன் என்பது பொருளாதாரத்தில் ஒரு தத்துவம்:

நிதிப் பற்றாக்குறை என்பது மாநிலத்தின் உண்மையான பொருளாதார ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்காது என்றும், இது ஒரு தொழில் மந்தநிலை ஆண்டு என்று அனைவருக்கும் தெரியும். எனவே இந்த ஆண்டின் பொருளாதார அளவுகளுடன் கடந்த ஆண்டு பொருளாதார அளவுகளை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்றும், இதுபோன்ற மந்த நிலை ஆண்டுகளில் மாநிலத்தின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கடன்கள் பெறுவது இயற்கையாகவே அதிகமாகத்தான் இருக்கும் என்றும், கடன் என்பதே மோசமானது அல்ல என்று பொருளாதாரத்தில் ஒரு தத்துவம் உள்ளது என்றும், நிதிப்பற்றாக் குறை ஏற்படும்போது அதனை சமன் செய்வதற்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் பொருளாதாரரீதியாக இது தற்காலிக கட்டம்தான் என்றும் சொல்லியிருக்கிறார்.

தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் எந்த இடத்திலும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்ற திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டது என்று சொல்லவில்லை. மாறாக இலவசத் திட்டங்களுக்காக தனியே ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்ட நிதி, ஆறு மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டக் கணக்கிலே சேர்க்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்லியிருக்கிறார்.

முரண்பாடானதோ, தவறானதோ அல்ல:

இது ஒரு முரண்பாடானதோ தவறானதோ அல்ல. இதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு சில ஏடுகள் இந்த அரசு ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படவில்லை என்றும், வேறு திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டு விட்டது என்றும் பொருள் கொள்ளும்படியாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் நாகரீகம்:

கேள்வி: ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தன்னை அவமானப்படுத்தி விட்டதாக சொல்லியிருக்கிறாரே?.

கருணாநிதி: அவர் மற்றவர்களை அவமானப்படுத்தாமல் இருந்தால் போதாதா?. அவையின் முன்னவர் பேராசிரியரைப் பற்றி இந்த நாடே நன்கறியும். அவரைப் பற்றி தனது அறிக்கையில் ஜெயலலிதா, அவையின் மாண்பைப் பற்றியும் மரபைப் பற்றியும் வாய் கிழியப் பேசுபவர் என்றும், 88 வயது முதியவர் என்றும், அவர் அவையில் பேசியது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல உள்ளது என்றும் சொல்லியிருக்கிறார் என்றால் அவருடைய அரசியல் நாகரிகத்தை இந்த நாட்டு மக்களே நன்கு உணர்ந்து கொள்வார்கள்.

ஜெயலலிதா ஏன் வாய் திறக்கவில்லை?:

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தன் பெயரில் திரைப்பட நகருக்கு பெயர் வைத்துக் கொள்ளவில்லை என்றார். அவர் தனது பெயரை திரைப்பட நகருக்கு வைத்தது மாத்திரமல்லாமல் அதன் தொடக்க விழாவிலே என்றைக்கு கலந்து கொண்டார் என்பதையும், அந்த விழாவிற்கு திட்டமிட்டதற்கு மாறாக கூடுதலாக எத்தனை லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது என்பதையும் அவைக் குறிப்புகளின் ஆதாரங்களோடு நான் எழுதியிருக்கிறேன். அதற்கு ஏன் அவர் தன்னுடைய நீண்ட அறிக்கையில் பதில் சொல்லவில்லை?.

அதுபோலவே பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக தன்னையே நியமிக்கும் ஆணையே தன் ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை என்று பேரவையில் ஜெயலலிதா சொல்லியிருந்தார். அதற்கான சட்ட முன்வடிவு ஜெயலலிதா ஆட்சியில் எந்தத் தேதியில் நிறைவேற்றப்பட்டது என்பதை நான் புள்ளி விவரத்தோடு சொல்லியிருந்தேன். அதற்கு ஏன் அவர் தனது நீண்ட அறிக்கையில் பதில் சொல்லவில்லை?.

பேரவையில் அவர் மூன்று கேள்விகளை எழுப்பியதற்கு நான் பதில் அளித்திருந்தேன். இந்த மூன்று கேள்விகளுக்கும் அளித்த பதில் குறித்து அவர் ஏன் வாய் திறக்கவில்லை?.

கேள்வி: பேரவையில் இவர் வணக்கம் செலுத்தியபோது, பேரவைத் தலைவர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று ஜெயலலிதா பேரவைத் தலைவரையே குற்றஞ்சாட்டி, அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?.

எந்தக் காலத்திலும் முன் கூட்டி வரமாட்டார்:
கருணாநிதி: உண்மைக்கு மாறான விதி மீறிய தகவல்களை அவையிலே கூறக்கூடாது. ஆனால் அவர் அவையிலே பேசியதெல்லாமே உண்மைக்கு மாறான தகவல்கள்தானே!. பேரவைத் தலைவர் வணக்கம் தெரிவிப்பது என்பதில்- பேரவை தொடங்கும்போது பேரவைத் தலைவர் உள்ளே நுழைந்ததும் பேரவை உறுப்பினர்கள் எல்லாம் எழுந்திருந்து பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பதும், பேரவைத் தலைவரும் அனைத்து உறுப்பினர்களையும் கை கூப்பி வணக்கம் தெரிவிப்பதும் தொடர்ந்து நடைமுறையிலே இருந்து வருகின்றது.

ஆனால் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவர் அவை தொடங்கும் போது எந்தக் காலத்திலும் ஏன் அவர்களது ஆட்சிக் காலத்திலேயே கூட முன் கூட்டி அவைக்கு வரமாட்டார். அதற்குக் காரணம் முன்கூட்டி அவைக்கு வந்தால், பேரவைத் தலைவர் வரும்போது தம்பி காளிமுத்து போன்றவர்களுக்காக அவர் எழுந்து நிற்க வேண்டும் என்பதைத் தவிர்ப்பதற்காகத்தான்!.

அவையிலே உள்ள பல உறுப்பினர்கள் அவை தொடங்கிய பிறகு அவைக்கு வருவதும், நடுநடுவே எழுந்து சென்று திரும்புவதும் உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் அவைத் தலைவர் இருக்கையை நோக்கி வணங்கி விட்டு அமருவார்கள். ஆனால் அதையெல்லாம் ஒவ்வொரு முறையும் பேரவைத் தலைவர் கவனித்துக் கொண்டே இருந்து ஒவ்வொரு வருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருக்க முடியுமா? அந்த வகையில்தான் எதிர்க்கட்சித் தலைவர் வந்த போதும் பேரவைத் தலைவர் வணக்கம் தெரிவிக்காமல் இருந்திருக்கக் கூடும்.

ஆனால் அதைக்கூட ஜெயலலிதா தனது அறிக்கையில் "கருணாநிதியைக் கண்டு பயந்து அஞ்சி நடுங்கி பேரவைத் தலைவர் இருக்கிறார்'' என்று சொன்னதோடு, இப்படிப்பட்ட பேரவைத் தலைவர் அவையை நடுநிலையோடு நடத்துவார் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை என்றும் அவைத் தலைவர் மீது பழி சொல்லியிருக்கிறார்.

'இவாள் தலையிலே அவாள்':

கேள்வி: ஆழ்வார்குறிச்சி அருகில் கொலை செய்யப்பட்ட காவல் துறை அதிகாரி வெற்றிவேலை காப்பாற்ற அமைச்சர்கள் முன்வரவில்லை என்றும், அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றும் ஜெயலலிதா பேசிய போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மகாமகம் பற்றிப் பேசியது எவ்வாறு பொருத்தம் என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறாரே?.

கருணாநிதி: காவல் துறை அதிகாரி வெற்றிவேல் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த அமைச்சர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. உடனடியாக அவருக்கு முதல் உதவி செய்து ஒரு காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதை அப்படியே மறைத்து ஜெயலலிதா அவையிலே பேசியதால், மகாமகக் குளத்திலே ஜெயலலிதாவும் சசிகலாவும் குளிப்பதாகச் சொல்லிக் கொண்டு, சங்கராச் சாரியார் சொல்லியதுபோல- இவாள் தலையிலே அவாள் நீரை மொண்டு ஊற்ற- அவாள் தலையிலே இவாள் நீரை மொண்டு ஊற்ற- இதை மக்கள் எல்லாம் போட்டிப் போட்டுக்கொண்டு வேடிக்கை பார்க்க வந்த போதுதான் நூற்றுக்கணக்கானவர்கள் நெரிசலிலே சிக்கி இறக்க நேரிட்டது. இதைத் தான் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுருக்கமாக அவையிலே தெரிவித்தார்.

அமைச்சரைப் பற்றி ஆதாரமில்லாமல் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியதால், அவர் திருப்பி கேட்க வேண்டிய நிலைக்கு இவரால் ஆளாக்கப்பட்டாரே தவிர, அவராக அம்மையார் மீது தானாக முன்வந்து பழைய மகாமகம் நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டவில்லை.

ஆனால் அம்மையார் திமுக ஆட்சியைப் பற்றியும் அமைச்சர்களைப் பற்றியும் எதை வேண்டுமானாலும் கூறுவார், அதற்கு மற்றவர்கள் பதில் கூறக் கூடாது என்று நினைக்கிறார் போலும்!.

அம்மையாரை எழுப்ப கூட இயலவில்லை:

கேள்வி: ஜெயலலிதா தனது அறிக்கையில் அவருக்கு மனிதாபிமானம் நிறையவே உண்டு என்றும், சுனாமி பாதிப்பின் போது அவரே நேரில் சென்று ஆறுதல் கூறியதாகவும், ஆனால் நீங்கள் மருத்துவமனையில் ஓடி ஒளிந்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறாரே?.

கருணாநிதி: ஜெயலலிதாவின் கண்ணியமான பேச்சுக்கு இது மற்றுமோர் உதாரணம். விடியற்காலையில் சுனாமி பேரலை சென்னை மாநகருக்குள் நுழைந்தபோது அந்தத் தகவலையே அம்மையாரிடம் எழுப்பி சொல்ல இயலவில்லை என்றும் காலை 10 மணிக்கு மேல் அம்மையார் தூக்கம் கலைந்து எழுந்த பிறகு அந்தச் செய்தி சொல்லப்பட்டது என்றும் அந்த நேரத்திலேயே பேசப்பட்டதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று அவர் நினைக்கிறார் போலும்!.

சுனாமி பாதிப்பு ஏற்பட்டவுடன் நான் அதற்காக மருத்துவமனையில் ஓடி ஒளிந்து கொண்டேன் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

நான் மருத்துவமனைக்கு சென்றபோது என்னைக் கவனித்த மருத்துவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதற்கான மருத்துவத் துறை ஆதாரங்கள் எல்லாம் இருக்கின்றன. மருத்துவமனையிலே இருந்த என்னைப் பார்க்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியாகாந்தி அவர்களே வந்தார்கள். சுனாமி நிவாரண நிதிக்காக மருத்துவமனையிலிருந்தவாறே கழகத்தின் சார்பில் சோனியா காந்தி அம்மையாரிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினேன்.

கழகத்தின் சார்பில் தம்பி ஸ்டாலினும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் மற்றும் கழக முன்னணியினரும் நிவாரணப் பணிகளிலே நேரடியாக ஈடுபட்டார்கள். திரைப்படம் எழுதியதற்காக எனக்கு கிடைத்த 21 லட்சம் ரூபாய் நிதியை தம்பி ஸ்டாலினிடம் கொடுத்து அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து நேரடியாகவே கொடுக்கச் செய்தேன்.

கதை கதையாகச் சொல்வார்களே?:

ஆனால் இவ்வளவிற்கும் பிறகு நான் சுனாமி நேரத்தில் மருத்துவமனையிலே ஓடி ஒளிந்து கொண்டேன் என்று ஜெயலலிதா கூறுகிறார் என்றால் அவருடைய மனிதாபிமானம் எப்படிப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சுனாமி நிவாரண பணிகளை மேற்கொள்ள ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த வரை மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட ஜெயலலிதா கூட்டவில்லை என்பதும்- அடுத்து, திமுக ஆட்சி வந்த பிறகுதான் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டம் என் தலைமையிலே சுனாமி நிவாரணப் பணிகளைப் பற்றி விவாதிப்பதற்காகவே கூட்டப்பட்டது என்பதும்தான் உண்மை.

ஜெயலலிதாவின் மனிதாபிமானம் பற்றி பேசவேண்டுமென்றால் அவரது ஆட்சிக் காலத்தில் "எஸ்மா'', "டெஸ்மா'' சட்டங்களால் பாதிக்கப்பட்ட அரசு அலுவலர்களையும், ஆசிரியர்களையும் கேட்டாலே கதை கதையாகச் சொல்வார்களே?.

கேள்வி: ஜெயலலிதா தனது அறிக்கையில்- அவர் பேரவைக்கு வராவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்திற்கு செல்லவில்லை, கடமையை ஆற்றவில்லை என்று ஏடுகள் எழுதுவதாக அவர்களையும் தாக்கி சொல்லியிருக்கிறாரே?.

கருணாநிதி: பத்திரிகைகள் அதைக் குறையாகச் சொல்லவில்லை. ஆட்சியினரைக் குறை கூற வேண்டுமென்பதற்காக தான் பேசுவதற்கு சில நிமிடங்கள் முன்பு அவைக்கு வந்து, தான் எழுதிக் கொண்டு வந்ததை அவசர அவசரமாகப் படித்துவிட்டு, அதற்கு ஆளுங்கட்சி தரப்பிலிருந்து என்ன பதில் சொல்கிறார்கள் என்பதைக் கூடக் கேட்க பொறுமையில்லாமல் அவையிலிருந்து செல்வதைத்தான் செய்தியாளர்கள் அது நாகரிகக் குறைவு என்று கருதுகிறார்கள்.

கேள்வி: ஜெயலலிதா இறுதியிலே பாடிய "என்னதான் நடக்கும், நடக்கட்டுமே'' என்ற பாடலை நீங்கள் திரித்துக் கூறிவிட்டதாகவும், எம்.ஜி.ஆர். அவருடைய அரசியல் ஆசான் என்றும் தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே?.

ஜெ பற்றி எம்.ஜி.ஆர். சொன்னது இது தான்:

கருணாநிதி: ஜெயலலிதாவின் அரசியல் ஆசான், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஜெயலலிதாவைப் பற்றி என்ன சொன்னார் என்பதை 1.1.1989 தேதியிட்ட "மக்கள் குரல்'' இதழில் அதன் ஆசிரியர் டி.ஆர். ராமசாமி எழுதியுள்ள உண்மை என்ன தெரியுமா?.

அது; "எம்.ஜி.ஆர். இறப்பதற்கு ஒரு வாரம் முன்னால் டிசம்பர் 18ம் தேதி 1987ல் அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பி ஜெயலலிதா பற்றி தாம் பேசப்போவதை என்னிடம் சொன்னார். எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னது இது தான்- எல்லாமே அவருடைய சொந்த வார்த்தைகள்தான்.

சூதும் வாதும் வஞ்சகமும்:

''எனக்கு இப்போது ரொம்பக் கவலையாக இருக்கிறது. யாரையும் நம்ப முடியவில்லை. இந்த அம்முவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எதையோ நினைத்து இந்த அம்முவை அரசியலில் ஈடுபடுத்தினேன். பிள்ளையார் பிடிக்கப்போய் அது குரங்காய் முடிந்துவிட்டது. அம்முவுக்கு சினிமா சான்ஸ் போய்விட்டது. அவள் சும்மாயிருந்தால் சாத்தானைப் போல எதையாவது செய்வாள். பாவம், ஏதோ பழகி விட்டாளே, எதிலாவது மனதை ஈடுபடுத்தினால் உபத்திரவம் குறையும் என்று அவளை கட்சி மேடைக் காட்சிப் பொருளாக அறிமுகப்படுத்தினேன். சூதும் வாதும் வஞ்சகமும் சூழ்ச்சியும் கற்ற இந்த அம்மு எனக்கே உலை வைக்கிறாள் இப்போது.

கரன்சிகளை அனுப்பி செட்டில்மென்ட்:

சும்மா ஓடுகிற ஓணானை முகத்திலே நுழைய விட்ட கதையாக என் விஷயம் போய்விட்டது. இன்று (டிசம்பர் 18, 1987) ஒரு காரியத்தை செய்து விட்டேன். மூன்று இரும்புப் பெட்டிகளில் கரன்சிகளை நிரப்பி, அவளுக்கு அனுப்பி செட்டில்மென்ட் செய்து விட்டேன். கூட இருந்தவர்கள் இப்படிச் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். நான் கேட்கவில்லை. எப்படியோ இது ஒழிந்து போனால் போதும்! எங்கேயாவது பெங்களூருக்கோ, ஹைதராபாத்திற்கோ போய் இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பிழைத்துப் போகட்டும்.

அவள் அரசியலில் இருந்தால் என் பெயர் கெட்டு விடும். பரிதாபப்பட்டு நான் செய்த காரியம் தமிழ்நாட்டின் குடியைக் கெடுத்துவிடும். இதை நான் புரிந்துகொண்டு விட்டேன். அவளோடு நான் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பே கொள்ளக் கூடாது என்று அவளுக்கு இருந்த கட்சி அலுவலக டெலிபோனை கட் செய்து விட்டேன். கட்சியினர், எம்.எல்.ஏக்கள்., எம்.பி.க்கள் யாரும் அவளோடு தொடர்பு கொள்ளக்கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டேன்.

இந்த அம்மு அபாயகரமானவள். யாரையும் அவள் தனக்காக பயன்படுத்துவாள். எதையும் செய்யத் தயங்க மாட்டாள். மிகவும் கெட்டவள். நீ கூட அவள் இருக்கும் திக்குக்குக் கூடப் போகாதே. ஆபத்தில் சிக்காதே. இதையெல்லாம் விரைவில் அறிக்கை விட்டுச் சொல்லிவிடப் போகிறேன். நானே சொல்லும் வரை நான் சொன்னதை ரகசியமாக வைத்திரு, என்ன செய்வாயா?'' இப்படி மிகவும் கஷ்டப்பட்டு எம்.ஜி.ஆர். பேசினார், விஷயத்தைச் சொன்னார்.

சத்தியம். சத்தியத்தைத் தவிர வேறு அல்ல:

இதுவரை அவர் நேரிடையாக என்னிடம் சொன்னதை நான் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், இப்போது இந்தப் பெண் தன்னை வாரிசாக, எம்.ஜி.ஆரே சொல்லிவிட்டதாகக் காசு கொடுத்து விளம்பரம் செய்ததால், எம்.ஜி.ஆரை மதித்து, அவருடைய புகழைக் காப்பாற்ற நான் உண்மையைச் சொல்ல நேரிட்டுள்ளது. நான் எழுதியிருப்பது சத்தியம். சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் அல்ல'' என்று கூறியுள்ளார்.

எனவே நான் சில நாட்களுக்கு முன்பு எழுதியவாறு, குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு, தானாகவே தாழ்ந்து விடும் என்று அய்யன் வள்ளுவர் எழுதிய குறளைப் படிக்காதவர்கள், படித்திருந்தாலும் அதன்படி நடந்திட முனையாதவர்கள்- நடந்திட மறுத்தவர்கள்- நடத்திய அரசு முடிவுற்று; அடுத்து வந்த நமது அரசு; "நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்'' என்ற குறளைத் தன் கொள்கை முழக்கமாகவே கொண்டு எச்சரிக்கையாக நடந்து கொள்வதின் காரணமாகத்தான் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு திருச்செந்தூரும், வந்தவாசியும் அண்மைக்காலச் சான்றுகளாக நிற்கின்றன.

வழங்கப்படும் வெற்றிகளைத் தொடர்ந்து குறளாசான் கூறியவாறு; "குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு'' என்பதை மறவாமல் ஆட்சிப் பணியை நடத்துவோம் என்பதற்கான உறுதியை எடுத்துக்கொள்ள வந்தவாசியும், திருச்செந்தூரும் வழங்கிய இரு வெற்றிகளும் பயன்படுமென்று உறுதி கூறுவோம் - அதனை உண்மையாக்குவோம்!.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+