For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
பெங்களூர்: வருமானத்தைவிட அதிகமாக சொத்து குவித்த வழக்கில், சாட்சிகள் அளித்த அனைத்து தகவல்களையும் தமிழிலிலிருந்து ஆங்கிலத்துக்கு மீண்டும் மொழிபெயர்க்க உத்தரவிடக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை பெங்களூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் தினகரன், சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சாட்சியளித்த 42 பேரிடமும் நேற்று மறு விசாரணை நடக்க இருந்தது.

இந்நிலையில், சாட்சிகள் ஏற்கெனவே அளித்துள்ள வாக்குமூலங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணங்களை விசாரணையின்போது ஏற்கக்கூடாது என்றும் அதுவரை சாட்சிகளிடம் மறு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதா சார்பில் அவரது வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ஜெயலலிதாவி் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன்,

சாட்சியங்கள் முறையாக சட்டப்படி மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. நீதிபதியிடம் கையொப்பம் பெறவில்லை. எனவே, மீண்டும் அனைத்து ஆவணங்களையும் மொழிபெயர்க்க வேண்டும். சாட்சிகளிடம் ஒப்புதல் பெற்று அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, சாட்சிகள் அளித்த தகவல்கள் சரியாகத்தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா தரப்பு இந்தக் கோரிக்கையை வைக்கிறது. எனவே, திட்டமிட்டபடி சாட்சிகளிடம் மீண்டும் விசாரணையை இன்று முதலே தொடங்க வேண்டும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்தார். மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களில் சில தவறாக இருக்கலாம். அனைத்தும் தவறாக இருக்க சாத்தியமில்லை. எனவே, ஆவணங்களில் உள்ள தவறான தகவல்களை மட்டும் மீண்டும் சாட்சிகளிடம் கேட்டு சரிபார்த்து மொழிபெயர்க்க வேண்டும்.

நீதிபதி, வழக்கறிஞர்கள், சாட்சிகளின் முன்னிலையில் மொழிபெயர்ப்பு செய்யலாம். இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தவறின்றி மொழிபெயர்ப்பு செய்வோரின் பெயர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இதையடுத்து விசாரணைக்காக ஆஜராகியிருந்த நாகேஸ்வரராவ், சிவாஜிராவ், கோபிநாத் மற்றும் அமானுல்லா ஆகிய 4 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணையைத் துவங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதாவின் வழக்கறிஞர், எங்களது இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். எனவே, அதுவரை சாட்சிகளிடம் மறு விசாரணையை நடத்தக் கூடாது என்றார்.

இதையடுத்து சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்துவதை ஆகஸ்ட் 6, 9,11 மற்றும் 13ம் தேதிகளுக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

சசிகலா மதுபான ஆலை வழக்கு வாபஸ்:

இந் நிலையில் தமிழக அரசை எதிர்த்து சசிகலா குடும்பத்துக்கு சொந்மான மிடாஸ் மதுபான ஆலை சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிடாஸ் மதுபான தொழிற்சாலையின் இயக்குனர் ராவணன் 2006ல் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.

அதில், எங்கள் தொழிற்சாலையின் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே அரசிடம் இருந்து கூடுதலாக சுத்திகரிக்கப்பட்ட எரி சாராயம் முதல் காலாண்டில் 47 லட்சம் லிட்டரும், இரண்டாவது காலாண்டில் 34 லட்சம் லிட்டரும் கூடுதலாக கேட்டு இருந்தோம். ஆனால், அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. கூடுதலாக சுத்திகரிக்கப்பட்ட எரி சாராயம் சப்ளை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சாலை சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விருப்பம் இல்லை. எனவே திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் வழக்கு தொடரவும் அனுமதிக்க வேண்டுகிறோம் என்றார்.

இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதித்தது.

ஜெ.வுடன் தெலுங்கு தேசம் நிர்வாகிகள் சந்திப்பு:

இந் நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஒய்.எஸ். செளத்ரி, சட்டப்பேரவை உறுப்பினர் பி. மஸ்தான் ராவ் ஆகியோர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்துப் பேசினர்.

கோதாவரி ஆற்றின் குறுக்கே மகாராஷ்டிர அரசு பாப்லி அணை கட்டுவது குறித்தும், இதனால் ஆந்திர மாநிலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அணையை பார்வையிடச் சென்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது ஆகியவை பற்றியும் அவர்கள் ஜெயலலிதாவிடம் விவரித்தனர்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி பிரச்னை எழுப்ப உள்ளதாகவும், அப்போது அதிமுக ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X