For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுல் காந்திக்கு அமைச்சரவையில் இடம்?-பிரதமர் பேச்சால் சந்தேகம்

Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: அமைச்சரவையில் மேலும் பல இளைஞர்களை சேர்க்க விரும்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இன்று காலை முக்கியப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு காலை உணவு அளித்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது அவர்களிடையே பேசுகையில்,

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் சராசரி வயதைக் குறைக்க நான் விரும்புகிறேன்.

காங்கிரஸ் கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையே தொடர்பு இல்லை என்று கூறப்படுவது தவறானது. கட்சியுடன் இணைந்தே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கும், கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது.

அதேபோல அமைச்சர்களின் சுதந்திரத்திலும் நான் தலையிடுவது கிடையாது.

நான் விரைவில் ஓய்வு பெறும் திட்டம் இல்லை. அப்படிப்பட்ட யூகங்கள் தவறானவையே.

நக்சலைட் ஒழிப்பு நடவடிக்கைகள் சரியான கோணத்திலேயே போய்க் கொண்டிருக்கின்றன. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. எனது ஆதரவும் அவருக்கு உண்டு.

நக்ஸல் பிரச்சனைக்கு திடீரென தீர்வு காண முடியாது. அதைத் தீர்க்க பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மிக முக்கியம். அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நிலைநாட்ட வேண்டியது அவசியம்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும், தொழில்துறை அமைச்சகத்திற்கும் இடையிலான ஊடல்கள் சரியாகும். சுற்றுச்சூழல் குறித்த கவலைகள் மிகவும் முக்கியமானவை. அதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், தொழில் வளர்ச்சியும் முக்கியமானதே.

மக்களுக்கு இலவச கோதுமை உள்ளிட்டவற்றை வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் கொள்கை வடிவமைத்தலில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்பது எனது கருத்து.

நமது நாட்டில் 37 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்தான் வசித்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு உணவு தானியம் வழங்குவது எப்படி தவறாக இருக்க முடியும்.

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளேன். நவம்பர் மாதம் 7ம் தேதி கூட இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும்.

நமது அரசியலில் ஊழல் பெரும் சவாலாக உள்ளது. அமைச்சரவையில் உள்ளவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுமேயானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் சில குறைபாடுகளும், காலதாமதமும் இருக்கலாம். ஆனால் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்க்க அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்றார் பிரதமர்.

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் சராசரி வயதைக் குறைக்க நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளதன் மூலம் ராகுல் காந்திக்கு அமைச்சரவையில் விரைவில் இடம் தரப்படலாம் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X