For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி பெட்டர்: குஷ்வந்த் சிங்

By Chakra
Google Oneindia Tamil News

Kushwanth Singh
டெல்லி: மூத்த பத்திரிக்கையாளர் ஹும்ரா குரேஷியுடன் இணைந்து 'Absolute Khushwant: The Low Down on Life, Death and Most Things in-between' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் 95 வயதான பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங். அதில் அவர் கூறியுள்ள சில கருத்துக்கள்...

இந்திரா காந்தி தனது தந்தை நேருவைப் போலவே வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகைகளைத் தந்த பிரதமர் ஆவார். ஊழல், லஞ்ச லாவண்யத்தைப் பற்றி கவலையே படாத இந்திராவுக்கு ஜனநாயகத்தில் நம்பிககை இருந்ததில்லை. அவர் வைத்தே சட்டம் என்பது மாதிரி சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்.

அடுத்து தனது குடும்பத்தினரே பிரதமர் மற்றும் கட்சித் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று திட்டம் போட்டு செயல்பட்டவர். பத்திரிக்கைகளை மிரட்டி பணிய வைத்தவர். மேலும் பழிவாங்கும் சிந்தனைகளும் அவருக்கு மிக அதிகம்.

அதே நேரத்தில் இந்திரா மிகச் சிறந்த தேச பக்தை, தீவிரமான மதசார்பின்மைவாதி. பஞ்சாப் விவகாரத்தில் அவர் முட்டாள்தனமாக நடந்து கொண்டு எதிரிகளை சம்பாதித்துக் கொண்டார். அவர் கொல்லப்பட்ட விதம் மிகக் கொடுமையானது. அவர் நிச்சயம் சீக்கியர்களுக்கு எதிரானவர் அல்ல. சீக்கிய பொற் கோவிலுக்குள் அவர் ராணுவத்தை அனுப்பியதற்கு அவரது தவறான ஆலோசகர்கள் தான் காரணம். அதில் ஒருவர் மோனா சர்தார்.

இந்திராவும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் கொண்டு வந்த எமர்ஜென்சியை நான் ஆதரித்தேன். அதை இப்போதும் நான் தவறாகக் கருதவில்லை. நாட்டின் சில முக்கியமான குறைகளாக் களைய அந்த அவசரகால நிலை நிச்சயம் உதவியது.

சஞ்சய் காந்தி சொல்வதை செய்பவர். அவர் மனசாட்சிப்படி செயல்பட்டவர். நாட்டை உடனடியாக அப்படியே மாற்றிப் போட வேண்டும் என்று அவசரப்பட்டவர். அவரிடம் பொறுமை மட்டும் தான் இல்லை. குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயமாக்கி அமல்படுத்த முயன்றது, குடிசைகளை இரவோடு இரவாக இடித்துத் தள்ளியது என்று அராஜக செயல்களை அவர் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், நாட்டை மாற்ற வேண்டும் என அதீத ஆர்வத்தில் அவர் செய்த செயல்கள் தான் அவை.

சஞ்சய் எனக்கு நெருக்கமானவராக இருந்தார், எனக்கு நிறைய உதவிகள் எல்லாம் செய்தார், பிர்லாவிடம் பேசி என்னை இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியராக நியமிக்க வைத்தார், என்னை ராஜ்யசபா எம்பியாக்கினார் என்பதற்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே அவருக்கு ஒரு தீர்க்கதரிசனம் இருந்தது. ஆனால், அதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

ராஜிவ் காந்தியைப் பொறுத்தவரை ஒரு ஸ்கவுட் பாய் மாதிரி தான். அவர் ஒரு தலைவரே அல்ல. சஞ்சய் போல பல பரிமாணம் கொண்ட நபரும் அல்ல. அவருக்கு அரசியலும் வரவில்லை எதுவும் தெரியவில்லை. தனது தாயின் வழியில் நடந்தார். அதே பாணியில் பல தவறுகளையும் செய்தார். ஷா பானு வழக்கு, பாபர் மசூதி விவகாரங்களை மிகத் தவறாக கையாண்டார். அவர் செய்த தவறுகளின் விளைவுகள் மிக மிக மோசமானவை, நீண்ட காலம் நாட்டை பாதித்தவை.

சஞ்சயின் மனைவியான மேனகா காந்தியும் ஒரு மட்டமான அரசியல்வாதி தான். அவரும் அவரது குடும்பமும் என்னை அவர்களுக்கு வசதியாக பயன்படுத்திவிட்டு தூக்கி வீசியவர்கள்.

மேகனாவின் மகன் வருண் வளர்க்கப்பட்ட விதமே சரியில்லை. இதனால் தான் முஸ்லீம்களை கையை வெட்டுவேன் என்று பேசும் அளவுக்கு போய்விட்டார். இவரைப் போன்ற ஒரு நபருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதே தவறு. இதை அவர் சார்ந்துள்ள கட்சி உணர வேண்டும். அவரை தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க வேண்டும். வளர்ப்பு சரியில்லாத வருண் போன்றவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தானவர்கள்.

ஆனால், ராகுல் காந்தி பரவாயில்லை. தனது தந்தை ராஜிவை விட நல்ல திறமைசாலியாக, புத்திசாலியாகவே இருக்கிறார். அவருக்கும் நல்ல தீர்க்க தரிசனம் இருக்கிறது.

இந்தியாவுக்கு இதுவரை கிடைத்த பிரதமர்களிலேயே மிகச் சிறந்தவர் மன்மோகன் சிங் என்பது என் கருத்து. நேருவை விட இவரை சிறந்த பிரதமராக நான் கருதுகிறேன். நேருவுக்கு மக்களைக் கவரும் திறமை இருந்தது. ஆனால், அமெரிக்காவை தேவையில்லாமல் எதிர்த்தார். கண்ணை மூடிக் கொண்டு சோவியத் யூனியனை ஆதரித்தார். தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகைகளை அள்ளித் தந்தவர்.

மன்மோகன் சி்ங்குக்கு தெளிவான, சுதந்திரமான மனமும் யாருக்கும் சலுகை காட்ட வேண்டிய அவசியம் இல்லாத சூழலும் உள்ளது.

எனது வீட்டின் படிப்பறையில் இந்திரா, அன்னை தெரசாவின் படங்களைத் தான் வைத்துள்ளேன். இவர்கள் தான் என்னை மிகவும் கவர்ந்த இரு மனிதர்கள். அதே போல காந்தியையும் நான் அதீதமாக நேசிக்கிறேன். எனக்கு ஏதாவது குழப்பமான நிலைமை வந்தால், இந்த நேரத்தில் காந்தி என்ன முடிவெடுப்பார் என்று கற்பனை செய்து பார்த்து அந்த முடிவையே எடுக்கிறேன்.

ரூ.2 லட்சத்தை திருப்பி கொடுத்த மன்மோகன் சிங்:

1999ம் ஆண்டு தேர்தலில் தெற்கு டெல்லி எம்.பி. தொகுதியில் மன்மோகன் சிங் போட்டியிட்டார். அப்போது ஒருநாள் அவர் போனில் என்னை தொடர்பு கொண்டு உதவி கேட்டார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தேர்தல் பிரசாரம் செய்ய டாக்சிகளை வாடகைக்கு எடுக்கவேண்டும். ரூ.2 லட்சம் தர முடியுமா என்று கேட்டார். அந்த அளவுக்குக் கூட பணம் இல்லாமல் அவர் இருந்தார்.

பணம் தருவதாக நான் கூறினேன். உடனே அவர் தன் மருமகனை என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவரிடம் நான் ரூ.2 லட்சத்தை ரொக்கமாக கொடுத்தேன்.

அந்த தேர்தலில் மன்மோகன் சிங் தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்த சில தினங்கள் கழித்து அவர் என்னை போனில் தொடர்பு கொண்டு உங்களை சந்திக்க வேண்டும், எப்போது வரட்டும்? என்று கேட்டார்.

நான் சொன்னபடி என் வீட்டுக்கு வந்தார். கையில் சிறு பொட்டலம் வைத்திருந்தார். அதை என்னிடம் கொடுத்த அவர், இதில் நீங்கள் கொடுத்த ரூ.2 லட்சம் உள்ளது. நீங்கள் கொடுத்த பணத்தை பிரசாரத்துக்காக நான் பயன்படுத்தவில்லை என்றார்.

அவர் கொடுத்த பொட்டலத்தை வாங்கி நான் பிரித்துப் பார்த்தேன். அதில் நான் கொடுத்த ரூபாய் நோட்டுக்கள் அப்படியே இருந்தன. இந்த காலத்தில் இப்படி ஒரு அரசியல்வாதியா? என்று எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

இவ்வாறு தனது புத்தகத்தில் கூறியுள்ளார் குஷ்வந்த் சி்ங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X