For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படி ஒரு அரசியல்வாதி இல்லையே!-இந்தியர்களின் ஏக்கத்தை அதிகரித்த ஒபாமா வருகை!!

Google Oneindia Tamil News

- பி.ஜி.மகேஷ்

கடந்த 48 மணி நேரமாக இந்திய மீடியாக்களை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. 24 மணி நேரமும் ஒபாமா குறித்த செய்திகளை ஆங்கில மீடியாக்கள் ஒளிபரப்பி வருகின்றன. அதேசமயம், மொழிச் சானல்கள் அந்த அளவுக்கு அலட்டிக் கொள்ளவில்லை.

ஒபாமாவின் வருகையால் இந்திய மக்களுக்கு என்ன லாபம் கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் அவரது வருகையால், இந்திய அரசியல்வாதிகள் மீதான இந்தியர்களின் எரிச்சலும், கோபமும், ஆதங்கமும், எரிச்சலும் நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம், ஒபாமாவின் செயல்பாடுகள் அப்படி.

ஒபாமாவும், அவரது மனைவி மிஷலும், மும்பையில் உள்ள ஹோலி நேம் பள்ளிக்குச் சென்று தீபாவளியை மாணவர்களுடன் கொண்டாடினர். சிறிய கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நீட்டி முழக்கி யாரும் பேசவில்லை, இத்தனாவது வட்டத்தின் சார்பாக என்று கூறி யாரும் மாலை போடவில்லை. இது இந்தியாவுக்கு வினோதமானதாகும். இங்கெல்லாம் அரசியல்வாதிகளின் கூட்டம் எப்படி நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாததில்லை.

பள்ளிக்கூட மாணவ, மாணவியருடன் சேர்ந்து மிஷல் ஆடிப் பாடினார். ஆனால் ஒபாமா சற்று சங்கோஜப்பட்டார். இருப்பினும் அவரது சங்கோஜம் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. சீக்கிரமே அவரும் ஜோதியில் ஐக்கியமானார். சிறார்களுடன் சேர்ந்து அவரும் ஜாலியாக ஆடினார். உலக வல்லரசின் தலைவரான ஒபாமா மற்றும் அவரது மனைவியுடன் சேர்ந்து ஆடியதால் அந்தக் குழந்தைகளின் முகத்தில் தெரித்த நம்பிக்கை படு பிரகாசமாக இருந்தது. இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாகத்தான் தெரிகிறது.

இந்த நேரத்தில் ட்விட்டரில் பறந்த செய்திகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன. ஏன் நமது இந்தியத் தலைவர்கள் இப்படி மக்களோடு மக்களாக கலப்பதில்லை என்பதே அந்த செய்திகளின் மையக் கேள்வியாக அமைந்தது.

முன்பு இந்திரா காந்தி, ஆதிவாசி மக்களுடன் சேர்ந்து நடனமாடிய காட்சி அடங்கிய புகைப்படம் இந்த நேரத்தில் எனது மனதில் நிழலாடியது. ஏன், முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கூட அப்படி சில நேரம் நடந்து கொண்டுள்ளார். ஆனால் அதெல்லாம் ராஜீவுடன் முடிந்து விட்டது. அதன் பிறகுஅப்படிப்பட்ட 'டான்ஸை' நம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் அரசியல்வாதிகள், அவர்களது 'இசைக்கு' நம்மை 'ஆட்டுவித்து' வேடிக்கை பார்க்கும் சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன. அதற்குப் பஞ்சேமே இல்லை.

இந்த நிகழ்சசியை முடித்துக் கொண்ட பின்னர் மும்பையின் பெருமைமிகு செயின்ட் சேவியர் கல்லூரிக்குச் சென்றார் ஒபாமா. ஒபாமாவைக் காண மீடியாக்களும், மக்களும், பார்வையாளர்களும் பெரும் ஆர்வத்துடன் காணப்பட்டனர். மிஷல் ஒபாமா தொடக்க உரையாற்றினார். தனது பேச்சின்போது, சாதாரண கேள்விளை ஒபாமாவிடம் கேட்காதீர்கள், மாறாக பதில் சொல்லத் திணறும் வகையில் கடினமான கேள்விகளைக் கேளுங்கள் என்றும் கூறி கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார் -கேள்விகள் கேட்க. மேலும் அந்த மேடையில் ஒபாமா மட்டுமே இருந்தார். இதுவும் இந்தியாவில் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும். யாராவது இப்படி ஒரு இந்தத் தலைவரைப் பார்த்து கடினமான கேள்விகளைக் கேளுங்கள் என்று அவரை வைத்துக் கொண்டு கூற முடியுமா?

செயின்ட் சேவியர் கல்லூரியில் நடந்ததை உன்னிப்பாகப் பாருங்கள். எட்டு கேள்விகள் வரை ஒபாமாவிடம் கேட்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஒபாமா சளைக்காமல் பதிலளித்தார்.

இங்கும் இந்திய மக்களின் ஏக்கத்தைத் தூண்டி விட்டுள்ளது ஒபாமாவின் சளைக்காத பதில்கள். நமது இந்தியத் தலைவர்களிடம் இப்படிக் கேட்க முடியுமா?. இப்படியெல்லாம் கேள்வி கேட்பதை ஒருபோதும் விரும்பாதவர்கள் நமது தலைவர்கள். தேர்தலின்போது மட்டுமே அவர்கள் மக்களிடம் வருகிறார்கள். மேலும், மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக தலைவர்களை அணுகுவது, அவர்களை கேள்வி கேட்பதெல்லாம் நடக்கவே முடியாத காரியங்கள்.

அதேபோல டவுன் ஹால் கூட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடம் சென்று கை குலுக்கினார் ஒபாமா. அவரது பாதுகாவலர்கள் இரு தரப்புக்கும் இடையே தூரத்தை கடைப்பிடித்தனரே தவிர, ஒபாமா மக்களிடம் கை குலுக்குவதையோ, மக்களின் ஆர்வத்தை தடுக்கவோ அவர்கள் முயலவே இல்லை.

இந்திய பாதுகாப்பை இங்கு எண்ணிப் பாருங்கள். எங்காவது இந்திய அரசியல் தலைவர் யாராவது, இப்படி மக்களுடன் கை குலுக்கியுள்ளார்களா?. அல்லது நாம் கை குலுக்கப் போனால் பாதுகாவலர்கள் அதை அனுமதிப்பார்களா?. ஒருவேளை மேற்கத்திய மக்களைப் போல நமது மக்கள் பழக மாட்டார்கள் என அரசியல்வாதிகள் நினைக்கிறார்களோ என்னமோ.

மேற்கத்திய அரசியல்வாதிகளுக்கு நகைச்சுவை உணர்வு சிறப்பாக இருக்கும். அதை மக்களிடம் சுதந்திரமாகவும் வெளிப்படுத்துவார்கள். மும்பையில் நடந்த இந்திய தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசியபோது ஒபாமா அதை சரியாக செய்தார்.

அவர் தனது பேச்சின்போது, தேர்தல் முடிவுகள் நமக்கு பாதகமாக இருந்தாலும் கூட ஜனநாயகத்தின் சிறப்புகள் மகத்தானவை என்று அவர் பேசியபோது அரங்கே சிரித்தது. அமெரிக்க இடைத் தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி தோல்வியைத் தழுவியதை மறைமுகமாக சுட்டிக் காட்டி அவர் பேசியதன் உள்ளர்த்தத்தை உணர்ந்து கூட்டத்தினர் சிரித்தனர். ஆனால் இப்படியெல்லாம் எதையுமே கேஷுவலாக எடுத்து, அதை நகைச்சுவை உணர்வுடன் சொல்லும் இந்திய அரசியல்வாதிகள் -கிட்டத்தட்ட இல்லை என்று கூறலாம். 'சிரிக்காமலேயே' இருந்த பிரதமரைப் பார்த்த நாடல்லவா இது!.

இப்படி இந்திய அரசியல்வாதிகளிடம் உள்ள எதிர்மறையான விஷயங்கள், எத்தனை ஒபாமாக்கள் வந்தாலும், நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறையும் என்று கூற முடியாது. ஆனால் அது மக்களைத்தான் பாதிக்குமே தவிர நிச்சயமாக அவர்களை பாதிக்கவில்லை, பாதிக்கவும் செய்யாது.

எது எப்படி இருந்தாலும், வாழ்க்கை வழக்கம் போலத்தான் நடக்கப் போகிறது - நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள அரசியல்வாதிகளுக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X