For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலம்பெயர் தமிழர்கள் மீது இலங்கை 'உளவியல் போர்': புலிகள்

By Chakra
Google Oneindia Tamil News

LTTE Logo
கொழும்பு: புலம்பெயர் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களைப் பிரிக்க இலங்கை அரசு சதித் திட்டம் தீட்டியுள்ளது. இந்த கபட நோக்க முயற்சிகள் தொடர்பாக புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடன் இருக்குமாறு விடுதலைப் புலிகள் அமைப்பு கோரியுள்ளது.

புலிகளின் வெளியுலகத் தொடர்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்த கே.பி என்ற குமரன் பத்மநாபனுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பும், அரசுப் பதவியும் வழங்கும் வாய்ப்பு தென்படுவதாக இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் போர் குற்றம் தொடர்பான விசாரணையில் அவரை அரசுத் தரப்பு சாட்சியாக பயன்படுத்தவும் இலங்கை முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் புலிகளின் தலைமைச் செயலக இணைப்பாளர் ராமு. சுபன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிற அதேவேளை எம் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்து, திட சங்கற்பம் பூண்டுள்ளது.

எமது இயக்கத்தினை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் லட்சியத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள அரசின் நோக்கம் எடுபடவில்லை. இத்தகைய சூழலில் இலங்கை அரசு பல்வேறு நரித்தனம் கொண்ட தந்திரத் திட்டங்களை வகுத்து, நகர்த்தி வருவதை எம் மக்கள் நன்கு அறிவர்.

புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது இலங்கை அரசாங்கம்.

அதன் ஒருபகுதியாக, சிறையிலுள்ள போராளிகள் சிலரைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சில திட்டங்களைச் செயற்படுத்தி புலம்பெயர் மக்களின் ஒரு தொகுதியைத் தம் வசப்படுத்தி, வளங்களை உள்வாங்க முனைகிறது.

இதன்மூலம் குழப்பங்களை ஏற்படுத்தி எமது ஒற்றுமையைச் சிதைத்து, தமிழரின் உரிமைக்கான போராட்டத்தை, புலம்பெயர் தேசங்களில் நசுக்க எண்ணியுள்ளது.

போராளிகளை விடுவிப்பதற்கும், தாயக மக்களின் துயரங்களைப் போக்குவதற்கும் எமது இயக்கமும், புலம்பெயர் மக்களும் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக இருக்கிறார்கள் என்ற நல்ல நோக்கினை இலங்கை அரசாங்கம் கபடத்தனமாகப் பயன்படுத்த முனைகிறது.

அதற்காக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி, தம் வசப்படுத்தும் உளவியள் போரை இலங்கை அரசு கையாளத் தொடங்கியுள்ளது.

தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப் போவதாகக் கூறும் சிங்கள அரசாங்கம் செய்தவை, செய்து கொண்டிருப்பவை என்ன?.

யுத்தத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் எமது மக்களைக் கொன்று குவித்தது. சரணடைந்தவர்களைக் கொடூரமாகக் கொலை செய்தது. ஊடகங்களைச் சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுத்தது.

சரணடைந்தவர்கள் குறித்த முழுமையான விபரங்களை இன்றுவரை வெளிப்படுத்தாமல் உள்ளது.

தினந்தோறும் பாலியல் வல்லுறவு, சித்திரவதை, கொலை என்று தடுப்புக் காவலிலுள்ளவர்களைப் பலியாக்கிக் கொண்டிருக்கிறது.

தொண்டு நிறுவனங்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடாது தடுப்பது மட்டுமன்றி, போர்க் குற்றவியல் விசாரணை தொடர்பான பன்னாட்டு முயற்சிகளை முற்றாக உதறித் தள்ளிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசாங்கம்.

இதே அரசாங்கம் தடுப்புக் காவலிலுள்ள போராளிகள் சிலரை விடுவிப்பது, மக்களின் புனர்வாழ்வு, அபிவிருத்தி என்ற திட்டங்களைக் கபட நோக்குடன் பயன்படுத்தி எமது மக்களை வசியப்படுத்த முயல்கிறது.

தடுப்புக் காவலிலுள்ளவர்களை விடுவிப்பது என்பது முற்று முழுதாக இலங்கை அரசின் கையிலுள்ள விஷயம். அதற்கு எந்தத் தடையுமே இல்லை. அது குறித்துப் பேசுவதானால் கூட, தாயகத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசாமல் புலம்பெயர் தேசத்திலிருந்து தனி நபர்கள் சிலரை அழைத்துப் பேசவேண்டிய தேவையில்லை.

இது தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியாகவும், தம்மீதான அழுத்தங்களைத் தணிக்க இலங்கை அரசு ஆடும் ஒரு நாடகமாகவுமே பார்க்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கமோ மிகமிக ரகசியமாக, சிறையில் கைதிகளாகவுள்ள எமது இயக்கத்தைச் சேர்ந்த சிலருடனும், வெளிநாட்டில் இருந்து அண்மையிற் சென்ற தனி நபர்கள் சிலருடனும் சேர்ந்து திரை மறைவில் சில செயற்பாடுகளை முன்னெடுப்பது உள்நோக்கம் கொண்டவை.

ஆகவே இந்தக் கபடநோக்கம் கொண்ட இலங்கை அரசின் முயற்சிகள் தொடர்பாக புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடனும் கூட்டுப் பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அத்தோடு, மக்கள் பிரிதிநிதிகளைப் புறந்தள்ளி தனி நபர்களைக் கொண்டு காரியமாற்றும் இலங்கை அரசின் இந்தக் கபட முயற்சியினை பன்னாட்டு அமைப்புக்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் சரியாக விளங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர் புலிகள்.

200 பேருடன் ஆஸி. நோக்கி எல்டிடி கப்பல்-இலங்கை:

இந் நிலையில் புலிகளுக்குச் சொந்தமான ஒரு கப்பலில் 200 பேர் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருப்பதாக இலங்கையைச் சேர்ந்த பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் பேராசிரியர் குணவர்தனா கூறியுள்ளார்.

இலங்கையின் சன்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

அந்தக் கப்பல் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவை நோக்கி புறப்பட்டது. ஆனால் அட்லாண்டிக் கடலை தாண்டி செல்ல அவற்றின் எந்திரங்கள் ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இக்கப்பலின் பயணப் பாதை மாற்றப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது. ஹரின் பனிச்-19 என்ற இக்கப்பல் தற்போது எம்.வி.சன்சீ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வினோத் என்பவர் இக்கப்பலின் கேப்டனாக இருக்கிறார். இவர் ஆயுத கடத்தலில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இதில் 3000 பேர் வரை பயணம் செய்யலாம்.

கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பலவீனமான சட்டங்கள் உள்ளன. எனவே அகதிகள் என்று கூறி அங்கு தஞ்சம் அடைய விடுதலைப் புலிகள் செல்கின்றனர். இக்கப்பலில் விடு தலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

அப்பாவித் தமிழர்கள் செல்லும் கப்பலை, புலிகளின் கப்பல் என இலங்கை தரப்பு பிரசாரம் செய்து திசை திருப்ப முயல்கிறதா என்பது தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X