For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுஷ்மா-பணம்-ஜாதி.. எதியூரப்பா தப்பியது எப்படி?

Google Oneindia Tamil News

Yeddyurappa
டெல்லி: என்னை பதவியை விட்டு நீக்கினால் சுஷ்மா சுவராஜ், எம்பி அனந்த்குமார் உள்ள மூத்த பாஜக தலைவர்களின் வண்டவாளங்களையும் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்து தனது பதவியை காப்பாற்றிக் கொண்டுள்ளார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா.

நில ஊழலில் ஈடுபட்ட அவர் பதவியில் நீடிப்பதை அனுமதி்க்கக் கூடாது என்று மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் திட்டவட்டமாக இருந்தனர்.

அதே போல ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமான சுஷ்மா சுவராஜும் எதியூரப்பாவை மாற்ற வேண்டும் என்றார். மேலும் எதியூரப்பாவின் தீவிர எதிர்ப்பாளரான மூத்த பாஜக எம்பியான அனந்த்குமார் அவரது பதவியை பறிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.

ஆனால், எனது ஜாதியைச் சேர்ந்த, எனது தீவிர ஆதரவாளர்களான 13 எம்எல்ஏக்களை என்னுடன் ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியையே கவிழ்ப்பேன், மேலும் பாஜகவுக்குக் கிடைத்து வரும் எனது சமூகமான லிங்காயத்து ஜாதி ஓட்டுக்களை சிதறடிப்பேன் என்று எதியூரப்பா விடுத்த மிரட்டலால் பாஜக தலைவர்கள் அவருக்குப் பணிந்துவிட்டனர்.

மேலும் ரெட்டி சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டு சுஷ்மா சுவராஜ் நடத்தி வரும் உட்கட்சி அரசியலை பகிரங்கமாக்குவேன், மூத்த பாஜக தலைவர்கள் எனது அரசால் பெற்ற லாபங்களையும், கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் அவர்களது சொத்து விவரங்களையும் வெளியிடுவேன், மேலும் கட்சி்க்கு பணம் வரும் வழிகளையும் அடைப்பேன் என்றும் எதியூரப்பா மிரட்ட, அவரே பதவியில் நீடிக்கட்டும் என்ற முடிவுக்கு பாஜக தலைவர்கள் வந்துவிட்டனர் என்கிறார்கள்.

அவரிடம், இனிமேல் அரசாங்கத்தில் உங்களது மகன்களும் உறவினர்களும் தலையிடுவதை மட்டும் தவிர்த்துவிடுங்கள், ரெட்டிகள் மீது உள்ள கோபத்தை காட்டுகிறேன் என்று அவர்கள் மீது கை வைத்துவிடாதீர்கள், எல்லா கோஷ்டிகளையும் அரவணைத்துச் செல்லுங்கள் என்று சில நிபந்தனைகளை மட்டும் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி, அருண் ஜேட்லி ஆகியோர் மூலம் கோரிக்கைகளாக வைத்து பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைத்துவிட்டது பாஜக தலைமை.

ஒருவழியாக தனது தலைவர்களை மிரட்டி பதவியை தக்க வைத்துக் கொண்டு நேற்று பெங்களூர் வந்த எதியூரப்பாவுக்கு அவரது ஆதரவாளக்கள் விமான நிலையத்தில் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்புக் கொடுத்தனர்.

அப்போது நிருபர்களிடம் பேசிய எதியூரப்பா, வழக்கம்போல தரும் உறுதிமொழிகளை மீண்டும் தந்தார். அவர் கூறுகையில், பாஜக மேலிடம் கர்நாடக முதல்வராக தொடர்ந்து நீடிக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. இனிமேல் கர்நாடகத்தின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவேன். இனி என் செயல்பாடு எல்லாமே மாநில வளர்ச்சி, மாநில வளர்ச்சி, மாநில வளர்ச்சி என்று தான் இருக்கும். விரைவில் நடைபெற உள்ள மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் கவனம் செலுத்துவேன்.

எதிர்க்கட்சிகள் என் மீது ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை தேவையில்லாமல் கூறுகிறார்கள். இனிமேலாவது எதிர்க்கட்சிகள் என் மீது இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை கூறுவதை கைவிட வேண்டும். தங்களது பொறுப்பை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த இரண்டரை ஆண்டுகளும் நானே முதல்வராக இருப்பேன். அடுத்த சட்டசபை தேர்தலில் பாஜக 150 இடங்களை பிடிக்கும். அந்த அளவுக்கு கட்சியை பலப்படுத்துவேன் என்றார்.

இவ்வாறு எதியூரப்பாவை தப்ப விட்டதன் மூலம் நாட்டையே உலுக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரசையும் திமுகவையும் கேள்வி கேட்கக் கூடிய தகுதியை தங்கள் கட்சி இழந்துவிட்டதாக அந்தக் கட்சியினரே வருத்தப்படுகின்றனர்.

லோக் ஆயுக்தா விசாரணையை முடக்க திட்டம்?:

இதற்கிடையே எதியூரப்பா குடும்பத்தினரின் நில ஊழல் தொடர்பாக லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக தனி நீதி விசாரணைக்கு எதியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் லோக் ஆயுக்தாவின் விசாரணையை முடக்க அவர் முயல்வராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாங்கள் இந்த விவகாரத்தை விசாரி்க்க ஆரம்பித்துள்ள நிலையில் எங்களிடம் கேட்காமல் நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளது ஏன் என்று லோக் ஆயுக்தா தலைவரான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு வீட்டை காலி செய்யும் எதியூரப்பா மகன்கள்:

இந் நிலையில் இனறு தனது மகன் விஜயேந்திரா மற்றும் மகள் உமாதேவியை தனது அரசு இல்லத்திலிருந்து காலி செய்யுமாறு எதியூரப்பா கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

English summary
bangalore.click.in
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X