For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியின் கோபாலபுரம் வீடு அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு!

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi Gopalapuram House
சென்னை: முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு, மத்திய அமைச்சர்கள் ராசா, ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் அடங்கிய ஐவர் கொண்ட 'அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை'யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தானப் பத்திரத்தில் இன்று முதல்வரும், அவரது மனைவி தயாளு அம்மாளும் கையெழுத்திட்டு அதை ஐவர் குழுவிடம் வழங்கினர்.

தான் மற்றும் தனது மனைவியின் காலத்திற்குப் பிறகு கோபாலபுரம் வீட்டை தானமாக அளிப்பதாகவும், அங்கு இலவச மருத்துவமனை உருவாக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று தனது வீட்டை தானமாக அளிக்கும் பத்திரத்தில் அவரும், மனைவி தயாளு அம்மாளும் கையெழுத்திட்டனர்.

முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்திற்குப் பிறகு இந்த இல்லம் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும்.

அந்த மருத்துவமனைக்கு கலைஞர் மருத்துவமனை என்று பெயரிடப்படும். இந்த மருத்துவமனையை நிர்வகிக்கும் பொறுப்புக்காக அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை என்ற புதிய அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், கவிஞர் வைரமுத்து, திரைப்படத் தயாரிப்பாளர் ராம நாராயணன், ரங்கநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பத்திரத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன் வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்வசர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தை 1955ம் ஆண்டு சர்வேசுவர அய்யர் என்பவரிடம் இருந்து வாங்கினார். 1968ம் ஆண்டு தன் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய 3 பேர் பெயரில் இந்த வீட்டை கருணாநிதி எழுதி வைத்தார்.

கடந்த ஆண்டு அவர் இந்த வீட்டை ஏழை- எளிய மக்கள் பயன்பெற மருத்துவமனையாக மாற்ற விரும்பினார். இதையடுத்து கடந்த ஆண்டு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு மூவரும் இந்த வீட்டை மீண்டும் கருணாநிதியிடம் ஒப்படைத்தனர்.

இன்று பத்திரப்பதிவு மூலம் இந்த வீடு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்குப் பிறகு இந்த வீடு மருத்துவமனையாக மாறும். கலைஞர் கருணாநிதி மருத்துவமனை என்று அந்த மருத்துவமனை அழைக்கப்படும்.

இந்த மருத்துவமனையை அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை நிர்வகிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவு நிகழ்ச்சியின்போது துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ராசா, உயர் நீதிமன்ற அட்கேட் ஜெனரல் ராமசாமி, வழக்கறிஞர்கள் சுதர்சனம், பழனியாண்டவன், பத்திரப் பதிவு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அரிகரன், ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X