இந்த ஆட்சி நமக்கு வேண்டுமா?-பூலித்தேவன் விழாவில் நடராஜன் ஆவேசம்

விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் நடந்த விழாவில் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ், சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அந்த விழாவின்போது பூலித்தேவர் அறக்கட்டளை தலைவர் ம.நடராஜன் பேசியதாவது,
இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல இன்னல்களைச் சந்தித்து உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இங்கிருக்கும் ஆட்சியாளர்களோ இப்பொழுது தான் நிதானமாகக் கடிதத்தூது அனுப்புகின்றனர்.
அவசரத்திற்கு உதவாத இந்த ஆட்சி நமக்கு வேண்டுமா? யாரை ஆட்சியில் அமர்த்தப் போகிறோம் என்பது முக்கியம் அன்று. யாரை ஆட்சியில் அமர்த்தக்கூடாது என்பது தான் மிகவும் முக்கியம். ஆகையால், வரும் தேர்தலில் மக்கள் ஓரணியாகத் திரண்டு இந்த அரசு மீண்டும் பதவிக்கு வராமல் செய்ய வேண்டும் என்று அவர் பேசினார்.
பழ.நெடுமாறன் பேசுகையில்,
விடுதலைப் புலிகள் தலைவன் பிரபாகரன் மீண்டும் வருவார் என்பதில் சந்தேகமில்லை. மாவீரர் பூலித்தேவன் மீது சத்தியமாகச் சொல்கிறேன். இது நிச்சயம் நடக்கும். பரிதவிக்கும் இயக்கத்தை மீண்டும் வழிநடத்துவார் என்றார்.