நவம்பர் 8 முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் நவம்பர் 8ம் தேதி கூடுகிறது. இதற்கான அறிப்பை ஆளுநர் சுர்ஜித் பர்னாலா இன்று வெளியிட்டார்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய சட்டப்பேரவையில் இந்தக் கூட்டத் தொடர் நடக்கும்.
குளிர்கால கூட்டத் தொடர் ஒருவாரம் நடைபெறும் என்று தெரிகிறது. இது புதிய சட்டமன்ற கட்டிடத்தில் நடைபெறும் 2வது கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
108 ஆம்புலன்ஸ் சேவை-விரிவுப்படுத்த கருணாநிதி உத்தரவு:
இதற்கிடையே அவசரகால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டத்தை விரிவுபடுத்திடும் வகையில் கூடுதலாக 200 ஆம்புலன்ஸ்களை விரைவில் கொள்முதல் செய்யுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் திட்டங்கள் குறித்து முதல்வர் இன்று ஆய்வு செய்தார்.
இதில் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் மாலதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் சுப்புராஜ், நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதில், வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்கள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் கருணாநிதி, மருத்துவ முகாம்களை அதிக அளவில் நடத்தி, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பலரும் பயனடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அவசரகால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டத்தினை, தேவைப்படும் இடங்களுக்கு விரிவுபடுத்திடும் வகையில் கூடுதலாக 200 ஊர்திகளை விரைந்து கொள்முதல் செய்யுமாறும், பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்திட உரிய தடுப்பு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதிலும் விரைந்து மேற்கொள்ளுமாறும் கருணாநிதி உத்தரவிட்டார்.
மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி உரிய காலத்தில் பயனாளிகளுக்குக் கிடைக்க களப்பணியாளர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும்,
போலி மற்றும் காலாவதி மருந்துகளின் விற்பனை அறவே ஒழிக்கப்பட, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் மருத்துவர் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் அனைத்தையும் உடனுக்குடன் நிரப்பி, தரமான மருத்துவ சிகிச்சை மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சைகள் அளிக்கவும் அதிகாரிகளை முதல்வர் கேட்டுக் கொண்டார்.