தேர்தலுக்கு தயாராகுங்கள்.. தொண்டர்கள விரும்பும் கூட்டணி அமையும்: ஜெயலலிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Jayalalitha
கோவை: தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள விரும்பும் வகையில் கூட்டணி அமையும் என்றும், கட்சியினர் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகுமாறும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு, மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கோவையில் ஜெயலலிதா தலைமையில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் கண்டன பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டது.

தனி விமானத்தில் வந்த ஜெ-சசிகலா:

வ.உ.சி. மைதானத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் தொண்டர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா இன்று காலை 11.10 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் சசிகலாவும் சென்றார்.

காலருகே விழுந்த காய்:

கண்டனக் கூட்டம் ஆரம்பித்து அதிமுக நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவை நோக்கி, நெல்லிக்காய் அளவுக்கு ஒரு காய் பறந்து வந்து ஜெயலலிதாவின் காலருகே விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பேசிய ஜெயலலிதா,

கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாடும் வளர்ச்சி அடையவில்லை தமிழ்மொழியும் வளர்ச்சி அடையவில்லை தமிழர்களும் வளர்ச்சி அடையவில்லை.

முதல்வர் கருணாநிதியை எதிர்த்து யார் பேசினாலும் தாக்கப்படுகிறார்கள். செம்மொழி என்ற பெயரில் நடந்த தன்னல மாநாட்டை விமர்சித்தால் தாக்கப்படுகிறார்கள்.

தமிழை வழக்காடு மொழியாக்கு என்று கூறுபவர்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள். கட்சி கொடி ஏற்றும் அதிமுகவினர் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இது தான் தமிழ் நாட்டினுடைய இன்றைய நிலைமை. இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லை. ரவுடிகளால் போலீஸார் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.

மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. ஆரோக்கியமான குடிநீர் கிடைப்பதில்லை. போதிய பாதுகாப்பு மக்களுக்கு்க கிடைப்பதில்லை.

போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன:

இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. கொலை மற்றும் கொள்ளைகள் தினந்தோறும் நடக்கின்றன. வாக்குச்சாவடிகளை ரவுடிகள் ஆக்கிரமித்து, தங்கள் கட்டுப்பாடுகளில் எடுத்துக்கொண்டார்கள். போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது ஒரு ஆபத்தான நிலைமை.

உணவு சமைப்பதற்குத் அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், மசாலா பொருட்கள், காய்கறிகள் தேவைப்படுகின்றன. இவற்றை சமைப்பதற்கு மண்ணெண்ணெய் அல்லது சமையல் எரிவாயுவும் தேவைப்படுகிறது. இந்தப் பொருட்களின் விலைகள் எல்லாம், கடந்த நான்கு ஆண்டுகளில், இரண்டு முதல் மூன்று மடங்கு வரை ஏறிவிட்டன. விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது ஏன்?, பாசனத்திற்கு தண்ணீர் இல்லை. அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. சில இடங்களில் நிலத்தடி நீர் கிடைக்கின்றது. ஆனால், அந்த நிலத்தடி நீரை பம்பு மூலம் இறைக்க மின்சாரம் இல்லை. மொத்தத்தில் விவசாயப் பணிகள் குறைந்துவிட்டன. இதனால் விவசாய உற்பத்தியும் குறைந்துவிட்டது. விலைவாசியும் விஷம் போல் ஏறிக் கொண்டே போகிறது.

விலைவாசி உயர்வதற்கு இரண்டாவது காரணம், பதுக்கல் தான். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை ஏற்ற வேண்டும் என்பதற்காகவே, செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்துவதற்காக, இரக்கமற்றவர்கள் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது விலைவாசி உயர்விற்கு இரண்டாவது முக்கிய காரணம் ஆகும். இவர்கள் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி, கிடங்குகளில் சேமித்து வைக்கிறார்கள். இதன் விளைவாக, செயற்கை பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதன் காரணமாக, அந்தப் பொருட்களின் விலைகள் உயர்கின்றன. இவ்வாறு விலை உயரும் போது, பதுக்கி வைத்திருந்த பொருட்களை விற்பனை செய்து, பதுக்கல்காரர்கள், மிகப் பெரிய லாபம் சம்பாதிக்கிறார்கள். இது போன்ற சமூக விரோதச் செயல்களை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். ரவுடிகள், சமூக விரோதிகள், பதுக்கல்காரர்களை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.

மூன்றாவது பெரிய பிரச்சினை, ஆன்-லைன் வர்த்தகம். சில பணக்காரர்கள், கம்ப்யூட்டர் மூலம், பெருமளவிலான அத்தியாவசியப் பொருட்களை வாங்குகிறார்கள். ஒரு சிறிய தொகையை முன்பணமாகக் கொடுத்து, ஐந்து முதல் பத்து மடங்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களை, சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். சந்தை விலை உயர்ந்தவுடன், தங்கள் வசம் உள்ள பொருட்களை, அதிக லாபத்திற்கு விற்று விடுகிறார்கள்.

அடிக்கடி பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த, மத்திய அரசு முடிவு எடுப்பதில், திமுக மத்திய அமைச்சர்களுக்கும் பங்கு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்துவது, என முடிவு எடுக்கப்பட்ட, மத்திய அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு, பேட்டி அளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, இதற்கான கூட்டத்தில், திமுக அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டார் என்றும், இந்த விலை உயர்விற்கு திமுக ஒப்புதல் அளித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

தலைகுனியும் சூழ்நிலை!:

ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமைமிகு மாநிலமாக விளங்கிய தமிழ்நாடு இன்று தரம் தாழ்ந்து விட்டது. தமிழ்நாட்டைப் பார்த்து இந்தியாவே தலைகுனியும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால் நாம் அனைவரும் அழிந்துவிடுவோம்.

இன்று சென்னையைத் தவிர, தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளும், பல மணி நேர மின்வெட்டிற்கு ஆளாக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் போதுமான அளவுக்கு மின்சாரம் இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி, அவர்கள் கவலைப்படுவதே இல்லை. இதன் விளைவாக, விவசாய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.

சிறிய, நடுத்தர தொழில்களே முடங்கி, நசுங்கிவிட்டன. இதனுடைய தாக்கம், திருப்பூர் ஜவுளித் தொழில் முதல், சிவகாசி அச்சுத் தொழில் வரை தெளிவாகத் தெரிகிறது. வீட்டு வேலைகளை மேற்கொள்வதில், இல்லத்தரசிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகளால் படிக்க முடியவில்லை. இப்படி பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோவை மாவட்ட மக்களின், முக்கிய கோரிக்கைகளான, கொப்பரைத் தேங்காய்க்கு உரிய விலை, நூல் விலை உயர்வு பிரச்சினை, பஞ்சாலைத் தொழிலாளர்கள் பிரச்சினை ஆகியவை குறித்து, அதிமுக ஆட்சி அமைந்தவுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

1 ரூபாய் அரிசித் திட்டத்தில் பெரும் ஊழல்:

தமிழக அரசின் 1 ரூபாய் அரிசித் திட்டத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. அந்த திட்டத்தில் வரும் நல்ல அரிசிகளை திமுகவினர் வெளி மாநிலத்துக்கு கடத்துகிறார்கள். அதற்கு அரசு அதிகாரிகளும் துணை போகின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதில் திமுகவுக்கும் பங்கு உண்டு.

கோவையில் மாநாடு-திமுகவினர் ரூ. 2,000 கோடி வசூல்:

கோவையில் நடந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் திமுகவினர் ரூ. 2,000 கோடி வசூல் செய்துள்ளனர். மாநாட்டில் உணவு வழங்குவதில் ரூ. 2 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்:

இது தேர்தல் ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். தமிழக மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவுள்ளனர். அதுதான் உங்களது வாக்குரிமை.

யாரும் இம்முறை வாக்குரிமையை இழக்கத் தயாராக இல்லை. 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சரியான வாக்காளர்களுக்கு சரியான கட்சிகளுக்கு வாக்களிக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் முன் அணிவகுத்து நிற்கும் கட்சிகள், அரசியல் தலைவர்கள் குறித்து தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.

கணக்கு போட்டு பார்க்க இதுதான் சரியான தருணம்:

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இதுகுறித்து தெரிந்து கொள்ள இதுதான் தக்க தருணம். அரசின் தோல்விகளையும், சாதனைகளையும் கணக்குப் போட்டுப் பார்க்க இதுதான் சரியான தருணம்.

தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழ்நாட்டை காப்பதற்காக, தமிழக மக்களின் நலனுக்காக, இந்த திமுக அரசு தூக்கி எறியப்பட வேண்டும். இந்த சக்தி மக்கள் மற்றும் தொண்டர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது.

அதிமுக- தேமுதிக கூட்டணி தயார்?:

யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், கழக தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். எம்.ஜி.ஆர். ஆட்சி அமையும் காலம் நெருங்கி விட்டது. தொண்டர்களாக நீங்கள் எதிர்பார்த்த கூட்டணி அமையும். கூட்டணி விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் பணியை ஆரம்பியுங்கள். ஜனநாயக முறையில் திமுகவுக்கு வேட்டு வைக்கும் பணியை நீங்கள் ஆற்ற வேண்டும்.

மீ்ண்டும் புரட்சித் தலைவர் ஆட்சி அமைவது உங்களது கையில்தான் உள்ளது. அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றார்.

முன்னதாக கூட்டத்தில் ஜெயலலிதா பல்வேறு முழக்கங்களை முழங்க அதை கூடியிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திருப்பிக் கூறினர்.

நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும் என்று ஜெயலலிதா கூறியிருப்பதன் மூலம் அதிமுக- தேமுதிக கூட்டணி முடிவாகி விட்டதையே சூசகமாக அவர் கூறியிருப்பதாக தெரிகிறது.

எம்.ஜி.ஆருக்கு செங்கோல் வழங்கிய தினம்:

நிகழ்ச்சியின் இறுதியில் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஜெயலலிதாவுக்கு வெள்ளியால் ஆன செங்கோலை வழங்கினார்.

மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்போது எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கிய தினம் இன்று என்பதால் இந்த செங்கோலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...