For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் நடந்தால் மீண்டும் காங். கூட்டணி வெல்லும்- அதிமுகவுக்கு '0' தான் கிடைக்கும்

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
டெல்லி: நாடாளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்றும், அந்தக் கூட்டணிக்கு 25 இடங்கள் அதிகம் கிடைக்கும் என்றும் என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியே 39 இடங்களிலும் வெல்லும் என்றும் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் மாபெரும் தோல்வி ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து சமீபத்தில் ஓராண்டை நிறைவு செய்ததையொட்டி நாடு முழுவதும் என்டிடிவி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு நடத்தியது.

GfK MODE நிறுவனத்துடன் இணைந்து பிரபல கருத்துக் கணிப்பாளரும், என்டிடிவி அதிபர் பிரணாய் ராய் தலைமையிலான குழு நாடு முழுவதும் இந்த ஆய்வை நடத்தியது.

மொத்தம் 34,277 பேரிடம் இந்தக் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் தெரியவந்துள்ள விவரம்:

நாளையே மக்களவைக்குத் தேர்தல் நடத்தினால் காங்கிரஸ் கூட்டணிக்கு கடந்த தேர்தலை விட 25 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். மொத்தத்தில் 288 இடங்களை இந்தக் கூட்டணி கைப்பற்றும்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த 39 இடங்களையும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றும். கடந்த தேர்தலில் 9 இடங்களில் வென்ற அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

பாஜக கூட்டணிக்கு 15 இடங்கள் இழப்பு:

தேசிய அளவில் பாஜக தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கட்டணிக்கு 15 இடங்கள் குறைந்து மொத்தம் 145 இடங்களே கிடைக்கும்.

ஆனால், குஜராத்தில் பாஜகவுக்கு 4 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

இடதுசாரி்க் கட்சிகளுக்கு ஒரு இடம் குறைந்து 23 எம்பிக்களே கிடைப்பர்.

அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-மம்தா பானர்ஜி கூட்டணி வைத்தால் 27 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் தனித்து் போட்டியிட்டால் 4 இடங்களே கிடைக்கும். மீதியுள்ள இடங்களில் 30 இடங்களை இடதுசாரிகளே பிடித்துவிடுவர். மம்தாவுக்கு 7 இடங்களே கிடைக்கும். இதனால் கூட்டணி வைத்தால் மட்டுமே இடதுசாரிகளை தோற்கடிக்க முடியும்.

கர்நாடகத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு:

கர்நாடகத்தில் தற்போது 6 எம்பி்க்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 12 இடங்கள் கிடைக்கும். அங்கு பாஜகவுக்கு 11 இடங்களை இழந்து 8 இடங்களில் மட்டுமே வெல்லும். தேவெ கெளடா கட்சிக்கு 2 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

அதே நேரத்தில் ஆந்திராவில் தற்போது தன் வசம் உள்ள 33 இடங்களில் 3 இடங்களை காங்கிரஸ் இழக்கும். அங்கு தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 இடங்கள் அதிகமாகக் கிடைக்கும். பாஜகவுக்கு ஒரு இடம் குறையும்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 4வது இடமே:

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும். முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கடந்த முறையைப் போலவே 18 இடங்களும், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி 3 இடங்களை இழந்து 18 இடங்களும் கிடைக்கும். பாஜகவுக்கு 15 இடங்களே கிடைத்து 4வது இடத்துக்குத் தள்ளப்படும்.

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு 33 இடங்கள் வரை கிடைக்கும். கூட்டணி இல்லாவிட்டால் 23 இடங்களில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியே வெல்லும். மிச்சமுள்ள 12 இடங்களில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், 3 இடங்களில் மட்டுமே காங்கிரசும் வெல்ல முடியும்.

மொத்தத்தில் இப்போதுள்ள காங்கிரஸ் கூட்டணிக்கு 288 இடங்கள் கிடைக்கும். இது கடந்த தேர்தலில் கிடைத்ததைவிட 25 எம்பிக்கள் அதிகம்.

பாஜக கூட்டணிக்கு 145 இடங்கள் கிடைக்கும். இது கடந்த தேர்தலைவிட 15 இடங்கள் குறைவு.

லாலு-காங் கூட்டு சேர்ந்தால் பாஜகவுக்கு பெரும் நஷ்டம்:

அதே நேரத்தில் பிகாரில் லாலுவுடன் கூட்டணி சேர்ந்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு 318 இடங்கள் கிடைக்கும். இந்தக் கூட்டணி உருவானால் பாஜக கூட்டணிக்கு மேலும் 30 இடங்கள் குறைந்து 115 இடங்களே கிடைக்கும்.

மன்மோகனைவிட ராகுலே 'பெட்டர்':

மன்மோகன் சிங்கை விட ராகுல் காந்தி சிறந்த பிரதமராக இருப்பார் என்று கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 50 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் மன்மோகன் சிங்கின் செயல்பாடு திருப்தியாக உள்ளதாக 70 சதவீதம் பேர் கூறினர். ராகுல் காந்தி அடுத்த பிரதமராவார் என்று 55 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

முந்தைய காங்கிரஸ் அரசை விட இப்போதைய காங்கிரஸ் அரசு மோசமாக இருப்பதாக 44 சதவீதம் பேரும், மன்மோகன் சிங்கை விட சோனியாவே சக்தி வாய்ந்தவர் என்று 62 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

ப.சிதம்பரம செயல்பாட்டுக்கு ஆதரவு:

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பணிகள் சிறப்பாக இருப்பதாக 61 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் செயல்பாட்டை 59 சதவீதம் பேர் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக 62 சதவீதம் பேர் பிரணாப் மீது குற்றம்சாட்டி உள்ளனர்.

ராசா ஊழல் நபரா?-'ஆமாம்':

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ராசா ஊழல் நபரா என்ற கேள்விக்கு 57 சதவீதம் பேர் 'ஆமாம்' என்று பதிலளித்துள்ளனர்.

நக்சலைட்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்று 67 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்தனர்.
நாட்டிலேயே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் சிறப்பாக செயல்படுவதாக 85 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக 84 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபை உடனே தூக்கில் போட வேண்டும் என்று 76 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்தனர்.

இவ்வாறு அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X