அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் முதல்வருக்கு கோபம் ஏன்?-சிபிஎம் கேள்வி
ஊட்டி: திமுக அரசின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட்கள் விமர்சித்தால் முதல்வருக்கு கோபம் வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை. தமிழகத்தில் மக்கள் மன நிம்மதியுடன் இல்லை. அதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று சிபிஎம்மின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊட்டி வந்த அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசுகையில்,
முல்லைப்பெரியாறு அணை பிரச்னையை அரசியலாக்கக் கூடாது. மத்திய அரசின் துணையோடு இரு மாநில அரசுகளும் பேசி தீர்வு காண வேண்டும். இதில், அரசியலை கலக்காமல் மக்கள் நலனையே கருத்தில் கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகள் பாதிக்காத வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக உண்மை நிலையை பிரதமர்தான் வெளியிட வேண்டும். காங்கிரசும், திமுகவும் கூட்டு சேர்ந்து உண்மையை மறைக்கின்றன. போபர்ஸ் குற்றச்சாட்டிற்கு நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதைப்போல, இப்பிரச்னையிலும் கூட்டு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை ஒழிப்பதற்கு பரவலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டுமின்றி மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களிலும் இச்செயல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சுமார் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இதைப்போன்ற நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
திமுக அரசின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட்கள் விமர்சித்தால் முதல்வருக்கு கோபம் வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை. தமிழகத்தில் மக்கள் மன நிம்மதியுடன் இல்லை. அதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
கம்யூனிஸ்டு கட்சியினர் தேர்தலை மனதில் வைத்து செயல்படவில்லை. அதனால் கூட்டணி குறித்தும் இன்னும் தீர்மானிக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுடன் உறவில்லாத கட்சிகளுடன்தான் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைப்பர் என்றார்.