For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிற்பட்டோர் இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு வீரமணி-ராமதாஸ் வரவேற்பு

By Chakra
Google Oneindia Tamil News

Veeramani
சென்னை: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால் இட ஒதுக்கீட்டின் அளவையும் 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் ஓர் அரிய தீர்ப்பை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்டத் திட்டம் ஒன்றை 1993ல் திராவிடர் கழகம் அப்பொழுது ஆட்சியிலிருந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் தந்தது.

அதன்படி, (1) ஏற்கெனவே அரசு ஆணையாக (ஜி.ஓ.) இருந்த இட ஒதுக்கீடு (கம்யூனல் ஜி.ஓவை) தனிச் சட்டமாக்கினால், மண்டல் கமிஷன் வழக்குத் தீர்ப்பு வந்த நாள் முதலே இது அமலில் (69%) கொள்ள முடியும்.

வெறும் ஆணைமூலம் 69 விழுக்காட்டைப் பின்னோக்கிச் செயல்படுத்த முடியாது. பின்னோக்கி (Retrospective Effect) தனிச்சட்டமானால்தான் அதைச் செய்ய முடியும் என்ற தனித்த (அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற நிலையில்) தீர்வு காண்பது,

(2) 9வது அட்டவணை (9th Schedule) பாதுகாப்பு என்ற புது நோக்கு- சமூக நீதிக்குப் பாதுகாப்பு என்பன இந்திய அரசியல் சட்டத்தின் அரசியல் சட்டத் திருத்தம் கொணர்ந்து, அதன்மூலம் செய்வது.

அதன்படி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனிக் கூட்டம் கூட்டப்பட்டு, சட்டம் இயற்றி, மத்திய அரசுக்கு அதை அனுப்பி, அங்கே நாடாளுமன்றத்தில் 76வது அரசியல் சட்டத்திருத்தமாக நிறைவேறியது.

பிறகு குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஒப்புதல் (Assent) கொடுத்து, 9வது அட்டவணையில் ஏற்றப்பட்டது.

(3) இதை எதிர்த்து வாய்ஸ் என்ற ஓர் அமைப்பின் சார்பில் முன்னேறிய ஜாதியினராகிய வழக்கறிஞர் கே.எம். விஜயன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இச்சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரினார்.

நீதிபதிகள் ஜீவன் ரெட்டி, பரிபூரண ஐயங்கார் ஆகியவர்கள் இச்சட்டத்திற்குத் தடை ஆணை (Stay Order) தராமல், 50 விழுக்காடு அமலில் இருந்தால், எத்தனை இடங்களைப் பொதுப் போட்டிக்கு நிரப்புவீர்களோ அதேபோல், கூடுதல் இடங்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை நீடித்து வந்தது. முழு விசாரணை- இறுதி விசாரணை நடந்து முடிந்த பிறகுதான் இச்சட்டம் செல்லுமா? செல்லாதா? 69 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நீடிக்குமா? என்பது முடிவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கபாடியா, ராதாகிருஷ்ணன், சுதந்தரகுமார் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் கூடுதல் அட்டர்னி ஜெனரல் கோபால் சுப்பிரமணியன், அட்வகேட் ஜெனரல் பி.எஸ். இராமன் ஆகியோர் இவ்வழக்கில் ஆராய வேண்டிய சட்ட அம்சங்கள் உள்ளன;

பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கும் வாய்ப்பு உள்ளது.

பல்வேறு பிரச்சனைகளை அலசி இறுதி விசாரணை இது என்பதால் வாதாட வேண்டியுள்ளது என்று விளக்கியதை முழுமையாக ஏற்று, இந்த 69 சதவீத சட்டம் மேலும் ஓராண்டு நீடிக்கலாம்; இது செல்லுமா, செல்லாதா என்று நாங்கள் இப்போது எந்தக் கருத்தையும் கூறமாட்டோம்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்தின் கருத்து, மொத்த ஜனத்தொகை, அதில் புள்ளி விவரங்கள், மாறுபட்ட எண்ணிக்கை, பிறகு நிறைவேறியுள்ள சமூகநீதி சம்பந்தமான அரசியல் சட்டத் திருத்தங்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து,

தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் (50 சதவீதத்திற்கு மேல் என்றாலும்கூட) இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதை ஓராண்டு அவகாசத்திற்குப் பின் வாதாடலாம் என்று மிக அருமையான, நியாயமான ஆணையினை வழங்கி, கோடானுகோடி ஒடுக்கப்பட்டோர் நெஞ்சில் பால் வார்த்துள்ளார்கள்.

இதற்காக தலைமை நீதிபதி, அவரது சக நீதிபதிகள் அனைவருக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி பந்து தமிழ்நாடு அரசிடம்தான் உள்ளது. காலதாமதம் செய்யாமல், தற்போதுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக்கமிஷனின் சரியான வழிகாட்டுதல், ஒத்துழைப்போடு, புள்ளி விவரங்களை, ' Socially and Educationally ' சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை விகிதாச்சாரம் 69 சதவீதத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்கள்மூலம் நாம் நிரூபித்து, வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக ஒளி மிகுந்து காணப்படுகிறது.

சந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் கமிஷன் வழக்கின் தீர்ப்பிலேயே (9 நீதிபதிகளைக் கொண்ட வழக்கிலேயே) 50 சதவீதத்துக்கு மேற்பட்டு இட ஒதுக்கீடு போகக் கூடாது என்பது பொது விதி போன்றது என்றாலும்கூட, பல்வேறு மாநிலங்களின் பல்வேறு மக்கள் தொகை இருந்தால் அதற்கு விதிவிலக்குப்போல இருக்கலாம் என்று குறிப்பிட்டு, ஏற்கெனவே வந்த பாலாஜி வழக்கினை ஓரளவு உடைத்திருக்கிறது.

அதைவிட முக்கியம், நமது இயக்கம் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், முதல்வர் கருணாநிதி ஆட்சிமூலம் அந்தந்த மாநில இட ஒதுக்கீட்டினை, அந்தந்த மாநில நிலைமைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளவு இருப்பது அவசியம் என்று வற்புறுத்திய கருத்து, உச்சநீதிமன்றத்தால், கொள்கை அளவில் இவ்வாணை மூலம் ஏற்கப்பட்டது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

நமது முதல்வர் அவர்களும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் முக்கிய செயலாளர் உள்பட அதிகாரிகளும், அட்வகேட் ஜெனரல் இராமன் அவர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

முதல்வர் அவர்கள் சூத்திர ஆட்சி-நாலாந்தர ஆட்சி என்று கூறிய நிலையில், இது தொடர்வது மூலம் சமூகநீதிக் கொடி தாழாது தமிழ்நாட்டில் என்பது உறுதியாகிறது.

சமூகநீதி வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று.

69 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டபோது முதல்வர் ஜெயலலிதா பார்ப்பனர். பிரதமர் நரசிம்மராவ் பார்ப்பனர்.
குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா பார்ப்பனர்.

மக்கள் கருத்துக்குமுன் எவரும் தலைவணங்கித்தான் ஆகவேண்டும் என்பது வரலாற்றுக் கட்டாயம் அல்லவா!"".

இவ்வாறு கூறியுள்ளார் வீரமணி.

ஜாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு-ராமதாஸ்:

இந் நிலையில் இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாய ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்கள் குறித்து அறிந்து கொள்ளவும், பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து திட்டமிடவும் அவர்கள் குறித்த கணக்கெடுப்பு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.

இப்போது 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிரான வழக்கிலும் இந்தக் கருத்தை அறிவுறுத்தல் என்ற வகையில் இல்லாமல், மாநில அரசின் கட்டாய கடமையாக உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்ற தீர்பு இருந்தாலும் இடஒதுக்கீடு சலுகையைப்பெறும் மக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால் இட ஒதுக்கீட்டின் அளவையும் 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்திக் கொள்ளலாம் என்பதற்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு சலுகை வழங்கப்பட வேண்டும் என்று பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 50 சதவீதத்துக்கு மேல் உள்ளனரா? என்பதை உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மாநில அரசு அளிக்க வேண்டும். இது இட ஒதுக்கீட்டு பிரச்சனையில் புதிய திருப்பம். இந்த வாய்ப்பை தமிழக அரசு நழுவ விட்டு விடக்கூடாது.

இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதியின் தாய்வீடு என்று தமிழகம் அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இங்கே அதிகபட்சமாக 69 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் 73 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை மாநில அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதற்கு உச்சநீதிமன்றம் ஓராண்டு அவகாசம் அளித்திருக்கிறது. ஆனால் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க ஓராண்டு அவகாசம் தேவையில்லை.

வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களைக் கொண்டு இந்தப் பணியை குறைந்த செலவில் ஒரு மாதத்தில் முடித்து விடலாம்.

தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைக் ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து அதற்கேற்ப பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்துக் கொள்ள உதவும். எந்த அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை மத்திய அரசு முடிவு செய்கிறது என்ற கேள்விகளுக்கும், அதனால் ஏற்படும் குழப்பங்களுக்கும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X