பாக். மாஜி விமானப்படைத் தளபதியை இந்திய ஹீரோவாக்கிய மத்திய அரசு!

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆங்கில பத்திரிகைகளில் முழுபக்க கலர் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்க முத்திரையுடன் வெளியிடப்பட்ட இந்த விளம்பரத்தில் பெண் சிசுக்கொலை தடுப்பு பற்றிய வாசகங்களுடன், கபில்தேவ், ஷேவாக், அம்ஜத் அலிகான், சோனியா, மன்மோகன்சிங் போன்றவர்களின் படம் இடம் பெற்றுள்ளது.
இவற்றின் கூடவே, பளிச்சென்று பாகிஸ்தானின் முன்னாள் விமானப்படை தளபதி தண்வீர் அகமதுவின் படமும் இடம்பெற்றுள்ளது.
'தாய் என்ற பெண் இல்லை என்றால் இதுபோன்ற தேசிய ஹீரோக்கள் சாத்தியமா' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள இந்த விளம்பரத்தில் இந்திய சாதனையாளர்களுக்கு இணையாக பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியையும் சேர்த்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்ததும் உடனடியாக பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், இந்த விளம்பரத்தை அங்கீகரித்தவர் யார், வேண்டுமென்றே இந்தப் படத்தை நுழைத்தார்களா என்பது குறித்து உடனடி விசாரணையும் துவங்கியுள்ளது.
'இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கூட்டி நடவடிக்கை எடுப்பதில் நடைமுறை சிக்கல் இருந்தாலும், இவ்விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை துவக்குமாறு உத்தரவிடப் பட்டுள்ளது' என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் கிருஷ்ணா திராத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications