For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனியார் பள்ளிகளுக்கான அதிகபட்ச கட்டணம் ரூ11000: கூடுதலாக வசூலித்தால் அங்கீகாரம் ரத்தாகும்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய ஆண்டு கட்டணத்தை நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயித்துள்ளது.

இதன்படி நகர்ப்புற மேல்நிலைப் பள்ளிகளில் அதிகபட்சமாக ரூ.11,000 ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய ஆண்டு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு ஆய்வு நடத்தி, புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து நீதிபதி கோவிந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

கட்டண நிர்ணயம் தொடர்பாக பள்ளிகளில் இருந்து தகவல்கள் பெறுவதற்காக கேள்வி பதில் வடிவத்தில் படிவம் தயாரிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள 10,934 சுயநிதி பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.

அவற்றுள் 10,233 பள்ளிகள் தகவல்களைச் சமர்ப்பித்தன. மீதியுள்ள 701 பள்ளிகள் தகவலைச் சமர்ப்பிக்கவில்லை. இந்தப் பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த 30ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் அவை தகவல் தெரிவிக்கவில்லை.

பள்ளிகள் அளித்த விவரங்களை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 200 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் மூலம், ஒவ்வொரு பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள், மாணவர் எண்ணிக்கை, தற்போதைய கட்டண வசூல், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், பள்ளியை மேம்படுத்த தேவைப்படும் கூடுதல் நிதி வசதி போன்றவை சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித் தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டண நிர்ணய குழுவுக்கு தகவல் தராத பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியை வைத்து தகவல் தராத பள்ளிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதிகபட்சமாக நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் கட்டணம் (எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை) ரூ.3,500 எனவும், நடுநிலைப் பள்ளிக்கு (1 முதல் 8ம் வகுப்பு வரை) ரூ.5,000 எனவும், உயர்நிலைப் பள்ளிக்கு (6 முதல் 10ம் வகுப்பு வரை) ரூ.8,000 எனவும், மேல்நிலைப் பள்ளி (6 முதல் 12ம் வகுப்பு வரை) ரூ.11,000 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளை பொறுத்தவரை நகர்ப் புறத்தில் கட்டணம் ரூ. 5,000 ஆகவும், கிராமப் பகுதிகளில் ரூ.3,500 ஆகவும் இருக்கும்.

இவை தான் அதிகபட்ச கட்டணம் ஆகும். எல்லா பள்ளிகளுக்கும் ஒரே விதமான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. பள்ளிக்குப் பள்ளி கட்டணத்தில் மாற்றம் இருக்கும்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வருடத்திற்கு ஒரு மாணவருக்கு உள்ள கட்டணம் ஆகும். இதில் வாகன கட்டிடம், விடுதி கட்டணம் ஆகியவை அடங்காது. அதை பள்ளிகளில் தனியாக வசூலிப்பார்கள்.

கட்டண நிர்ணயம் தொடர்பான ஆணைகள் அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பப்படவுள்ளன. இடைப்பட்ட காலத்தில் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்யக் கூடாது. அப்படி வசூலித்தால், அதிகமாக வசூலித்த கட்டணத்தை, பள்ளிகள் மாணவர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும்.

தவிர, ஒவ்வொரு பள்ளிக்குமான கட்டண விவரம் பள்ளிக் கல்வித் துறையின் http://www.pallikalvi.in/இணையதளத்திலும் வெளியிடப்படும். அதைப் பார்த்து சம்பந்தப்பட்ட பள்ளியின் கட்டணத்தை பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்தக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

பள்ளிக்கென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால், அந்தப் பள்ளியின் அங்ககீகாரத்தை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

தனியார் பள்ளிகள மதிப்பார்களா?:

ஆனால், இந்தக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் ஏற்பார்களா, ஏற்றாலும் அதை மதிப்பார்களா என்பது சந்தேகமே. பஸ் கட்டணம், யூனிபார்ம், நோட் புக்ஸ், டொனேசன் என்ற பெயரில் நிச்சயம் அதிகமாகவே சுருட்டுவார்கள். இதை எதிர்த்து எத்தனை பெற்றோர்கள் புகார் கொடுத்துக் கொண்டும், கேஸ் போட்டுக் கொண்டும் இருப்பார்கள் என்பதும் சந்தேகமே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X