For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்.ஆட்சியைக் கொண்டு வருவோம்-ஜெ.சபதம்

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: 1973ம் ஆண்டு மே மாதத்தில் அதிமுக தனது முதல் வெற்றியைக் குவித்தது. அதே மாதத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக அமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுக தனது 38 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2010 அன்று அகவை 39ல் அடியெடுத்து வைக்கிறது.

சரித்திரத்தின் சக்கரங்களை பின் நோக்கி உருட்டிப் பார்த்தால், கணக்குப் போட்டு பிறக்கின்ற கட்சிகளுக்கு மத்தியில், கணக்கு கேட்டு பிறந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்.

'ஒரு கூத்தாடியும் அவர் பின்னால் சில நூறு விசிலடிச்சாங் குஞ்சுகளும்' என்று எள்ளி நகையாடியதை, கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அதிமுக தன் முதல் வெற்றியை பெற்றது.

எஃகுக் கோட்டையாய் கழகத்தைக் கட்டிக் காத்து வந்த எம்.ஜி.ஆர். கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக என்னை 1983ல் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி மாநிலம் முழுவதும் வலம் வர வைத்தார்.

இவ்வேளையில், 1984ல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, பொதுத் தேர்தல் வந்தது. அப்போது, மக்களிடம் 'எம்.ஜி.ஆர். ஐஸ் பெட்டியில் இருக்கிறார்' என்று வதந்திகளை கட்டவிழ்த்துவிட்டார் கருணாநிதி. இது மட்டுமல்லாமல், 'எனக்கு ஓட்டுப் போடுங்கள், நண்பர் எம்.ஜி.ஆர். உயிரோடு வந்துவிட்டால் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறேன்' என்றார் கருணாநிதி.

இப்படி, எம்.ஜி.ஆர். அவர்கள் களத்தில் இல்லாத நேரத்தில் நடந்த ஒரு உக்கிரமான போரில், எதிரிகளிடமிருந்து கழகத்தை சேதாரமில்லாமல் கட்டிக் காத்து அவரிடம் ஒப்படைக்கும் பெரும் வாய்ப்பினை உங்கள் சகோதரியாகிய நான் பெற்றேன்.

புரட்சித் தலைவர் நலமாக இருப்பதாகவும், அவர் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று, உங்கள் திருமுகம் பார்ப்பதற்கு விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையூட்டும் பிரச்சாரத்தையும் தமிழகம் முழுவதும் நான் செய்து வந்ததின் விளைவாக, கருணாநிதியின் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டு, அதிமுக அமோக வெற்றியை ஈட்டியது.

பின்னர், 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் மரணத்தை ஏதுவாக பயன்படுத்திக் கொண்ட கருணாநிதி, கழகத்திற்கு துரோகம் செய்வதற்குக் காத்திருந்த துரோகிகள் சிலரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கழகத்தை பிளவுபடுத்தினார். மேலும் கட்சியின் தலைமை அலுவலகத்தைப் பூட்டினார். கழகத்தின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தையும் முடக்கிடச் செய்தார். சிங்கத்தின் குகைக்குள் பிளவு வந்தால் சிறு நரிகள் நாட்டாமையாகிவிடும் என்பது போல், பிளவை பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி 1989ல் ஆட்சிக்கு வந்தார்.

அதனைத் தொடர்ந்து 1991 தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் கருணாநிதியால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய், புரட்டுகளால் 1996ல் அதிமுக ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது.

ஆனாலும், மனம் தளர்ந்துவிடாது, செயல் சோர்ந்து போகாது, தொண்டர்களை தட்டிக் கொடுத்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தொண்டர்களுக்கு ஊட்டி, அதன் மூலம் மீண்டும் கழகத்தை எழுச்சிப் பாதைக்குள் கொண்டு வந்து, 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றிகளை குவிக்கச் செய்தேன்.

அதனைத் தொடர்ந்து 2001 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கருணாநிதியை வீழ்த்தி, அதிமுக மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்தது. தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சியை மனதில் கொண்டு எண்ணற்ற புரட்சிகர திட்டங்களை தமிழகத்திற்கு தந்தோம்.

இருப்பினும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஓட்டுக்குப் பணம் என்னும் இழிவான யுக்தியை அறிமுகம் செய்து 2006ல், ஒட்டு போட்ட சட்டை போல் பல கட்சிகளின் துணையோடு ஒரு அரசாங்கத்தை அமைத்தார் கருணாநிதி.

இந்த நான்கரை ஆண்டு காலத்தில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீரழிவு என பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக மக்களை கருணாநிதி ஆளாக்கிவிட்டார்.

இப்படி, எல்லா மட்டங்களிலும் தமிழகத்தை இருள் சூழ வைத்துவிட்ட கருணாநிதியிடமிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தரக்கூடிய வலிமையும், வல்லமையும் கொண்ட ஒரே அரசியல் பேரியக்கம் அதிமுகதான் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை.

பள்ளிக் கூடங்களில் சத்துணவு, ஆலயங்களில் அன்னதானம் என்று அன்னமிட்டே வாழும் அதிமுக, தனது முதல் கன்னி வெற்றியை 1973 ல் எந்த மே மாதத்தில் குவித்ததோ, அதே மே மாதத்தில், 2011 ல் அமையப் போகும் புதிய அரசுக்கான சட்டப்பேரவைத் தேர்தலிலும் கருணாநிதியை வீழ்த்தி, எம்.ஜி.ஆரின். ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட இந்நாளில் அனைவரும் சபதமேற்போம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X