கள்ளக் காதல் விவகாரத்தில் சங்கரன்கோவில் அருகே திமுக பிரமுகர் படுகொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் தி்முக செயலாளர் வைக்கோல் படப்பில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி முடிவணங்கான் கண்மாயில் உள்ள வைக்கோல் படப்பி்ல் கடந்த 2-ம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலையானவர் யார் என்பது குறித்து உடனடியாக துப்பு துலங்கவில்லை. இதைத் தொடர்ந்து சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சண்முகம் தலைமையில் கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்குமார் கொண்ட தனி்ப்படை அமைக்கப்பட்டது. 25 நாட்கள் கழித்து இந்த கொலையில் துப்பு துலங்கி உள்ளது.

வைக்கோல் படப்பில் பிணமாகக் கிடந்தவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்த சாமுவேல் மகன் செல்லத்துரை என்பது தெரிய வந்தது. தையல் தொழிலாளியான இவர் அப்பகுதி திமுக கிளை செயலாளராகவும் இருந்து வந்தார்.

செல்லத்துரை கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன் செல்லத்துரை அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரை காதலித்து திரு்மணம் செய்தார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தையல் தொழில் காரணமாக செல்லத்துரை திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று விடுவார். வீட்டில் அதிகம் தங்குவதில்லை.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரையின் நண்பர் அழகுதுரை என்பவருக்கும், மாரியம்மாளுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அதை செல்லத்துரை கண்டித்தார். கள்ளக் காதலனையும் எச்சரித்தார். ஆனாலும் இவர்கள் தொடர்பு நீடித்தது.

ஒரு கட்டத்தில் கணவரின் கண்டிப்பு அதிகமானதால் அவரை தீர்த்து கட்ட மாரியம்மாள் முடிவு செய்தார். இதற்கு கள்ளக் காதலனும் சம்மதித்தார். செல்லத்துரைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அதை பயன்படுத்தி தீர்த்து கட்ட முடிவு செய்தனர். கடந்த 1-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு செல்லத்துரை வீட்டுக்கு வந்த அழகுதுரை அவருக்கு மது ஆசைகாட்டி வெளியே அழைத்து வந்தார்.

அவருடன் அதே ஊரைச் சேர்ந்த நண்பர் ஆறுமுகசாமி என்பவரும் சென்றார். நெல்லை மாவட்டம் முடிவணங்கான் கண்மாய்க்கு அழைத்து வந்து அவர்கள் மது அருந்தினர். போதையில் மிதந்த செல்லத்துரையை அவர்கள் இருவரும் சேர்ந்து நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொன்றனர். அதன்பிறகு அங்கிருந்த வைக்கோல் படப்பில் செல்லத்துரை உடலை போட்டு தீ வைத்து எரித்தனர்.

சம்பவம் நடந்தது வேறு மாவட்டம் என்பதால் அவர்கள் இதுவரை பிடிபடாமல் இருந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக் கொண்டனர். இதை தொடர்ந்து செல்லத்துரை மனைவி மாரியம்மாள், கள்ளக் காதலன் அழகுதுரை, நண்பர் ஆறுமுகசாமி ஆகிய மூவரையும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...