For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரிலிருந்து தமிழகத்திற்குப் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்-சுகாதாரத் துறை செயலாளர்

Google Oneindia Tamil News

swine Flu virus
சென்னை: பெங்களூரிலிருந்து தமிழகத்திற்குப் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 2வது முறையாக பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளது. இந்த முறை அதன் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. பன்றிக் காய்ச்சலுக்கு சென்னையில் நான்கு பேர் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.

கன்னியாகுமரி, சென்னை, கோவை, வேலூர் ஆகிய மாவட்டங்களில்தான் பன்றிக் காய்ச்சல் பரவல் தீவிரமாக உள்ளது.

சென்னையில் இதுவரை அரசு அதிகாரி உள்பட 3 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி இருந்தனர். நேற்று சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை பவுசியாபானு (29) பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை சென்னையில் 4 ஆகி உள்ளது.

கோவையில் ஏற்கனவே வங்கி அதிகாரி உள்பட 2 பேர் பன்றி காய்ச்சல் நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள். இப்போது ஈரோடு சூரம்பட்டி வலசையைச் சேர்ந்த சிறுமி ஸ்வேதா (3) பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாள். இதனால் கோவையில் பன்றிக் காய்ச்சல் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் சேர்த்து தமிழ்நாட்டில் இதுவரை 12 பேர் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கி இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது 802 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் சுப்புராஜ் கூறுகையில்,

பன்றிக் காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெங்களூர், கரூர் ஆகிய இடங்களுக்கு சென்று வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே பன்றிக் காய்ச்சல் பெங்களூரில் இருந்து தமிழ் நாட்டுக்கு பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே இதை தடுக்க தமிழக எல்லைப்பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகளின் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
.
கரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

தொழில் நகரமான கரூரிலிருந்தும் பன்றிக் காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத் துறை செயலாளர் கூறியுள்ளார். இந்த நகருக்கு பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு இந்திய நகரங்களிலிருந்து ஜவுளி தொழில் தொடர்பாக பலரும் வந்து செல்கின்றனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரூர் அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் தடுப்பூசி பற்றாக்குறை:

இதற்கிடையே, சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று தடுப்பூசி போட வந்த பலரும் ஏமாற்றமடைந்தனர்.

2 வாரத்தில் 4 பேர் பலி:

இதற்கிடையே தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் 4 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் கணிதவியல் பேராசிரியை பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். இதனால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்தவர் இக்பால் அகமது. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பவுசியா பானு (29). இவர் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் கணிதவியல் பேராசிரியையாக பணி புரிந்தார். இவர்கள் வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாத இறுதியில் ரம்ஜான் பண்டிக்கைக்கு துணி வாங்குவதற்காக கடைக்குச் சென்று வந்த பவுசியாவுக்கு காய்ச்சல், தலைவலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாகத் தெரிவித்தனர்.

பின்னர் அவரைத் தனிமைப் படுத்தி சிக்கிச்சை அளித்தனர். ஆனால், அவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதனால் அவர் பணி புரிந்த எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

பரவாமல் தடுக்கக் கோரி வழக்கு:

இந்நிலையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X