திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில்! விஜய்யின் முடிவு இதுதான்! நிர்மல் குமார் ஓபன்டாக்!
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையே தொடரும். இந்த விவகாரத்தில் எந்த மதவாத சக்தியும் தலையிட விடமாட்டோம் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ரொம்ப தெளிவாக சொல்லிவிட்டோம். மக்கள் வந்து அமைதியை விரும்புகிறார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும். அதை மாற்றமாட்டோம்.

இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். இதுதான் அரசின் கொள்கையும், இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இதில் யாரும் எந்த மதவாத சக்தியும் உள்ளே வந்து அரசியல் 100 சதவீதம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் முதல்வர் ஏன் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பதாவது: செய்தியாளர்கள் யாரையும் பார்த்து முதல்வர் பயப்படவில்லை. திமுகவை பார்த்து கூட முதல்வர் பயந்ததே இல்லை. இது எல்லாம் யாருக்கும் பெரிய விஷயமே கிடையாது.
செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என Benchmark Fix செய்யாதீங்க! 7, 8 ஆண்டுகளாக சிலர் அவர்களது சொந்த விளம்பரத்திற்காகவும் அவர்களுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் தினமும் செய்தியாளர்களை சந்தித்து வந்தனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது. பிரிண்ட் மீடியாதான் இருந்தது. அறிக்கை மட்டும் கொடுக்கப்படும். செய்தியாளர்களை சந்தித்துதான் அரசு நடத்த வேண்டும் என்றெல்லாம் இல்லை.
எப்போது தேவையோ அப்போது முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார். தொடர்ச்சியாக மக்களை சந்திக்கிறார். மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார். மக்களுக்குத் தேவையானதை அவர் தெளிவுப்படுத்துவார். அரசு சார்பில் கட்சி சார்பில் நாங்கள் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
அது போல் அவர் மேலும் கூறுகையில் மதுரை மாநகராட்சி ஊழல் புகாரில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாநகராட்சி கழிவுநீர் கால்வாய் திட்டங்களை மேம்படுத்த ஆய்வு, மதுரையில் பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
மதுரையில் மூடப்பட்டுள்ள கல் குவாரிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்பட்ட கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஹார்டு டிஸ்க் தொலைந்து போனவுடன் யாருமே கூப்பிடாமல் செந்தில் பாலாஜி ஆஜராகிறார்.
அவர் சொல்லித்தான் ஹார்டு டிஸ்க் திருடப்பட்டதாக யாராவது சொன்னார்களா..? உடனே அவர் ஆஜராகி ஏன் பதில் சொல்ல வேண்டும். இதற்கு யார் காரணம் என விசாரணையில் தெரியவரும். அவருக்கு ஏன் அவ்வளவு பயம் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நடந்தது என்ன
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி மதுரை எழுமலையை சேர்ந்த ராமரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் தான். கார்த்திகை நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர் காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்து தனி நீதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இந்நிலையில் தனி நீதிபதி பிரதான மனுவில் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்களில் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராகவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு சார்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதித்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், அவமதிப்பு வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும். தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? இது ஜனநாயக நாடு. மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என கேள்வி எழுப்பினர்.
அரசுத் தரப்பில், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டியதுள்ளது எனக் கூறப்பட்டது. தர்கா தரப்பில் தங்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் தமிழக அரசின் முடிவு என்ன? என்பதை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
தர்கா தரப்பு எதிர்மனுதாராக சேர்க்கப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது. அடுத்த விசாரணை ஜூன் 22-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications
