For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்கள் மைனாரிட்டி அரசுதான்-மைனாரிட்டிகளுக்கான அரசு!-கருணாநிதி ஆவேசப் பேச்சு

Google Oneindia Tamil News

Karunanidhi
கோவை: நாங்கள் மைனாரிட்டியோ, மெஜாரிட்டியோ. நாங்கள் நாங்கள்தான். திராவிட நாட்டு கொள்கைக்கு, திராவிட சமுதாய கொள்கைக்கு, திராவிட முன்னேற்றக்கழக கொள்கைக்கு, நீ சொல்வதுபோல் மைனாரிட்டி, மெஜாரிட்டியோ, நாங்கள் வாழ்ந்த கொள்கைக்கு அத்தாரிட்டி என்பதை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக்கொள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பதிலளித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

கோவை திமுக சார்பில் வ.உ.சி. திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக நடைபெறும் மாநாடு போன்று, இங்கே அளவுக்கு மீறி வ.உ.சி. திடல் நிரம்பி வழிகின்ற அளவுக்கு கூட்டம். இங்கு நிரம்பி வழிந்து பக்கத்திலே உள்ள சாலைகளில் எல்லாம் அணி அணியாக செல்கின்ற காட்சியை பார்க்கும் போது மீண்டும் கடந்த மாதம் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறதோ என்று நானே சந்தேகப்படுகின்ற அளவுக்கு நீங்கள் பெருவெள்ளமாக, குழுமியிருக்கின்றீர்கள்.

இந்த கூட்டத்தில் நம்முடைய துணை முதல்வர் அவர்களும், மற்றும் கழகத்தினுடைய முன்னணி வீரர்களும் ஆற்றிய உரைகளை எல்லாம் நீங்கள் கேட்டீர்கள். அனல் பறந்தது. தனல் ததும்பியது. புனல் பாயுமா? என்று எதிர்பார்த்த நேரத்தில். இல்லை, பாய்ந்த புனலும் கொதி நீராகத்தான் பாய்ந்தது. நான் தம்பி ஸ்டாலினுடைய பேச்சைத்தான் குறிப்பிடுகின்றேன்.

ஏன் இவ்வளவு கோபம், சினம், ஆத்திரம்?

இவ்வளவு கோபம், இத்துணை சினம், எந்த அளவுக்கு ஆத்திரம்? பேசிய நண்பர்களுக்கு எல்லாம் ஏற்பட என்ன காரணம்? என்று நான் சிந்தித்தேன். நான் சிந்தித்தது போலவே, இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற நீங்களும் சிந்தித்து இருப்பீர்கள். முன்பு இங்கு ஒரு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு போட்டியாக, ஒரு கூட்டம் நடைபெற்றதாகவும், அதிலே என்னையும், உங்களால் கட்டிக் காக்கப்படுகின்ற கழகத்தையும் காரசாரமாக வாயில் வந்தவாறெல்லாம் பேசினார்கள்.

அதை ஒன்றிரண்டு கயிறு திரிக்கின்ற பத்திரிகைகள் தவிர, பத்திரிகை தர்மத்தை உணர்ந்து கொள்வதாக நினைக்கும் எந்த பத்திரிகையும் கண்டிக்கவில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். நானும் அறிவேன்.

செம்மொழி மாநாடு நடைபெற்ற போது, மாநாட்டுக்கு 10 நாளைக்கு முன்பு இங்கு வந்தேன். வந்த போது, எல்லா கம்பங்களிலும், கழகத்தினுடைய இரு வண்ண கொடிகளும், கழக தலைவர்களுடைய படங்களும் அமைக்கப்பட்டு அதிலே விளம்பரங்கள் செய்யப்பட்டு இருந்தன. அதைப்பார்த்ததும் எனக்கு ஒரு உணர்வு தோன்றியது. இந்த மாநாடு உலகத்திலே இருக்கிற எல்லா தமிழர்களையும் அழைத்து தமிழர்களுடைய மாநாடாக நடத்தப்படவேண்டும் அல்லவா? இங்கே கட்சி பிரச்சினைக்கு இடம் தரலாமா? என்ற அந்தக் கேள்வி உள்ளத்திலே எழுந்து, சென்னைக்கு சென்றதும் ஒரு அறிக்கை தந்தேன்.

நம்முடைய கழக தோழர்கள் தயவு செய்து, மாவட்ட கழக செயலாளர்கள் ஆனாலும், வட்டக்கழக, ஒன்றிய கழக, கிளைக்கழகங்களுடைய தம்பிமார்கள் ஆனாலும் இந்த மாநாட்டை கட்சி சார்பற்ற தமிழ்த்தாயை வணங்குகிற, தமிழ்த்தாயை போற்றுகிற, தமிழுக்கு ஆக்கமும், ஊக்கமும் தேடுகிற மாநாடாக நடத்த வேண்டும்.

வருகிற அத்தனைபேரும், சொற்பொழிவாளர்கள் ஆனாலும், கவிஞர்கள் ஆனாலும், புலவர்கள் ஆனாலும் தமிழைப்பற்றி ஆய்வு செய்து தமிழின் வல்லமையை, தமிழின் வளத்தை, தமிழின் அழகை, தமிழை வாழ்த்தவேண்டிய, வளர்க்கவேண்டிய பொறுப்பை, எப்படி நிறைவேற்றுவது என்பது பற்றித்தான் கவலை கொண்டு பணியாற்ற வேண்டும் அல்லாமல், கழக கொடியை எங்கும் நடலாம் என்று ஆலோசித்து நீங்கள் மாநாடு நடத்தினால் நான் கவலை கொள்வேன் என்று அறிக்கை விடுத்தேன்.

அறிக்கை விடுத்தது மாத்திரம் அல்ல, கழக தம்பிமார்களை, செயல்வீரர்களை எல்லாம் கேட்டுக்கொண்டேன். என்னுடைய வேண்டுகோளை கட்டளையாக ஏற்றுக்கொள்கிற என் தம்பிமார்கள், அடுத்த ஒரு வாரம் கழித்து இங்கு நான் வந்து பார்த்தால் ஒரு கம்பத்திலாவது நம்முடைய கழக கொடி இல்லை. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய படத்தைக்கூட எடுத்துவிட்டார்கள். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

பேராசிரியரிடம் சொன்னேன், பார்த்தீர்களா?, நம்முடைய கழக கண்மணிகள் வேண்டுகோளைக்கூட கட்டளையாக ஏற்று எப்படி பொறுப்புடன் நடந்துகொள்கிறார்கள் பார்த்தீர்களா? என்று சொன்னேன். கழக கொடிகளை கட்டாதே என்று சொன்னது யார்? கழக கொடி ஏந்தி கட்சியை வளர்த்த கருணாநிதி. கழக தோரணங்களை தொங்கவிடாதே என்று சொன்னது யார்? கழக தோரணங்களை தொங்கவிட்டு, தஞ்சை மாவட்டத்திலே வானுயர வளர்ந்த கருணாநிதி, தோரணங்களை தொங்கவிடாதீர் என்று சொன்னான்.

அப்படி சொன்னதற்கு, கோவை மாவட்டத்திலே உள்ள, தமிழகத்திலே உள்ள கழக கண்மணிகளே! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நம்முடைய கொடியில் நமது கழக கொடியை கட்டாதே என்று தலைவரே சொல்வதா? என்று ஒரு கணம் நீங்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். நீ ஒரு கணம் வருந்தியிருக்கக்கூடும்.

அப்படி ஒரு கணம் நீங்கள் புண்ணாகி இருந்திருக்கக் கூடும். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அந்த மன்னிப்பை, எந்த வடிவத்திலே இங்கே கேட்டுக் கொள்கிறேன் என்றால், தாராளமாக கொடிகளை கட்டுங்கள், ஏராளமாக தோரணங்களை தொங்க விடுங்கள், எங்குபார்த்தாலும் பெரியார் படமும், அண்ணா படமும், கழக தலைவர்களின் படமும் ஒட்டப்பட்டு இருக்கட்டும்.

திமுகவை யாரும் வீழ்த்த முடியாது

செய்தீர்கள் என்றால், நாம் நம்மை யாரோ வீழ்த்துபவர்களுக்கு இடம் கொடுக்கப் போகிறவர்கள் அல்ல. யாராலும் நம்மை வீழ்த்த முடியாது. நாம் வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் எழக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய இயக்கம்.

திராவிட முன்னேற்ற கழகம் நடத்துவது அரசியல் நிகழ்ச்சிகள் அல்ல. சரித்திர சுவடுகள். வரலாற்று ஏடுகள். அந்த வரலாற்று ஏடுகளிலேதான், கடந்த மாதம் அந்த ஏடு செம்மொழி ஏடாக இங்கே வெளிவந்தது. அந்த ஏடு மீண்டும் அரசியல் ஏடாக, திராவிடத்தை தட்டி எழுப்புகின்ற ஏடாக, இன்றைக்கு உங்களுக்கு படிக்க கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாநாட்டைக் கண்டு மனம் மகிழ்ந்தவர்கள் மலேசியாவில், சிங்கப்பூரில், கலிபோர்னியாவில்.. கடல் கடந்த நாடுகளில் எல்லாம் ஏராளமானவர்கள் உண்டு. லட்சக்கணக்கிலே மக்கள் கூடிய அந்த மாநாட்டில் ஒரு வெளிநாட்டை சேர்ந்த புலவர் ஒருவருக்கு- பேராசிரியர் அஸ்கோ பர்போலோவுக்கு; பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. அந்த விருதுக்கு கருணாநிதி விருது என்று பெயர்.

எனது சொத்து கட்சிக் கொடி மட்டுமே

ஏன் அந்த பெயரில் விருது வழங்கினார்கள் என்றால், உங்களுக்கு தெரியும். எனக்கு என்னுடைய வீட்டில் உள்ள சொத்துக்கள். என்னுடைய ஸ்தாபனங்களில் உள்ள உடைமைகள் எல்லாம் பங்குபிரிக்கப்பட்டபோது, என்னுடைய மனைவிமார்களுக்கு இவ்வளவு ரூபாய், அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, முத்து இவர்களுக்கு எல்லாம் இவ்வளவு ரூபாய் என்று ஒவ்வொவருக்கும் கொடுத்ததுபோல், மிச்சமாக நான் வைத்திருந்தது ஒரேயொரு வீடுதான்.

கோபாலபுரத்தில் உள்ள வீடு. அந்த வீட்டையும் எனக்கு பிறகு, மருத்துவமனைக்கு கொடுத்துவிடுங்கள் என்று, ஒரு அறக்கட்டளையை நியமித்து, அந்த அறக்கட்டளைக்கு எழுதிவைத்துவிட்டேன். அதுதான் என்னுடைய வரலாற்றிலே ஒரு முக்கியமான இடம். ஏன் சொல்ல வந்தேன் என்றால், அந்த வீடு, வாசல், சொத்து இவைகளைப்பற்றி எல்லாம் நான் என்றைக்கும் கவலைப்பட்டதில்லை.

நான் சொத்தாக நினைப்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடிதான். நான் சொத்தாக மதிப்பது நான் ஆபரணமாக அணிய விரும்புவது, மிசா காலத்திலே சென்னை சிறைச்சாலையிலே ஸ்டாலினை அடித்து உதைத்து, உடம்பெல்லாம் தழும்புகளாக ரத்தக்காயங்களாக இருந்ததே, அதைப்பார்த்த நான் அதைத்தான் நகைகளாக ஆபரணங்களாக கருதியவன்.

அழகிரி, முத்து, ஸ்டாலின் முக்கியமல்ல

அதைப்போல அழகிரிக்கோ, முத்துவுக்கோ, ஸ்டாலினுக்கோ, இவர்களையெல்லாம் நான் பலியாக்கி விட்டுத்தான் திராவிட முன்னேற்ற கழகத்தை, தமிழகத்தை வளர்க்க வேண்டும் என்றால், இந்த இரண்டிலே எதைச் செய்வாய் என்று கேட்டால், நான் திராவிட முன்னேற்ற கழகத்தை வளர்க்க முற்படுவேனே அல்லாமல் இவர்களை காப்பாற்ற, இவர்களை வாழ வைக்க நான் முற்படுபவன் அல்ல. ஏனென்றால் தன்னுடைய மகனையே தேர்க்காலில் இட்டு பலிகொடுக்க சொன்ன மனு நீதிசோழன் பிறந்த திருவாரூரிலே பிறந்தவன் நான்.

என்னைப்பார்த்து, உங்களையெல்லாம் கூட்டி வைத்துக்கொண்டு இந்த கோவை நகரத்தில்-எந்த கோவை நகரத்தில்? 1947-ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்ஸில் எந்த எம்.ஜி.ஆரோடு சேர்ந்து அவர் அர்ச்சுணனாக நடித்த படத்தில் அபிமன்யுவுக்கு வசனம் எழுதினேனோ, அந்த ஜுபிடர் பிக்சர்ஸ் இருந்த கோவையில், எந்த ஜுபிடரில் ஏ.ஏ.சாமி அவர்களிடத்திலே துணை எழுத்தாளராக சேர்ந்து ஒவ்வொரு நாளும் பனிரெண்டு மணிக்கு, ஒரு மணிக்கு என்று கோவை ராமநாதபுரம் மாடர்ன் தியேட்டர்சிலே இருந்து, சிங்கநல்லூரிலே இருக்கிற என் இடத்துக்கு இரவு 12 மணியென்றும், ஒரு மணியென்றும் சென்று, என்னுடைய எழுத்துப்பணிகளை ஆற்றிக்கொண்டு இருந்தேனோ, எந்த சிங்கநல்லூரிலே இருந்து பகல் நேரத்திலே, இரவு நேரத்திலே வெளியே வந்தால் சில தீவிரவாதிகள், அங்கே சூழ்ந்து கொண்டு உயிருக்கே ஆபத்து விளைவிப்பார்கள் என்று அண்ணாசாமி என்ற நண்பரும், தம்பி ராமநாதனும், மறைந்த ராஜமாணிக்கமும், இவர்களெல்லாம் அறிவுரை கூறியதற்கேற்ப, அதைக்கேட்டு அப்போதும் உயிர்போனால் பரவாயில்லை என்று கட்சி பணியாற்றிக்கொண்டு இருந்த கருணாநிதி. அந்த கருணாநிதியை பார்த்து இங்கே ஒருவர், மைனாரிட்டி அரசு நடத்துகிற கருணாநிதி என்று சொன்னதாக, பூமிக்கும் ஆகாயத்திற்கு
மாக நம்முடைய பொன்முடி இங்கே குதித்தார்.

இது மைனாரிட்டி அரசுதான்

எப்படி அவர் சொல்லலாம் என்று தம்பி ராஜா இங்கே குதித்தார். இது நியாயமா? என்று தம்பி ஸ்டாலின் கேட்டார். நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இது மைனாரிட்டி அரசு. அம்மையார் ஜெயலலிதா சொல்லுகிறார். நான் அவரை அம்மையார் என்றுதான் அழைப்பேன். அவர் வேண்டுமானால் என்னை கருணாநிதி என்று சொல்லட்டும். நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரீகம் கற்றவன்.

அதனால் கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லட்டும். கலைஞர் என்று சொன்னால் அல்லது முதல்வர் என்று சொன்னால் ஒருவேளை நீங்கள் புரிந்து கொள்ளமாட்டீர்களோ என்பதற்காக கருணாநிதி என்று சொன்னால்தான் உங்களுக்கு புரியும் என்று சொன்னார் என்று நான் நினைத்துக்கொள்கிறேன். கருணாநிதி என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல. கருணை மிகுந்த நிதி. அப்படி எடுத்துக்கொள்கிறேன். எப்படிவேண்டுமானாலும் சொல்லட்டும்.

பொறுமையின் பொக்கிஷம் அண்ணாவிடத்திலே பயின்றவர்கள் நாங்கள். ஆகவே மைனாரிட்டி அரசு என்று சொன்னால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அந்த காலத்தில் இருந்து மைனாரிட்டிகளான கிறிஸ்தவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கும் பாடுபடக்கூடிய இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம் அதனால் எங்களை மைனாரிட்டிகள் என்று சொல்வதால்-எங்களுக்கு ஒன்றும் கூச்சம் இல்லை, வெட்கம் இல்லை. கோபம் இல்லை, வருத்தம் இல்லை.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி செய்பவர்களில் முஸ்லிம்களின் சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதற்கு காரணம் இஸ்லாமியர்களுக்கு படிப்பறிவு இல்லாததுதான் காரணம். படிப்பறிவு இல்லாததால் அவர்களுக்கு பணி அதிகம் கிடைக்கவில்லை என்ற வாதத்தை தொடங்கி, மொத்தம் உள்ள 100 கோடி இந்தியர்களில் முஸ்லிம்கள் 15 கோடிபேர். இந்த 15 கோடி பேரில் 4 கோடி பேர் மட்டுமே படித்து இருக்கிறார்கள்.

6 முதல் 14 வயதுவரை உள்ள முஸ்லிம் சிறுவர்களில் 25 விழுக்காடு பள்ளிக்கூடமே போகாதவர்கள். முஸ்லிம்கள் அதிகம் வாழும் 12 மாநிலங்களில் அரசு பணிகளில் 6 விழுக்காடு மட்டுமே பணியில் உள்ளார்கள். இன்னொன்று சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் ஐ.ஏ.எஸ். படித்தவர்கள் மொத்தம் 4,790 பேர். இதில் முஸ்லிம்கள் வெறும் 108 பேர்தான் இருக்கிறார்கள் என்று கோபண்ணா நடத்தும் காங்கிரஸ் ஏடு தேசிய முரசு எழுதுகிறது.

நான் சொல்கிறேன் இப்போது, முஸ்லிம்கள் 4 ஆயிரம் பேர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு ஆயிரம் பேராவது இருக்க வேண்டும். ஆனால் வெறும் 108 பேர்தான் இருக்கிறார்கள் என்றால், நாம் மைனாரிட்டி சமுதாயத்துக்காக குரல் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா?. எங்கே குரல் கொடுத்துக்கொண்டு போகிறான் என்று, மைனாரிட்டி அரசு என்று இப்போது ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இங்கே வசைபாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நாங்கள் மைனாரிட்டியோ, மெஜாரிட்டியோ. நாங்கள் நாங்கள்தான். திராவிட நாட்டு கொள்கைக்கு, திராவிட சமுதாய கொள்கைக்கு, திராவிட முன்னேற்றக்கழக கொள்கைக்கு, நீ சொல்வதுபோல் மைனாரிட்டி, மெஜாரிட்டியோ, நாங்கள் வாழ்ந்த கொள்கைக்கு அத்தாரிட்டி என்பதை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக்கொள்.

உன் வயது என்ன, என் வயது என்ன?

நீ, நான் என்ற ஒருமையில் பேசிக்கொள்வதாக கருதிக்கொள்ளாதே. ஏன் என்றால் உன் வயது, என் வயது என்ன?. எனக்கு 87. உனக்கு 57 கூட இல்லை. அதைவிட குறைவுதான். மரியாதை குறைவாக பேசிக்கொள்வதாக எண்ணிக்கொள்ளாதே. சிறுவயது என்ற காரணத்தால், சிறுவயதில் இருந்தே உன்னை தெரியும் என்ற காரணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக்கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரை பார்த்து, நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம். உன்னைப்போல பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். அந்த வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா?. நான் மரியாதையை தேடி அலைகிறேன் என்று யாராவது தயவு செய்து எண்ணிக்கொள்ளாதீர்கள்.

நான் பிறந்து வளர்ந்ததே சுயமரியாதை இயக்கத்தில்தான். நான் என்னுடைய பிள்ளை பிராயத்தில் என்னுடைய குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று என்னுடைய வீட்டார் அனுப்பியபோது, குலத்தொழிலை செய்ய வேண்டுமானால் இடுப்பிலே வேட்டியை எடுத்து கட்டிக்கொள்ள வேண்டும். தோளிலே துண்டை போடக்கூடாது என்ற நெறிமுறைகள் எல்லாம் இருந்த காரணத்தால், நான் அப்பா,அம்மா இருவரையும் பார்த்து நான் சுய மரியாதையுடன் வாழ விரும்புகிறேன். துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொள்வேனே தவிர, துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக்கொள்ள மாட்டேன் என்று சொல்லி அந்த தொழிலே வேண்டாம் என்று வந்தவன்தான்.

இன்றைக்கு நீங்கள் எல்லாம் ஏற்றுக்கொண்டு இருக்கின்ற அளவிற்கு தலைவனாக ஆகி இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் சுயமரியாதை உணர்வுதான். நான் பெரியாரின் பிள்ளை. அண்ணாவின் தம்பி.

பத்திரிகைகள் கூட நாளைக்கு இந்த கூட்டத்தை பற்றி என்ன எழுதுவார்கள் என்று எனக்கு தெரியும். என்ன எழுதுவார்கள்? கருணாநிதி கோவைக்கு வந்தார். வழக்கமாக பேசுகிற இடம் சிவானந்தகாலனி. அங்குதான் பேசுவார். திடீரென்று இடத்தை மாற்றிக்கொண்டு இங்கு வந்ததற்கு காரணம் என்ன?. நான் கோயமுத்தூரிலே இந்த பத்திரிகை ஆசிரியர்கள் எல்லாம் பிறக்காததற்கு முன்பே கூட்டத்தில் பேசியவன். ஒருவேளை இவர்கள் பிறந்து, தாயிடம் பால்குடித்துக்கொண்டு இருந்தார்களோ என்னவோ அப்போதே கூட்டத்தில் பேசியவன்.

இன்னும் சொல்லப்போனால் வ.உ.சி. மைதானத்தில் கூட்டம்போட எல்லா கட்சிகளும் பயந்தபோது, பிரதமர் ராஜீவ் காந்தி ஒருவர்தான் இந்த மேடையிலே பேசினார். இதற்கு 5 ஆயிரம் ரூபாய் வாடகை என்று அப்போது சொன்னார்கள். இந்த மேடையிலே முதன்முதலாக பேசியவன் இந்த கருணாநிதிதான். அதற்கு பிறகு பலமுறை இந்த மேடையிலே பேசி இருக்கிறேன். இன்றைக்கும் பேசுகிறேன். நான் சிவானந்தகாலனியில்தான் பேசுவேன். ஏன் என்றால் இந்த அம்மையாருக்கு பயந்து கொண்டு, கூட்டம் சேருமோ, சேராதோ என்று பயந்து கொண்டு அவர் வ.உ.சி. திடலுக்கு வரமாட்டார் என்று கூறி இருப்பார்.

வ.உ.சி. எனக்கு பிடிக்காதா?. வ.உ.சி. இழுத்த செக்கை, அது எங்கே இருக்கிறது என்று கூட தேடாமல் விட்டுவிட்டார்கள். நான் ஆட்சிக்கு வந்தபிறகு அதனை தேடி பிடித்து, கோயமுத்தூர் சிறைச்சாலையில் இருந்த செக்கை இழுத்து வந்து கிண்டியில் வைத்தவன் நான்தான். நீ சொல்கிறாய் என்னை பார்த்து மைனாரிட்டி என்று. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

கவலைப்பட வேண்டியவர்கள் நீங்கள். எங்களை பார்த்தா மைனாரிட்டி என்றாய்?. நாங்கள் இவ்வளவு பேர் கருணாநிதியை ஆதரிக்கும்போது, கழகத்தை ஆதரிக்கும்போது எங்களை பார்த்தா மைனாரிட்டி கும்பல் என்றாய் பார், பார். நாங்கள் மெஜாரிட்டி ஆகி காட்டுகிறோம். எங்களுடைய மெஜாரிட்டியில் எங்கே போய் விழுவாய் என்று தெரியாது என்று அந்த அம்மையாருக்கு பாடம்போதிக்கின்ற வகையிலே, இந்த கூட்டத்திலே இருக்கின்ற உண்மை தமிழர்கள், உண்மையான திராவிடர்கள், சூளுரை மேற்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மீண்டும், மீண்டும் உங்களை சந்திக்க வேண்டிய வாய்ப்பு எனக்கு ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X