For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத் தமிழ் அகதிகளுக்கு கல்வி மறுக்கும் அரசாணையை ரத்து செய்ய சீமான் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: ஈழத்தமிழர்களுக்கு கல்வியை மறுக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

வீடிழந்து நாடிழந்து தொப்புள் கொடி உறவு என்று நம்மை நாடி வரும் நம் சகோதரர்களுக்கு இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் கொடுமையும் கெடுபிடியும் கொஞ்ச நஞ்சம் இல்லை. நாட்டை இழந்தாலும் தம் கல்வியை இழக்க கூடாது என்று நம் தொப்புள் கொடி ஈழ உறவுகள்,படித்து முன்னேறவேண்டும் என்று மேலேழுந்து வந்தால் அதிலும் பேரடி தருகிறார்கள்.

ஈழத் தமிழர்கள் பொறியியல் கல்வி பெறும் விஷயத்தில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணை ஒவ்வொரு ஈழத்தமிழ் மாணவனின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள ஆணைப்படி,ஒரு அகதி முகாமில் இருக்கும் ஒரு ஈழத்தமிழன் மதிப்பெண் கள் எவ்வளவு அதிகம் பெற்றிருந்தாலும், பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான அனைத்து இடங்களும் பிற மாணவர்களுக்கு நிரப்பப்பட்ட பின் பொதுப் பிரிவின் கீழ் காலியிடங்கள் ஏதேனும் இருப்பின் அதில் மட்டுமே அவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றது. அதிலும் இது பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் தான், மருத்துவத்துக்கு இந்த வாய்ப்பும் இல்லை.

பொதுவாகவே பொதுப்பிரிவில் இடங்கள் காலியாக இருப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.அப்படியே இருந்தாலும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அதை விற்றுக் காசாக்கத் தான் எண்ணுமே தவிர அதை ஒரு ஏழை ஈழத்தமிழ் அகதிக்கு தராது. ஆகவே ஈழத்தமிழனுக்கு கல்வி என்றும் எட்டாக்கனியாகத் தான் இருக்கும். அதன் விளைவு தான் கிருஷ்ணகிரியில் உள்ள ஈழத்தமிழ் அகதி மாணவன் 1152 மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்பு பெற வழியில்லாமல் இன்று நிர்க்கதியாய் நிற்கும் சூழ்நிலை நம் கண் முன்னே நிலவுகின்றது.

திபெத்திய அகதிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து,அரசு சலுகையுடன் கல்வி கற்க தனி இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த நாட்டில் எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு மட்டும் என்ன இந்த ஓரவஞ்சனை?

அதுவும் தமிழர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புக்களை தேடிப்போய் அளிக்க வேண்டிய இங்குள்ள தமிழக அரசே தடைக்கற்களை உருவாக்குவது வேதனையான ஒன்று.

ஆகவே நம் தமிழ்ச்சொந்தங்கள் தமிழ்நாட்டில் பொறியியல் கல்வி பெறத் தடையாக இருக்கும் உயர்கல்வித்துறை அரசாணை எண் (1டி)207 அய் உடனடியாக தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும். உயர்கல்வியில் 2003 ஆம் ஆண்டு வரை இருந்த இட ஒதுக்கீட்டு முறை தொடர தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

புகழ்பாட செம்மொழி மாநாடு நடத்துவதை விட இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளே தமிழினத்தை தலை நிமிரச் செய்யும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X