For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதியூரப்பா ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: கி.வீரமணி

By Chakra
Google Oneindia Tamil News

Veeramani
சென்னை: எதியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்து, குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக சட்டசபையில் அங்கே ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் எதியூரப்பா அமைச்சரவை, சில அதிருப்தி எம்.எல்.ஏக்களும், சுயேச்சைகளும் ஆளுங்கட்சிக்கு தாங்கள் தந்த ஆதரவை விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று மாநில ஆளுநர் பரத்வாஜிடம் தெரிவித்த நிலையில், (28 மாத காலம் ஆட்சியான) பாஜக ஆட்சி தனது ஆதரவை அக்டோபர் 12ம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆணையிட்டார்.

அதில் அவர் அக்டோபர் 6ம் தேதியன்று இருந்த ஆளுங்கட்சிக்கான ஆதரவு பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, சட்டமன்றத்தில் மொத்த எண்ணிக்கை 225.
கட்சி வாரியாக பாஜக-116, காங்கிரஸ்-73, மதசார்பற்ற ஜனதா தளம்-28, சுயேச்சைகள்-6, நியமன உறுப்பினர்-1
சபாநாயகர்-1

இதில் 11 பாஜக. எம்.எல்.ஏக்களும், 6 சுயேச்சை உறுப்பினர்களும் தங்களது ஆதரவை எதியூரப்பா அரசுக்கு விலக்கிக் கொள்வதாக, மாநில ஆளுநருக்குக் கடிதங்களை கொடுத்ததால் ஆளுநர் 12ம் தேதிக்குள் ஆட்சி பலத்தை நிரூபிக்க ஆணையிட்டார்!.

இதுதான் சரியான ஜனநாயக நடைமுறை. இதற்கிடையில் தனக்குப் போதிய மெஜாரிட்டி இருக்காது என்ற அச்சத்தில், சுயேச்சை எம்.எல்.ஏக்களையும், 11 பா.ஜ.க. எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் மூலம் கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் பதவி நீக்கம் செய்துள்ளார்.

சட்டப்படி, முதல் விஷயம், கட்சித் தாவல் தடைச் சட்டம் சுயேச்சை எம்.எல்.ஏக்களைக் கட்டுப்படுத்தாது.

இரண்டாவது விஷயம், 11 பாஜக எம்.எல்.ஏக்களைக்கூட எப்போது கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் பதவி நீக்கம் செய்வது சட்டப்படி சரியானது என்றால், அவர்கள் சட்டசபைக்கு வந்து பாஜக கொறடா ஆணைக்கு விரோதமாக, ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்தனர் என்பதற்குப் பின்னரே செய்தால்தான் சரியானது.

அவர்கள் ஆளுநரைச் சந்தித்ததாலோ, வெளியூர்களில் இருந்ததைக் காரணமாகக் காட்டியோ பதவி நீக்கம் செய்வது சட்ட விரோதம். அவைக்கு வந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் அதனை எதிர்த்து, எதிர்க்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது திட்டவட்டமாகத் தெரிந்தால் ஒழிய, பதவி நீக்கம் செய்ய இயலாது. இது சபாநாயகரின் முறையற்ற தடாலடி சட்ட விரோதச் செயல் ஆகும்!.

அடுத்து குதிரை கீழே தள்ளியதோடு, குதிரை குழியையும் பறித்தது என்பதுபோல, இவ்வளவு பரபரப்பும், எதிர்பார்ப்பும் உள்ள நிலையில், 11.10.2010 கர்நாடக சட்டமன்றத்தில் வாக்களிக்கச் சென்ற எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களை வாக்களிக்க உள்ளே அனுமதி மறுத்ததும், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று, எதியூரப்பா அமைச்சரவை வெற்றி பெற்றுவிட்டது என்று சபாநாயகர் அறிவித்தது உச்சகட்ட அநியாய சட்ட விரோதச் செயல்.

கர்நாடக சட்டமன்றத்தில் நடைபெற்ற அமளி, துமளி, அடிதடி, கூச்சல், குழப்பம் நாட்டின் ஜனநாயகத்திற்கே மிகப் பெரிய களங்கத்தை உண்டாக்கிய தேசிய அவமானம் ஆகும்!.

வாக்களிப்பதற்கு முன்பே தங்களை பதவி நீக்கம் செய்த சபாநாயகரின் ஒரு சார்பு நிலை சட்ட விரோதம் என்று கூறி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அது இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

இனியும் கர்நாடகத்தில் சட்ட விரோதமான பாஜக அரசு, ஜனநாயக விரோதமான பாஜக அரசு நீடிப்பது முறையற்றது; ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதாகும்!.

மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக எதியூரப்பா அரசை பதவி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்த வேண்டும்.

கடந்த பல மாதங்களாகவே அங்கு கனிமவளப் பிரச்சனை மற்றும் பல்வேறு ஊழல் பிரச்சனைகளில் சிக்கி, அவ்வரசு சீரழிந்த நிலையில், அரசியல் கழைக்கூத்து போல ஆட்சி நடந்து வந்தது நாடறிந்த உண்மையாகும்!.

மோசடிக்குத் துணை போன சபாநாயகருக்குக் களங்கமாகும்.

கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள சட்டமன்றக் கட்டடம் 'விதான் சவுதா" மிகவும் அழகானது; கம்பீரமானது. ஆனால், அதனுள் நடந்தவைகள் அசிங்கத்திற்குப் பொட்டு வைத்து, ஜனநாயகத்தை அலங்கோலப்படுத்தியது கொடுமையிலும் கொடுமை!.

இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X