For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட்டின் நோக்கம் நன்றாகத்தான் உள்ளது - சாராம்சம்தான் குறைவு: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டின் நோக்கம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் சாராம்சம்தான் குறைவாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு பட்ஜெட்டினை தயார் செய்யக்கூடிய பெரும் வாய்ப்பு நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இருந்தது.

ஆனால், அவரோ நிதானமான, எந்தவொரு ஆச்சரியத்தையும் அளிக்காத ஒரு பட்ஜெட்டினை தாக்கல் செய்திருக்கிறார். நல்ல வாய்ப்பினை பிரணாப் முகர்ஜி நழுவ விட்டிருக்கிறார்.

இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு விவசாயத்துறையில் குறைந்த அளவிலான நிதி முதலீடுகள் செய்ய திட்டமிடப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. விவசாயிகளுக்கு நேரடியாக மானிய உதவி அளிக்கவிருப்பது நல்ல நடவடிக்கை. ஆனால், உரத்துக்கு மானிய உதவி குறைத்திருப்பதன் மூலம், அந்த நடவடிக்கை அடிபட்டு விட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் விதமாக, விவசாயத்தை விட தொழில் துறைக்கே பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பங்குச்சந்தை உயர்வடைந்ததில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

திருப்பூரில் மாசு பிரச்சினையை தீர்ப்பதற்காக ரூ.200 கோடி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறேன். ஆனால், இதேபோல், நாட்டின் பல பகுதிகளை வறண்ட நிலமாக மாற்றிய தோல் தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் இடங்களுக்கும் இதுபோல் நிதி ஒதுக்கீடு அளித்திருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும்.

அ.தி.மு.க. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த, நடுத்தர மக்களுக்கு வருமான வரி சலுகை அளிக்கும் நேரடி வரிகள் தொடர்பான அம்சத்தைப் பார்த்தே, இந்த பட்ஜெட்டில் அதே போன்ற சலுகை வழங்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.

தனிநபர்களுக்கு ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் வரை வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.1.6 லட்சம் என்ற பழைய உச்சவரம்புடனே நிதி அமைச்சர் நிறுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், முதல் உச்சவரம்பு கட்டத்தை ரூ.5 லட்சம் வரை என அதிகரித்திருப்பது, நடுத்தர வர்க்கத்தினரின் சுமையை குறைப்பதாக உள்ளது.

பட்ஜெட் உரையின்போது விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டியதை பற்றியே மத்திய அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிகரித்திருப்பதன் மூலம், விலைவாசி அதிகரிப்பதற்கான விசையை அவர் தூண்டிவிட்டிருக்கிறார்.

இதுபோல், விலைவாசி அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக விளங்கக்கூடிய ஆன்லைன் மூலமான உணவுப் பொருள்கள் முன்பேர வர்த்தகம், கள்ளச்சந்தை, பதுக்கல் போன்றவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த வித அறிவிப்பும் இல்லை.

பயங்கரவாத செயல்களுக்கு எதிரான கட்டமைப்பினை மேம்படுத்துவதுதான் நாட்டின் இப்போதைய தலையாய தேவையாகும். ஆனால், அதனை மேம்படுத்துவதற்கு பட்ஜெட்டில் சிறிதளவு வழிவகைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதுபோல், வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு சட்டவிரோதமாகவும், தீவிரவாத செயல்களுக்காகவும் வரும் அதிகப்படியான நிதியை கட்டுப்படுத்துவதற்கும், வெளிநாடுகளில் இந்திய செல்வந்தவர்கள் சேமித்து வைத்திருக்கும் பெருமளவிலான கறுப்பு பணத்தையும் வெளிக்கொண்டு வருவதற்கு உண்டான நடவடிக்கைகள் பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவை சுற்றிலும் உள்ள நாடுகளின் எல்லைப்பகுதி அனைத்துமே பதற்றமாக இருப்பதால், பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்திருப்பதன் காரணமாக நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்து சீரான முறையில் இயங்கும். ஆனால், பத்திரிகைகளில் அதிக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வரும் நதிகள் இணைப்பு பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படாமல் மவுனம் காக்கப்பட்டுள்ளது. முக்கியமான பிரச்சினைகளில் இந்த அரசு அமைதி காப்பதை விரும்புவதை இது காட்டுவதாகவே உள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட், ஸ்திரமானதாக உள்ளது. ஆனால் சிறப்பானதாக அமையவில்லை. நோக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. சாராம்சம்தான் குறைவாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கவனமாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் - தங்கபாலு

மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயம், கல்வி, தொழில், கிராமப்புற நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கான திட்டங்களும், நிதி ஆதாரங்களும் மிகவும் கவனத்தோடு ஆய்ந்தறிந்து நிறைவாக அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் நகர தொழில் வளர்ச்சிக்கு 200 கோடி ஒதுக்கீடு பாராட்டத்தக்கதாகும்.

மேலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மற்றும் சிறுபான்மையின மக்களும், விவசாயிகள், நெசவாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், முதியோர் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படவும், அவர்களது வாழ்வு மேம்பாடடையவும் பட்ஜெட்டில் வழிவகுத்துள்ள மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அடித்தட்டு மக்கள் புறக்கணிப்பு - ராமதாஸ்

தொழிலதிபர்கள், வசதி படைத்தவர்கள் மீது அக்கறை உள்ளவர், அடித்தட்டு மக்கள் மீது அதிகம் கவலைப்படாதவர் என்று கூறப்படுவதை மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி பட்ஜெட் மூலம் நிரூபித்துள்ளார். உணவுப் பொருட்களின் விலையை குறைத்திடவும், வேளாண் உற்பத்தி வீழ்ச்சியை தடுத்திடவும் எத்தகைய நடவடிக்கையும் அறிவிக்கப்படவில்லை.

பெட்ரோல், டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும்.

வரி செலுத்த வசதி உள்ளவர்களை பற்றி அதிகம் சிந்தித்து செயல்பட்டிருக்கிறார். வரி செலுத்த வசதி இல்லாத சாமானிய மக்களை அவர் மறந்துவிட்டிருக்கிறார். பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது, பொன் முட்டையிடும் வாத்தை கொல்வதற்கு ஒப்பானது. தங்கம் வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தியிருப்பது சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கும். விவசாய கடன் உயர்த்தப்படும், விவசாய கடன் ரத்து நீட்டிப்பு, 2 சதவீதம் வட்டி மானியம் போன்றவை வரவேற்கக் கூடியது. மொத்தத்தில் ஏமாற்றமும், அதிருப்தியும் அளிக்கும் பட்ஜெட்.

மிகுந்த ஏமாற்றம் - விஜயகாந்த்

மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. திருப்பூர் கழிவு நீர் சுத்திகரிப்புக்காக ரூ.200 கோடி ஒதுக்கியிருப்பது போன்ற ஒரு சில வரவேற்கதக்க அம்சங்கள் உள்ளன.

பெட்ரோலிய பொருட்களுக்கு வரியை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. பிற்பட்ட பகுதிகளுக்காக ரூ.7300 கோடி ஒதுக்கியிருந்தும் தமிழ்நாட்டில் உள்ள பிற்பட்ட மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை புறக்கணித்தது ஏன் என்று தெரியவில்லை.

மும்பை - டெல்லிக்கு சிறப்பு தொழில் பாதை அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், நீண்ட நாள் கோரிக்கையான சென்னை - பெங்களூர் இடையே இந்த சிறப்பு தொழில் பாதைத் திட்டம் அறிவிக்கப்படாதது வருந்தத்தக்கதாகும். ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆக தான் இந்த பட்ஜெட் வழிவகுக்கிறது.

விலைவாசி உயர வழி வகுக்கும் - வைகோ

விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க திட்டவட்டமான அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. ஊக வணிகம், இணையதள வணிகம் மற்றும் சேவை வரி ஆகியவற்றை ரத்து செய்யாமல், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி உயர்வினால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து மேலும் விலைவாசி உயரவே வழிவகுக்கும்.

வேளாண்மைத்துறை வளர்ச்சிக்குத் தேவையான ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. திருப்பூர் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு போன்ற சிலவற்றைத் தவிர மத்திய அரசின் பட்ஜெட்டில், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இல்லை.

மக்களுக்கு புதிய சுமை- சிபிஎம் செயலாளர் ராமகிருஷ்ணன்

மத்திய அரசின் பட்ஜெட் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எந்தவிதத் தீர்வும் தராதது மட்டுமல்லாமல், அவர்கள் மீது புதிய சுமைகளை சுமத்துவதாக அமைந்துள்ளது.

பொதுத்துறை பங்கு விற்பனை கடந்த ஆண்டை விட 10 ஆயிரம் கோடி அதிகமாக, 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

இது தனியார் மயமாக்கும் நிலைமைக்கே இட்டுச் செல்லும். தனிநபர் வருமான வரி விதிப்பு விகிதத்தில் செய்யப்பட்டிருக்கிற மாற்றங்கள் கண்துடைப்பாகவே இருப்பதால் நடுத்தர வர்க்க ஊழியர்களின் வரி செலுத்தும் தொகை கூடுதலாகவே இருக்கும். திருப்பூரில் தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில், மாசு கட்டுப்பாட்டுக்கு உதவி என்ற வகையில் இந்த ஓராண்டுக்கு மட்டும் ரூ.200 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது யானைப்பசிக்கு சோளப்பொரியாக அமைந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X