For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'நிலை குலைந்த ஜெயலலிதா': கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தான் நிலை குலைந்த நிலையில் இருப்பதால்தான் தமிழக பட்ஜெட்டை 'நிலை குலை பட்ஜெட்' என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: 2009-2010ம் ஆண்டு ரூ. 1,024 கோடி இருந்த வருவாய்ப் பற்றாக்குறை 2010-2011ல் ரூ.3,396 கோடியாக உயர்ந்துள்ளது என்று ஜெயலலிதா தனது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறாரே?

பதில்: இதிலே ஜெயலலிதா மதிப்பீட்டுத் தொகையை எடுத்துக் காட்டியிருக்கிறார். 2009-2010ம் ஆண்டு ரூ.1,024 கோடி வருவாய்ப் பற்றாக்குறை என்பது மதிப்பிடப்பட்ட தொகை. அதுவே இறுதியான தொகை அல்ல. இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை பக்கம் 74-பத்தி 3இல் 2009-2010ம் ஆண்டில் ரூ.5,020 கோடி வருவாய்ப் பற்றாக்குறை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை ஜெயலலிதா படிக்கவில்லை போலும்!.

2009-2010ம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டின் படியான வருவாய்ப் பற்றாக்குறை 5,020 கோடி ரூபாய் என்பது தான் சரியான தொகை. இது தற்போது 2010-2011ல் 3396 கோடி ரூபாயாக வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் குறைந்துள்ளதே தவிர- வருவாய்ப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது என்று ஜெயலலிதா கூறியிருப்பது தவறான புள்ளி விவரமாகும்.

2009-2010ம் ஆண்டு 1024 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை 5,020 கோடி ரூபாயாக உயர்வதற்குக் காரணம்- ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதாலும், அரசின் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளில் ஏற்பட்டுள்ள உயர்வு, மற்றும் புதிய திட்டங்களுக்கான நிதித் தேவை ஆகியவற்றாலும், உலகப் பொருளாதார மந்த நிலையால் வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவாலும் தான் என்று நிதிநிலை அறிக்கையின் இணைப்புப் பகுதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை அம்மையார் அவர்கள் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து தெளிவு பெறுவது நல்லது.

11,823 கோடி ரூபாயாக இருந்த நிதிப்பற்றாக்குறை, 16,222 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே கூறியிருக்கிறார். இதற்கான விளக்கமும் நிதிநிலை அறிக்கையில் பக்கம் 71- பத்தி 144ல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அது வருமாறு:

நிதிப்பற்றாக்குறை ரூபாய் 16,222 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3.7 சதவீதமாகும். பொதுக் கணக்கின் நிகரத்தோடு எடுத்துக் கொண்டால் ஒட்டுமொத்த பற்றாக்குறை ரூபாய் 8 கோடியாக இருக்கும்.

செலவினங்களில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தும், வரி வசூலை மேம்படுத்தியும் இந்தப்பற்றாக்குறை ஈடுகட்டப்படும். வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை குறித்த மத்திய அரசு நிர்ணயித்த அனைத்து இலக்குகளுக்கு உட்பட்டதாகவே கடந்த நான்காண்டுகளாக மாநில அரசு இப்பற்றாக்குறைகளின் அளவைக் கட்டுக்குள் வைத்துள்ளது.

பொருளாதார தேக்க நிலையிலிருந்து மீள்வதற்காக மத்திய அரசு பல்வேறு வரிச்சலுகைகளை இந்த ஆண்டு அளித்தது. அதனால் அரசின் வருவாய் குறைந்ததும் பற்றாக்குறை அதிகமாக ஒரு முக்கிய காரணமாகும்.

2008-2009ம் நிதியாண்டில் ஒட்டு மொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதம் வரை இருக்கலாம் என்று அறிவித்த மத்திய அரசு 2009-2010 ஆண்டு 4 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறியுள்ளது. 2009-2010ம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டின்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த நிதிப்பற்றாக்குறை 3.23 சதவீதம் தான். எனவே பற்றாக்குறை குறித்து கவலைப்படத் தேவையில்லை.

அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில், 2009-2010ம் ஆண்டுக்கான மொத்த வரவு செலவு திட்ட மதிப்பீடு 58,271 கோடி ரூபாய். 30-9-2009 வரை குறைந்தபட்சம் 29,135 கோடி ரூபாயாவது வருவாய் வந்திருக்க வேண்டும். ஆனால் இந்த அரசின் புள்ளிவிவரப்படி 30-9-2009 வரை 24,432 கோடி ரூபாய் தான் வருவாய் வந்திருக்கிறது என்று ஒரு விவரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இது ஒரு பெரிய குறைபாடா என்பதை ஜெயாவின் அறிக்கையைப் படித்தவர்களே புரிந்து கொண்டிருக்கலாம்.

இந்தக் குறிப்பைக் கூட, தமிழக அரசின் சார்பில் பேரவையிலே வைக்கப்பட்ட ஒரு அறிக்கையிலே உள்ளதைத்தான் அப்படியே எடுத்துக்காட்டி தான் ஏதோ ஒரு குறையைக் கண்டுபிடித்து விட்டதைப் போல அறிக்கை கொடுத்துள்ளார். ஆனால் அரசு அவையிலே வைத்த குறிப்பிலேயே அதற்கான விளக்கத்தையும் அப்போதே தந்துள்ளது. அதை மறைத்துவிட்டுத் தான் ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறார்.

அரசு அளித்த அறிக்கையிலேயே முதல் ஆறு மாதங்களில், எதிர்பார்த்த வருவாயை விட குறைவதற்குக் காரணம்- பொருளாதார நிலையில் காணப்படும் மந்த நிலையே இதற்கு முக்கிய காரணம் என்று விளக்கமளிக்கப்பட்டு விட்டது.

கேள்வி: நிதி நிலை அறிக்கையைப் பற்றி பலரும் பாராட்டிய போதிலும் ஒரு சில கட்சிகள் மட்டும் விலைவாசியை மேலும் அதிகரிக்கக் கூடிய நிதி நிலை அறிக்கையாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்களே?

பதில்: விலைவாசியைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு தான் உணவு மானியமாக இந்த நிதி நிலை அறிக்கையிலே மாத்திரம் 3,750 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏழைகள் தங்கள் குடிசை வீடுகளை சொந்தமாக செலவழித்து, காங்க்ரீட் வீடுகளாகக் கட்டி கொள்ள முடியாது என்பதை யோசித்துத் தான், அவர்களுக்கு 1800 கோடி ரூபாய் செலவில் இந்த ஆண்டு மட்டும் மூன்று லட்சம் காங்க்ரீட் வீடுகளைக் கட்டிக் கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக 1716 கோடி ரூபாயும், முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்காக 1,002 கோடி ரூபாயும், சத்துணவுத் திட்டத்திற்காக 924 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்காக 891 கோடி ரூபாயும், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்காக 750 கோடி ரூபாயும், இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும்,

மகப்பேறு உதவித் திட்டத் திற்காக 360 கோடி ரூபாயும், கூட்டுறவு வேளாண் கடன் தள்ளுபடிக்காக அரசின் உதவியாக 380 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவச மற்றும் சலுகைக் கட்டண பஸ் பாஸ் வழங்கும் திட்டத்திற்காக 300 கோடி ரூபாயும், திருமண உதவித் திட்டத்திற்காக 300 கோடி ரூபாயும், இலவச வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்திற்காக 256 கோடி ரூபாயும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்காக நமது மாநில அரசின் பங்காக 250 கோடி ரூபாயும்,

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்காக 240 கோடி ரூபாயும், மாற்றுத் திறனாளிகள் நலன்களுக்காக 176 கோடி ரூபாயும், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்திற்காக 152 கோடி ரூபாயும், இலவச மிதி வண்டி வழங்கும் திட்டத்திற்காக 151 கோடி ரூபாயும், இலவச எரிவாயு அடுப்பு வழங்குவதற்காக 140 கோடியும், விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுப் பயிர்க் கடன்கள் வழங்கும் திட்டத்திற்காக 140 கோடி ரூபாயும், சமத்துவபுரம் திட்டத்திற்காக 75 கோடி ரூபாயும்,

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி வழங்குவதற் காக 60 கோடி ரூபாயும் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றால் அனைத்தும் விலைவாசி உயர்வினால் ஏழையெளிய மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் செய்யப்படுகின்ற செயல்கள் தான்.

ஆனால் எதிர்க் கட்சிகளால் வேறு எந்தக் காரணத்தையும் சுட்டிக்காட்ட முடியாத நிலையில் விலைவாசி உயர்ந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். அதை உணர்ந்து கொண்டு தான் அரசு இந்த அளவிற்கு நிதி நிலை அறிக்கையிலே மானியங்களை வழங்கியுள்ளது.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று வழங்கும் திட்டம், அத்தியாவசிப் பொருள்களை மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கும் திட்டம், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு மதிப்புக் கூட்டு வரி விலக்கு அளிக்கும் திட்டம், 50 ரூபாய்க்கு பத்து மலிவு விலையில் மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டம் போன்றவைகள் எல்லாம் விலைவாசி உயர்வினால் ஏழையெளிய மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்பதை ஏழை யெளிய மக்கள் நன்றாகவே உணர்வார்கள்.

கேள்வி: பொது விநியோகத் திட்டத்திற்கு அரசு தரும் ரூபாய் 4000 கோடி ஆளுங்கட்சியினர் சம்பாதிப்தற்குத் தான் பயன்படுகிறது என்று நிதி நிலை அறிக்கை பற்றி விமர்சனம் செய்த ஒருவர் சொல்லியிருக்கிறாரே?

பதில்: பொது விநியோகத் திட்டத்திற்கு அரசு தரும் ரூபாய் இந்த மாநிலத்திலே உள்ள ஏழையெளிய மக்களுக்குத் தான் பயன்படுகிறது. அந்த ஏழையெளிய மக்கள் எல்லாம் அதன் காரணமாக ஆளும் கட்சியினராக இருக்கின்றனர். எனவே அவர்களுக்குப் பயன்படுகிறது என்பதை இவ்வாறு அவர் சொல்லியிருப்பார்.

கேள்வி: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை மனதிலே வைத்து தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்: அப்படியென்றால் நிதிநிலை அறிக்கையிலே ஏராளமான திட்டங்கள் இருப்பதாகச் சொல்கிறார் என்று தானே அர்த்தம்! அதாவது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்!.

கேள்வி: நிலை குலை பட்ஜெட் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்: நிலை குலைந்த நிலையில் தான் இருப்பதைப் பற்றி இவ்வாறு சொல்லிக் காட்டியிருக்கிறாரோ என்னவோ?

இவ்வாறு அதில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று தமிழக பட்ஜெட் புதிய சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்தது. அதில், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது திமுக எம்எஎல்ஏக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து முதல்வர் கருணாநிதி அறிவுரை வழங்கினார்.

கூட்டத்துக்குப் பின் நிருபர்களை சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மிகச் சிறந்த நிதிநிலை அறிக்கையை மக்களுக்கு அளித்திருக்கிறீர்கள். விவசாயத்திற்கும், கல்விக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முல்லை பெரியாறு பிரச்சனையிலே மத்திய அரசு இரண்டு மாத கால அவகாசம் கேட்டிருப்பதை பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே?

பதில்: மத்திய அரசின் மீது நான் குற்றச்சாட்டு கூற வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்த்து இந்த கேள்வியை கேட்கிறீர்கள். அது தேவையில்லாத ஒன்று. முல்லைப் பெரியாறு பிரச்சனை நம்முடைய முக்கியமான பிரச்சனை தான். அதற்காக நாம் கவலைப்படாமல் இருக்கவில்லை. இந்தப் பிரச்சனையில் நம்முடைய உரிமையை விட்டுக் கொடுத்து, அந்தப் பகுதியிலே உள்ள விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் வேதனைக்கு வித்திடக்கூடாது என்பது தான் முக்கியம். இது தான் என்னுடைய கருத்து.

கேள்வி: புதிய சட்டமன்றத்திற்கான வளாகத்தை உருவாக்கி, முதல் நாள் அவை தொடங்கியபோது, அதிமுக உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தார்களே?

பதில்: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரில் நடப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென்று கோரி, உச்ச நீதிமன்றத்திலே ஜெயலலிதா சார்பில் வழக்கு போடப்பட்டு, அதிலே கூறப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருக்கிறார்கள். அதைத் தெரிந்து கொண்டு, கறுப்புடை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்கள் போலும்.

கேள்வி: பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் இரண்டாவது இடம் யாருக்கு என்பதில் தான் போட்டி இருப்பதாகவும், இதற்கு முன் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு செல்லாத நீங்கள் பென்னாகரத்திற்கு மட்டும் செல்வதாகவும், அதன் முக்கியத்துவம் என்ன என்றும் கேட்கிறார்களே?

பதில்: பென்னாகரத்தில் இருக்கின்ற வாக்காளர்களுக்கு நான் வரவில்லையே என்று வருத்தப்படக்கூடாது என்பதற்காகத் தான் செல்கிறேன். ஏனென்றால் பலமுறை பென்னாகரத்திற்கு திமுகவின் கொள்கைப் பிரசாரத்திற்காக சென்றிருக்கிறேன். இப்போது நான் வரவில்லையே என்ற குறை அவர்களுக்கு கூடாது என்பதற்காக நான் செல்கிறேன். அந்த தொகுதி மக்களை பார்க்க வேண்டும் என்பதற்காக செல்கிறேன்.

கேள்வி: பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று பாமக கருத்து கூறியிருக்கிறதே?

பதில்: அவர்களுக்கு எவ்வளவோ ஏமாற்றங்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X