For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபைத் தேர்தலில் தீவிர கவனம்-அமைச்சர் பதவியை உதறுகிறார் மமதா

Google Oneindia Tamil News

Mamata Banerjee
கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வரும் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றி, ஆட்சியைப் பிடிக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தப் போகிறார் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி. சட்டசபைத் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்துவதற்கு வசதியாக ரயில்வே அமைச்சர் பதவியை அவர் உதறவுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது. மமதா உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸார் சிலர் அமைச்சர்களாக உள்ளனர். மமதா ரயில்வே அமைச்சராக உள்ளார்.

ஆனால் அவரது முழுக் கவனமெல்லாம் மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில்தான் உள்ளது. இதனால் பெரும்பாலான நாட்கள் அவர் கொல்கத்தாவிலேயேதான் உள்ளார். ரயில்வே அமைச்சகம் தொடர்பான பணிகளையும் கூட அவர் அங்கிருந்தபடிதான் கவனித்து வருகிறார்.

இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே தொடர்பான முக்கிய சம்பவங்களி்ன்போது கூட அவர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குப் போவதில்லை. மேற்கு வங்கத்தில் நடந்தால் மட்டுமே செல்கிறார். சமீபத்தில் மும்பையில் ரயில்வே டிரைவர்கள் நடத்திய மிகப் பெரிய ஸ்டிரைக் போராட்டத்தின்போதும் கூட அவர் டெல்லிக்கே வரவில்லை. அந்தப் போராட்டம் குறித்தும் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இது பெரும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது.

டெல்லியில் பிளாட்பார கூட்ட நெரிசல் விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கும் கூட அவர் நேரில்சென்று விசாரிக்கவில்லை, ஆறுதல் கூறவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது மமதாவின் கட்சி. இதனால் அவர் படு தெம்பாகி விட்டார். அடுத்த ஆட்சி நம்முடையதே என்று திரிணமூல் காங்கிரஸார் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதையடுத்து விரைவில் சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று காங்கிரஸை அணத்த ஆரம்பித்து விட்டார் மமதா. மேலும், தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் சிறப்பான முறையில்தேர்தல் பணிகளைப் பார்வையிடுவதற்காக அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

விரைவில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைக்கவுள்ளார். மமதாவின் முடிவுக்கு பிரதமரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

மமதா விலகினால் ரயில்வே அமைச்சர் பதவியை தானே வைத்துக் கொள்ள காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ஆனால் தனது கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே இப்பதவியை தர வேண்டும் என மமதா கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரயில்வே துறை அமைச்சர் பதவி மீது திமுக, குறிப்பாக மு.க.அழகிரியும் குறி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மமதா விலகிய பின்னர் அமைச்சரவையில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X