For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபா: ராஜஸ்தான் பாஜக வேட்பாளராக ராம் ஜேத்மலானி- கட்சியிலேயே எதிர்ப்பு

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில், ராஜ்யசபாவுக்குப் போட்டியிடுகிறார். ஆனால், இதற்கு பாஜகவிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள பாபர் மசூதி வழக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான குஜராத் மதக் கலவர வழக்கு ஆகியவற்றில், இந்த இருவர் சார்பிலும் ராம் ஜேத்மலானி வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரான ஜேத்மலானியை ராஜ்சயபா வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர் என்பதாலும் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், நான் வாஜ்பாயின் ஆசிர்வாதத்துடன் தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று ஜேத்மலானி கூறியுள்ளார்.

மம்தாவுக்கு அத்வானி அறிவுரை:

இந் நிலையில் மேற்கு வங்க சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துமாறு கோர வேண்டாம் என்று திரணமூல் காங்கிரஸ் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு அத்வானி அறிவுரை கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்காள நகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை, முன்கூட்டியே நடத்துமாறு மம்தா கோரி வருகிறார்.

இந்நிலையில், இது குறித்து அத்வானி தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது:

மேற்கு வங்காள நகராட்சி தேர்தலில், மம்தாவுக்கு கிடைத்த வெற்றிக்கு அவரது செயல்பாடுகள் காரணமல்ல. பொது மக்களிடம் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சி விலகிச்சென்று விட்டதே காரணம்.

இந்த வெற்றி மூலம் மம்தா பானர்ஜி சரித்திரம் படைத்துள்ளார். அவர் வங்காளத்தை ஆள்வார் என்று வரும் செய்திகள், எதிர்காலத்தில் உண்மை ஆகக்கூடும். அவர் வங்காள ராணியாகவும் ஆகலாம்.

ஆனால், சட்டசபை தேர்தலை முன்கூட்டியே சந்திக்க வேண்டும் என்று அவர் அவசரப்படக்கூடாது. பொறுமையாக இருந்தால், அவருக்கு பெரிய அளவில் பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார் அத்வானி.

நம்பிக்கைக்குரிய கட்சியாக இருப்போம்-மம்தா:

இந் நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நம்பிக்கைக்கு உரிய கட்சியாக இருப்போம். பதவி காலம் முடியும் வரை இந்த கூட்டணியை ஆதரிப்போம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் கூட்டணி ஏற்படவில்லை என்பதை யாரும் திசை திருப்ப வேண்டாம்.

இப்போது ஒன்றும் முடிந்து போகவில்லை. நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு நம்பிக்கைக்கு உரிய கட்சியாக நீடிப்போம். மத்தியில் இந்த கூட்டணியின் பதவி காலம் முடியும் வரை ஆதரிப்போம். இந்த முடிவில் மாற்றம் இல்லை. நாங்களாக வெளியேற மாட்டோம்

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலின்போது, காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள முழு முயற்சிகளை மேற்கொள்வோம். எங்களை நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்று சிலர் கூறி வருகிறார்கள். அது உண்மை அல்ல. நாங்கள்தான் மற்றவர்களை விட நம்பத்தகுந்தவர்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X