For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இருதரப்பினரும் ஏற்கும் வகையிலானது அயோத்தி தீர்ப்பு-கருணாநிதி, ஜெ., வைகோ வரவேற்பு

Google Oneindia Tamil News

Karunanidhi and Jayalalitha
சென்னை: அயோத்தி தீர்ப்பு இரு தரப்பினருக்கும் திருப்தி தரும் வகையில் உள்ளதாக முதல்வர் கருணாநிதியும், சமாதானக் கதவு திறக்க வழி ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பான அயோத்தி தீர்ப்பு குறித்து இரு தலைவர்களும் அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டில் அமைதி காண்பது என்ற அடிப்படையில் இரு தரப்பினரும், திருப்தி அடையக்கூடிய தீர்ப்பு. இந்த தீர்ப்பில் குறை காண்பவர்கள், மேல்முறையீடு (அப்பீல்) செய்யவும் வழிவகுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரச்சினைக்குரிய பாபர் மசூதியின் உரிமை தொடர்பான தீர்ப்பு, 60 ஆண்டுகளுக்குப் பிறகு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் யு.எஸ்.கான், சுதிர் அகர்வால் மற்றும் டி.வி. சர்மா ஆகியோர், சம்பந்தப்பட்ட நிலத்தை மூன்றாக பிரித்து, தொடர்புடைய 3 தரப்பினருக்கும் அளிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்கள்.

நீண்ட காலமாக மதப்பிரச்சினைகளை உருவாக்கி வருவதும், தீயைப் போன்ற ஆபத்து மிகுந்ததுமான இந்த விவகாரத்தில், நீதிபதிகள் பாராட்டத்தக்க தீர்ப்பை அளித்திருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

சமாதான கதவை திறக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. எனவே, இந்த தீர்ப்பினை சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் முழுமனதுடன் பாராட்டி ஏற்றுக் கொண்டு, ஒரு நல்ல முடிவு ஏற்படவும், ஒரு சிறந்த மதச்சார்பற்ற நாட்டுக்கான முன்னுதாரணமாக இந்தியா விளங்குவதற்கு வழிவகுக்கவும் வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மத நல்லிணக்க நோக்கோடு தரப்பட்ட தீர்ப்பு-வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அயோத்தியில் ராமர் கோவிலா? பாபர் மசூதியா? என்று மக்களுக்குக் கவலை அளித்த சர்ச்சையால், 60 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், வழங்கி இருக்கின்ற தீர்ப்பு இந்துக்கள், இஸ்லாமியர்கள் இரு தரப்பினருக்கும் நல்லிணக்கம் ஏற்படட்டும் என்ற நோக்கத்தோடு தரப்பட்டு இருக்கிறது.

மக்களின் மத உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில், சட்டத்தின் அளவுகோலை மட்டும் வைத்துத் தீர்வு காண இயலாது.

எனவே, தீர்ப்பிலே வெற்றி பெற்று விட்டோம் என்று ஒருதரப்பினர் கொண்டாடுவதோ, விழாஎடுப்பதோ, நிரந்தர சமாதானத்துக்குக் குந்தகம் ஆகி விடக் கூடாது.

இந்து-முஸ்லிம் ஒற்றுமைதான், இந்தியாவின் வருங்காலத் தலைமுறையினரின் அமைதி வாழ்வுக்கு அடிப்படையாகத் திகழும் என்பதை நினைவில் கொண்டு இருதரப்பினரும் செயல்படுவதுதான் நாட்டின் நலனுக்கு ஏற்றதாக அமையும் என வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X