For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன்

By Chakra
Google Oneindia Tamil News

Elangovan
சென்னை: கடந்த 43 ஆண்டுகளாக மற்றவர்களுக்காக பாடுபட்டு வரும் தமிழக காங்கிரஸார் இன்னும் எத்தனைக் காலம் தான் மற்ற கட்சியினருக்காக உழைப்பது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பெரம்பூரில் திருப்பூர் குமரன் கல்வி அறக்கட்டளை சார்பில் காமராஜர் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில்,

ஒரு ஒற்றுமை விழாவாக, ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, 100 சதவீதம் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கும் விழாவாக இந்த விழா நடக்கிறது. நாங்கள் 3 பேரும் (தங்கபாலு, வாசன், இளங்கோவன்) ஒருசேர ஒரே வாகனத்தில் வந்தோம் என்றால் ஒத்த கருத்தோடு காமராஜர் ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பது தான் உண்மை நிலை.

காமராஜரைப்போல் மீண்டும் ஒரு தலைவரை சரித்திரம் பார்க்க முடியாது. கல்வி, தொழில், விவசாயம் ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தியவர் காமராஜர்.

காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் முதல் இயக்கமாக மாற வேண்டும் என்பதால் காமராஜரைப் போன்று ஒவ்வொருவரும் உழைப்பை தரவேண்டும். பிற கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இயக்கம் காங்கிரஸ். அந்த நிலை மாறி முதல் இயக்கமாக மாறவேண்டும் என்ற சூளுரை ஏற்போம் என்றார்.

இளங்கோவன் பேச்சு:

காமராஜரின் சிலையை திறந்து வைத்து இளங்கோவன் பேசுகையில்,

தங்கபாலு, வாசன், இளங்கோவன் மூவரும் ஒன்றாக இருப்பதே ஆச்சரியம் என்கிற அளவில் இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். எங்களுக்குள் யார் பெரியவர் என்ற எண்ணம் இல்லை. நாங்கள் காமராஜர், மூப்பனார் போன்ற பெரிய தலைவர்கள் அல்ல. நாங்கள் கடைநிலை ஊழியர்கள்.

காங்கிரஸில் கோஷ்டிகள் இல்லை என்று சொல்ல மாட்டேன். கோஷ்டிகள் இருக்கலாம், காந்தி காலத்தில், காமராஜர் காலத்தில் கூட கோஷ்டி இருந்தது. எந்தக் கட்சியில் தான் கோஷ்டிகள் இல்லை? மற்ற கட்சிகளைப்போல அண்ணன், தம்பி, தமக்கை கோஷ்டிகள் எங்களிடம் இல்லை.

தலைமைக்கு, தோழிக்கு கோஷ்டிகள் இல்லையா?. கம்யூனிஸ்ட் கட்சியில்கூட கோஷ்டிகள் இருக்கின்றன.

எத்தனை கோஷ்டிகள் இருந்தாலும் நாங்கள் அனைவரும் உண்மையான காங்கிரஸ்காரர்கள். தேசிய சிந்தனை உடையவர்கள். தேவைப்படும்போது நாங்கள் 3 பேரும் இணைந்து வருகிறோம். 4வதாக சிதம்பரமும் இணைந்தே வருவார்.

ஆனால், இப்போது எங்கள் மூவரையும் ஒன்றாக பார்த்ததில் சிலரின் உள்ளங்கள் பதைபதைக்கும். எத்தனை காலம்தான் எங்களுக்குள் பிரிவை உண்டாக்கி பலன் அடைய முடியும்.

தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்டால் மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போய்விடும் என்பதற்காக காமராஜர் திருமணம் செய்து கொள்ளவில்லை. காமராஜர் பயந்தது இன்று உண்மையாகி உள்ளது. நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. காமராஜருக்கு குடும்பம் இல்லை. அதனால் சொத்தும் சேர்க்கவில்லை.

நாங்களும் காமராஜர் ஆட்சிதான் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று தியாகிகள் உண்ணாவிரதம் இருந்தால் சிறையில் தள்ளுகிறார்கள். அங்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்களின் சிலைகளை வைத்துள்ளார்கள். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விரும்புகிறார்கள். அதனை நிறைவேற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

ஆலங்குளத்தில் காமராஜர் சிலை வைக்க அனுமதி கேட்டால் பூங்கோதை என்ற அமைச்சர் நந்தி போல குறுக்கே நிற்கிறார். எங்களுக்கும் காலம் வரும். அங்கே சிலை அமைப்போம்.

காமராஜரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்த வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. காமராஜர் உயிரோடு இருக்கும்போது அவர் ஹைதராபாத் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டியவர் இன்றும் இருக்கிறார். சாமானியனாகப் பிறந்து சாமானியனாக மறைந்தவர் காமராஜர். ஆனால், சாமானியனாகப் பிறந்து குபேரனாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சிலர் காமராஜரோடு தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்.

கூட்டணிக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. உள்ளுணர்வோடு கூறுகிறேன். 67ல் இருந்து ஆட்சியில் இல்லை என்றாலும் காங்கிரஸ்காரர்களுக்கு உணர்வு மழுங்கிவிடவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. நம் காங்கிரசையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கு பாடுபடுவதை 40 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று டெல்லியில் இருக்கும் தலைவர்களிடம் வற்புறுத்த வேண்டும்.

கூட்டணி என்பதற்காக கூட்டங்களே இல்லையென்றால் நாம் கூட்டணி கட்சியின் தேசியப் பிரிவாக இருக்க வேண்டியதுதான்.

சோனியாவும், ராகுல் காந்தியும் யாருடன் கூட்டணி என்று சொல்கிறார்களோ அவர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைப்போம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X