• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசு ஊழியர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்-ஸ்டாலின்

|

சென்னை: அரசு ஊழியர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டியது அவசியம் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரூ.1082 கோடி மதிப்பில் அமைய உள்ள சென்னை வெளிவட்ட சாலைக்கு முதல்கட்ட பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா, புதிய கட்டிடங்கள், பாலங்கள் திறப்புவிழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை சென்னை பட்டாபிராமில் நேற்று மாலை நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெளிவட்ட சாலைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் அவர் பேசுகையி்ல்,

மாநாடு போன்று நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அதே நேரத்தில் நான் உங்கள் முன்னாள் பெரும் ஏக்கத்தோடு நின்று கொண்டு உள்ளேன். அதற்கு காரணம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் தலைவருமான சுதர்சனம் திடீர் என்று உடல் நலக் குறைவு ஏற்பட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்துவிட்ட சூழ்நிலைத்தான். அவர் இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து அயராது பாடுபட்டு வந்தார்.

இந்த தொகுதிக்கு தேவையானவற்றை முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்தி, தொகுதி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். இந்த தொகுதியின் முன்னேற்றத்திற்காக தேவை என்று கருதிய திட்டங்களை எல்லாம் இந்நிகழ்ச்சியின் மூலம் நிறைவேற்றி இருக்கின்றோம்.

மக்களின் பயன்பாட்டிற்காக சென்னை வெளிவட்ட சாலை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை 62 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த வெளிவட்ட சாலை முதற்கட்டமாக வண்டலூர்-நெமிலிச்சேரி வரை 30 கி.மீ நீளத்திற்கு ரூ.1082 கோடி மதிப்பீட்டிலான மாபெரும் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேலும், ரூ.16.50 கோடி மதிப்பீட்டில் சடையான் குப்பம்-பக்கிங்காம் கால்வாயில் பாலம், ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேற்கத்திய சாலை-முகப்பேரையும் இணைக்கின்ற பாலம், ரூ.35 கோடி செலவில் போரூரில் சாலை மேம்பாலம் ஆகிய பாலங்களுக்கு மொத்தம் ரூ.1,149 கோடியே 50 லட்சம் மதிப்பீடிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஆவடி நகராட்சிக்கு புதிய கட்டிடம் ரூ.3 கோடியே 58 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சுமார் 39 கோடி ரூபாய் செலவில் 2 மேம்பாலங்களும் மற்றும் 3 பாலங்களும், பொதுப்பணித்துறையின் சார்பில் சுமார் ரூ.4 கோடி செலவில் பூந்தமல்லியில் ஆரம்ப சுகாதார மருத்துவமனை கட்டிடங்களும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் திருத்தணி, கடம்பத்தூர், பூண்டி உள்ளிட்ட 148 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஆக மொத்தம் ரூ.59 கோடியே 9 லட்சம் செலவில் 170 பணிகள் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையை சுற்றி வெளிவட்ட சாலையினை அமைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான மூல காரணம் 1967-ம் ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதிதான்.

1997-ம் ஆண்டு தாம்பரம் மதுரவாயல் வழியே சென்னை புறவழிச்சாலையை ஏற்படுத்தி தந்தவரும் கருணாநிதிதான். மத்திய அரசு உதவியுடன் நடந்து வரும் மதுரவாயில்-புழல் இடையேயான பணி விரைவில் முடியும் தருவாயில் உள்ளது.

தமிழகத்தின் போக்குவரத்து வசதியையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க அன்றே வித்திட்டவர் முதல்வர் கருணாநிதி. இந்த அரசு தொலைநோக்கு சிந்தனையோடு, தொலைநோக்கு பார்வையோடு, மக்களுக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சாலை மேம்பாட்டிற்காக 5 ஆண்டில் செலவு செய்த தொகை ரூ.6 ஆயிரத்து 66 கோடி, ஆனால் தி.மு.க. அரசு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரத்து 94 கோடி செலவில் சாலைகளுக்கும், பாலங்கள் அமைப்பதற்கும் செலவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் அல்ல, தமிழ்நாடு முழுவதும் புறவழிச்சாலை பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஏதோ ஆட்சி செய்தோம். அரசியல் நடத்தினோம் என்று இல்லாமல் மக்களுக்கு தேவையான பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறோம். 2006 தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினோம். அவை அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.

தேர்தல் நேரத்தில் ஒரு கிலோ அரிசி ரூ.2 என்று சொன்னோம். ஆனால் எதிர்க்கட்சிகள் சத்தியமாக வழங்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால், இன்று ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி வருகிறோம். இலவச டி.வி வழங்குவோம் என்றோம். சொன்னபடியே ஒரு கோடியே 31 லட்சத்து 37 ஆயிரம் இலவச டி.விகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள டி.வி.களும் நிச்சயமாக டிசம்பர் மாதத்திற்குள் மக்களுக்கு வழங்கப்பட்டுவிடும். தேர்தலில் கொடுத்த உறுதிமொழி மட்டும் இல்லாமல் சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு பயன்படும் வகையில் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் பாடுபட வேண்டும். பதவியை பதவி என்று கருதாமல் மக்கள் நமக்கு பொறுப்பு வழங்கியுள்ளார்கள் என்று கருதி மக்கள் பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் மக்களுக்கு பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். உங்களுக்காக தொடர்ந்து உழைக்கும் இந்த அரசிற்கும் முதல்வர் கலைஞருக்கும் என்றென்றும் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.

விழாவில் ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X