For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று நடந்த பாரத் பந்தி்ன்போது பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. அதே நேரத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

கேரளத்தை ஒட்டிய குமரி மாவட்டத்திலும் பந்த்துக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. கன்னியாகுமரியில் கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள், வேன்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் குறைந்த அளவிலேயே ஓடின. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருவட்டாறு, கொத்தியோடு, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் அரசு பஸ்கள் கல்வீசித் தாக்கப்பட்டன.

குமரி மாவட்ட பாஜக சார்பில் 10 இடங்களில் சாலை மறியல் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியலுக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். 10 இடங்களிலும் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் ரயில் மறியல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ரயில் நிலையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மறியலுக்கு முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினரை ரயில் நிலையங்கள் முன்பு வைத்து போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்லில் 2 அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன.

திருமங்கலத்தில் மோதல்-6 பேர் காயம்:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து ஒரு கோஷ்டியினரும், எதிர்ப்பு தெரிவித்து ஒரு கோஷ்டியினரும் திரண்டதால் அங்கு பெரும் மோதல் மூண்டது.

இரு தரப்பினரும் கற்களை வீசி சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

உசிலம்பட்டி சாலையில் மறியல் செய்ய முயன்றவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்

திருவாரூர்-திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியல்:

திருவாரூர், திருத்துறைப் பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் சிபிஐ எம்.எல்.ஏ உலகநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் பாசஞ்சர் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

அதேபோல திருவாரூர் ரயில் நிலையத்தில், சிபிஐ கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் செய்து கைதானார்கள்.

20 இடங்களில் சாலை மறியல்:

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 20 இடஙகளில் சாலை மறியல் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ் கட்சி செய்தது.

மன்னார்குடி அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு சிபிஐ எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் தலைமை தாங்கி கைதானார்.

தென்காசியில் ரயில் மறியல்-60 பேர் கைது:

தென்காசியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இன்று காலை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து 55 ஆண்கள், 5 பெண்கள் என 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் இல.கணேசன் கைது:

சென்னையில் இன்று பந்த்தையொட்டி பல இடங்களில் மறியல் நடந்ததால் சாலைப் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது.

அண்ணாசாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

சென்டிரல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற சிபிஎம் எம்.எல்.ஏ. மகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லில் சிபிஎம் எம்.எல்.ஏ பாலபாரதியும், குழித்துரையில் சிபிஎம்மின் லீலா எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சையில் திமுக-அதிமுக மோதல்:

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் வழக்கம் போல் பரவலாக கடைகள் திறந்து இருந்தது. அப்போது அதிமுக நிர்வாகிகள் கடைகளை மூட சொல்லி வற்புறுத்தி கொண்டு வந்தனர். இதனால் பயந்து போன வணிகர்கள் கடைகளை உடனடியாக இழுத்து மூடினர்.

ஆனால், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மீண்டும் கடைகளை திறக்க கோரி கடை உரிமையாளர்களை வற்புறுத்தி திறக்க வைத்தனர். மீண்டும் கடைகளை திறக்க கூடாது என அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு திமுக-அதிமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதையறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர். பாதுகாப்பு கருதி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X