For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகமும் ஆந்திராவும் முந்திவிட்டன: குறுக்கே நிற்பது நியாயமா?-ஜெவுக்கு கருணாநிதி கேள்வி!

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: கர்நாடகாவும் ஆந்திராவும் கிரீன் பீல்டு விமான நிலையங்களை அமைத்து தமிழகத்தை முந்திக் கொண்டுவிட்ட நிலையில், பல மாநகரங்களோடு போட்டியிட்டு சென்னை அருகே புதிய விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு முயற்சிப்பதைத் தடுக்க முயல்வது நியாயமா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டள்ள அறிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஸ்ரீபெரும்புதூர் கிரீன் பீல்டு விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் புதிதாக விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமென்றும், அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அமைச்சர், தம்பி தா.மோ. அன்பரசன் விளக்க அறிக்கை கொடுத்துள்ளார் என்ற போதிலும் மேலும் சில விவரங்களை அளித்திட விரும்புகிறேன்.

வளர்ந்து வரும் தொழில்-பொருளாதார முன்னேற்றங்களின் காரணமாகத் தற்போதைய சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்துகளில் நெரிசல் ஏற்பட்டு வருவதை அனைவரும் நன்கறிவார்கள். நாடு முழுவதும் விமானப் போக்குவரத்துகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவுபடுத்திடவும், புதிதாக சர்வதேச விமான நிலையங்களை அமைத்திடவும் மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காகப் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அண்டை மாநிலங்களான கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் ஏற்கனவே கிரீன் பீல்டு விமான நிலையங்களை அமைத்து தமிழகத்தை முந்திக் கொண்டு விட்டார்கள்.

ஆனால் இந்த வரிசையில் சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் பணிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் இவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூரில் கிரீன் பீல்டு விமான நிலையம் புதிதாக அமைக்கப்படுவது தொடர்பாக 22.5.2007 அன்று தலைமைச் செயலகத்தில் என்னுடைய தலைமையில், சட்டப்பேரவைக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நிதியமைச்சர், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் டி. சுதர்சனம், டி. யசோதா, அதிமுக சார்பில் டி. ஜெயகுமார் பா.ம.க. சார்பில் கோ. க. மணி, அ. இரா. மலையப்பசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனி.ட் சார்பில் சி. கோவிந்தசாமி, டி. நந்தாகோபால், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் வீர. இளவரசன், தே.மு.தி.க. சார்பில் பண்ருட்டி எஸ். இராமசந்திரன், பார்த்தசாரதி, தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ம.அ. கலீலுர் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் செல்வப் பெருந்தகை, கே. பாலகிருஷ்ணன், புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜகன் மூர்த்தி, கரு. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் தான் சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறும்போதே புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் வட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4,821 ஏக்கர் பரப்பளவுள்ள நிலப் பகுதியில் மேற்கொள்வதென்றும், புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளையும் இந்திய வானூர்தி ஆணையமே ஏற்று நடத்திட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அரசு மட்டும் தன்னிச்சையாக எந்த முடிவினையும் எடுத்து விடவில்லை.

ஒரு நாடோ, நகரமோ விரிவடைய வேண்டுமென்றால் விமான நிலைய விரிவாக்கம் என்பது அவசியமான ஒன்று. மற்ற மாநகரங்களில் எல்லாம் விமான நிலைய விரிவாக்கம் நடைபெற்று, தமிழகத்திலே மட்டும் செய்யப்படவில்லை என்றால் அப்போதும் இதே எதிர்க்கட்சிகள், ஆட்சியாளர்கள் மீது குறை கூறி போராட்டம் நடத்த முற்படுவார்களா? மாட்டார்களா?.

எப்படியாவது ஆட்சியின் செயல்பாடுகளுக்கு அர்த்தம் கற்பிக்க வேண்டும், அதனை எதிர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்களே தவிர வேறொன்றும் அல்ல.

அதிலும் தற்போது நிலத்தை ஆர்ஜிதம் செய்ய எந்த இடமும் உறுதிச் செய்யப்படவில்லை. தற்போது மண் பரிசோதனை என்ற அளவில் தான் நடைபெறுகிறது. முதலில் மண் பரிசோதனைக்காக அதிக இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, அதன் பின்னர் தேவையான இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.

அதற்குள்ளாகவே ஆர்ப்பாட்டம் என்று இவர்கள் ஆரம்பித்து விட்டால், மத்திய அரசு இந்தத் திட்டத்தையே கைவிட முன் வந்தால் அதனால் இழப்பு நமது மாநில அரசுக்கும் நமது மாநில மக்களுக்கும் தானே தவிர, மத்திய அரசுக்கு ஒன்றும் பாதகம் ஏற்பட்டுவிடாது. அசூயை எண்ணத்தோடு, திமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்ற பொறாமை குணத்தோடு தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நல்ல திட்டங்களுக்கெல்லாம் யார் யார் எதிர்ப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் விமான நிலையம் அமைய வேண்டுமென்பதில் கருத்து வேறுபாடு இல்லை, ஆனால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்கிறார். இந்த இடமே பல இடங்களைப் பார்வையிட்டு, அங்கெல்லாம் விமான நிலையத்தை அமைத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையெல்லாம் கணக்கிட்டுத் தான், இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்களே தவிர, ஏனோதானோ என்று முடிவெடுத்து விடவில்லை.

புதிய விமான நிலையத்தை அமைக்கவோ, பழைய விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவோ வேண்டுமென்றால், பல மாநகரங்களோடு போட்டியிட்டு மத்திய அரசிடம் அணுகி பேச்சுவார்த்தை நடத்தித் தான் பெற வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட திட்டங்களுக்கு குந்தகம் விளைவிப்போர் யார் என்பதையும் நாட்டு மக்கள் புரிந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

குடியிருக்கின்ற மக்களையோ விளை நிலங்களையோ வேண்டுமென்றே பறிக்க வேண்டும் என்பது இந்த அரசின் நோக்கமல்ல. யாருக்கும் எந்தக் குந்தகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு, தவிர்க்க முடியாத நிலையில் ஒரு சிலருடைய இடங்களை எடுக்க வேண்டுமென்ற நிலை ஏற்பட்டால்கூட, அவர்களுக்கு தகுந்த இழப்பீடு கொடுக்க வேண்டுமென்பதிலும் இந்த அரசு அக்கறையோடு உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் கிரீன்பீல்டு விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக ஏறத்தாழ 4200 ஏக்கர் பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 64 இடங்களில் மண் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது. ஸ்ரீப்பெரும்புதூர் தாலுகாவில் திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, மாம்பாக்கம், திருப்பெரும்புதூர், கிளாய், சிறுகிளாய், வடமங்கலம், பாடிச்சேரி ஆகிய பகுதிகளிலும், திருவள்ளூர் தாலுக்காவில் கொட்டையூர், வயலூர், திருப்பந்தியூர் ஆகிய பகுதிகளிலும் இப்பணிகள் முற்றிலும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக் கூறுகள் குறித்து பரிசீலிப்பதற்காகவே நடைபெறுகின்றன. விமான நிலையத்தை அமைப்பதற்காக நில எடுப்பு பணிகள் எதுவும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.


மேலும் 21.7.2010 அன்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விமான நிலையத்திற்கு தேவைப்படும் நிலத்தின் அளவை மிகவும் குறைந்த அளவில் தேவைக்கு மிகாமல் ஆர்ஜிதம் செய்யவேண்டும் என இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண் மாதிரிகள் எடுக்கும் பணியை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி என்று யாரோ சிலர் திரித்து கூறியதன் விளைவாக அப்பகுதியை சுற்றியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த வயலூர் அகரம், உச்சிமேடு, சூரகாபுரம், மும்முடிகுப்பம், திருமணிக்குப்பம், கனிகாபுரம், வாசனம்பட்டு, திருப்பந்தியூர், பண்ணூர், பீமாபுரம், கொட்டையூர் முதலிய கிராமங்களைச் சார்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து ஆட்சேபனை மனு அளிப்பதற்காக 12.08.2010 காலை சுமார் 10.30 மணியளவில் அ.தி.மு.கவைச் சேர்ந்த திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.அரி அவர்கள் தலைமையில்,

மேற்கூறிய கிராமங்களில் உள்ள சுமார் 25 நபர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, மேற்படி கிராமங்களைச் சார்ந்த நிலங்களை கையகப்படுத்தி கிரீன்பீல்டு விமான நிலையம் அமைப்பதாக அடிக்கடி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்கின்றனர் என்றும், மேற்கண்ட ஊர்களில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதை கைவிடவேண்டும் என்றும் தெரிவித்து, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் மனு அளித்தார். காலை 11.15 மணி வரை இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பேசிவிட்டு சென்றுவிட்டார்.

இதனைத் தொடர்ந்து 20 லாரிகளில் வருகை தந்த வயலூர், வயலூர் அகரம், உச்சிமேடு, திருமணிக்குப்பம், கொட்டையூர் மற்றும் திருப்பந்தியூர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 1000 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவிலுள்ள திருவள்ளூர் திருத்தணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காமராஜ் சிலை அருகே வந்து லாரிகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றதாகவும், அதனை காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு நேரிட்டதால், காவல்துறையினர் காமராஜ் சிலை அருகே மறியலில் ஈடுபட முயன்ற முன்வரிசையிலிருந்த 50 நபர்களை அப்புறப்படுத்தியதாகவும் திருவள்ளூர் வருவாய் கோட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் சுமார் 1.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேற்படி கிராம மக்கள் கூட்டமாக வருகை தந்து அவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து விமான நிலையம் அமைப்பதற்காக தங்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் காவல் துறையினர் தங்களை தாக்கியதாகவும் அவ்வாறு தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், வாய்மொழியாக பெண்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்துக் கொண்டனர்.

அவர்களிடமிருந்து மனுவை நேரடியாக பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களது கோரிக்கை மனுமீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அமைதியாக சுமார் 1.45 மணியளவில் கலைந்து சென்றுள்ளனர்.

இதையெல்லாம் மறைத்து விட்டு, புதிய விமான நிலையமே தேவையில்லை, விரிவாக்கம் தேவையில்லை என்று இப்படிப்பட்ட தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்களானால் அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை தமிழ்நாட்டு மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X