For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீட்டில் ஊழல்-பலனடைந்த நீதிபதிகள், அதிகாரிகள், திமுகவினர்

Google Oneindia Tamil News

Tamil Nadu Housing Board Logo
சென்னை: தமிழகத்தில் நடந்துள்ள மிகப் பெரிய நில ஊழலை ஆர்டிஐ சேவகர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். கோபாலகிருஷ்ணன் என்ற அந்த சேவகர் அம்பலப்படுத்தியுள்ள இந்த ஊழலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், திமுகவினர் உள்ளிட்ட பலரும் பலன் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழக நகர்ப்புறங்களில் சொந்தமாக வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அந்த வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் இடம், வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் விற்கிறது. இந்த நிலம் அல்லது வீடுகளை வாங்குவோருக்கு சொந்தமாக வீடோ அல்லது நிலமோ இருக்கக் கூடாது.

இந்த வீடுகள், நிலங்களை தமிழக அரசு, தனது சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு அந்தஸ்து பெற்றவர்களுக்கு ஒதுக்குவதும் வழக்கத்தில் உள்ளது. ஆனால் இவர்களும் கூட சொந்தமாக வீடோ, நிலமோ இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

ஆனால் விதியை மீறி சகட்டுமேனிக்கு திமுக அரசுக்கு நெருக்கமானவர்களுக்கு நிலங்களையும், வீடுகளையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளது வீட்டு வசதி வாரியம் என்பதை கோபாலகிருஷ்ணன் தனது ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இந்த சிறப்பு அரசு ஒதுக்கீட்டில் 15 சதவீதத்தை, முதல்வரால் நேரடியாக பரிந்துரைக்கப்பட முடியும். சிறப்பு அரசு ஒதுக்கீட்டைப் பெற கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.

- கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவரை இழந்த பெண்கள்.

- சமூக சேவகர்கள்.

- உடல் ஊனமுற்றவர்கள்.

- பாதுகாப்புப் படையினர்.

- முன்னாள் ராணுவத்தினர்

- அறிவியல், கலை, இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம், விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்குவோர்.

- சுதந்திரப் போராட்ட வீரர்கள்.

- அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்.

- பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர்.

- மத்திய அரசு நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றுவோர்.

- பத்திரிக்கையாளர்கள்.


- பல்கலைக்கழக பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள்.

இவர்களுக்குத்தான் இந்த அரசு சிறப்பு ஒதுக்கீட்டைப் பெற தகுதி உண்டு. மேலும் இவர்களும் கூட சொந்த நிலம், வீடு இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

தற்போது இந்த ஒதுக்கீட்டின் கீழ் நிலம், வீடு பெற்றுள்ள பலரின் தகுதி சமூகத்தில் மிகப் பெரியதாக உள்ளது, இந்த ஒதுக்கீட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது.

திமுகவில் ஒரு பிரிவின் செயலாளராக இருப்பவரை சமூக சேவகர் என்ற அந்தஸ்தின் கீழ் வீடு ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். அதேபோல சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவருக்கும் வீடு ஒதுக்கியுள்ளனர். பல முக்கிய அதிகாரிகள், அவர்களது உறவினர்களுக்கு வீடு கொடுத்துள்ளனர்.

சிலர் தங்களைப் பாராட்டி தாங்களே கொடுத்த சான்றிதழை வைத்து நிலம், வீடு பெற்றுள்ளனர். சிலர் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் சான்றிதழ்களைக் காட்டி வீடு வாங்கியுள்ளனர்.

நிலம், வீடு ஒதுக்கப்பட்டவர்களில் சிலர் குறித்த விவரம்...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி, முன்னாள் நீதிபதி ரவராஜ பாண்டியன் (இவர் சமீபத்தில்தான் அரசின் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்).

நீதிபதி பானுமதிக்கு சோழிங்கநல்லூரில் எம்ஐஜி ஃபிளாட்கள் 2 ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு முறையே ரூ. 27.55 லட்சம் மற்றும் ரூ. 30.05 லட்சமாகும். இந்த இரண்டு வீடுகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. 2008ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி இவை ஒதுக்கப்பட்டுள்ளன. நீதிபதி பானுமதிக்கு ஏற்கனவே சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், வீடு உள்ளது. இதுபோக அவரது கணவர் வழக்கறிஞர் கணேசன் பெயரில் நிலமும் உள்ளது. அதேபோல சைதாப்பேட்டையில் சொந்தமாக நிலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி கே.ரவிராஜ பாண்டியனுக்கு, திருவான்மியூர் விரிவாக்கப் பகுதியில், 3117 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி இது ஒதுக்கப்பட்டது. இதன் அப்போதைய மதிப்பு ரூ. 68.54 லட்சமாகும். இப்போது இதன் மதிப்பு ரூ. 3.2 கோடியாகும்.

நிலம் பெற்ற மற்றவர்கள் - வழக்கறிஞர் வி.அம்பிகா (கடப்பேரி-மதுராந்தகம்), உளவுப்பிரிவு ஐஜி ஜாபர்சேட் (திருவான்மியூர், காமராஜ் நகரில் ரூ. 1.26 கோடி மதிப்புள்ள நிலம். இப்போது இதன் மதிப்பு ரூ. 6 கோடியாகும். அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவின் கீழ் இந்த நிலத்தை ஜாபர்சேட் வாங்கியுள்ளார். 2008ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இந்த நிலத்தை ஜாபர்சேட்டின் மகள் ஜெனீபர் சேட் (அப்போது இவர் மாணவி) பெயருக்கு அரசு கொடுத்தது. இந்த நிலத்தை வாங்குவதற்காக முதலில் ரூ. 46.03 லட்சம், ரூ. 1.73 லட்சம் என இரு காசோலைகளை வழங்கியுள்ளார் ஜெனீபர். பின்னர் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ. 60 லட்சம் கொடுத்தார். முழுத் தொகையையும் கொடுத்த பின்னர் நிலத்தை தனது தாயார் பர்வீன்ஜாபர் பெயருக்கு அவர் மாற்றிக் கொடுத்துள்ளார்.

தனது மகளிடமிருந்து இந்த நிலத்தைப் பெறுவற்காக பர்வீன் ஜாபரும், 3 தவணையாக பணத்தைக் கொடுத்து நிலத்தைப் பெற்றுள்ளார். இந்த இரட்டை கட்டணத்திற்குக் காரணம், மகள் ஜெனீபர் மீது வருமான வரித்துறை விசாரணை பாய்ந்து விடக் கூடாது என்பதற்காக என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த இடத்தில், பர்வீன் ஜாபர் சேட்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் மகனான துர்கா சங்கரும் இணைந்து பல அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 12 பிளாட்டுகள் ஏற்னவே கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இதில் இடம் பெறும் ஒவ்வொரு வீடும் ரூ. 1 கோடிக்கு விற்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தொழில்துறை இணைச் செயலாளர் ஜி.பிரகாஷ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி.கே.கரியாலி, லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட முன்னாள் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் (இவர் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற சலுகையின் கீழ் வீடு பெற்றுள்ளார்).

மதிமுகவிலிருந்து தாவி திமுகவுக்கு வந்து சேர்ந்தவரான எல்.கணேசன், முகப்பேர் பகுதியில் எச்ஐஜி வீட்டை வாங்கியுள்ளார். அதன் அப்போதைய மதிப்பு ரூ. 79.86 லட்சமாகும்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மருமகளும், மறைந்த அவரது மகன் செழியனின் மனைவியுமான பிருந்தா நெடுஞ்செழியன், முகப்பேரில் எச்ஐஜி வீட்டை வாங்கியுள்ளார். சமூக சேவகர் என்ற பெயரில் இவர் வாங்கியுள்ளார். இதற்காக சேலம் தாசில்தார் ஒருவர் சான்றிதழ் அளித்துள்ளார். ஆனால் சென்னையில் வீடு வாங்குவதற்கு சேலம் தாசில்தார் சான்றழிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிருந்தா செழியனின்மகளுக்கும் முகப்பேரில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. 20 வயதான இவரும் சமூக சேவகர் என்று காட்டி வாங்கியுள்ளனர். இவருக்கும் சேலம் தாசில்தாரே சான்றளித்துள்ளார். சமூக சேவையாக இவர் கூறியிருப்பது என்எஸ்எஸ் முகாம்களில் பங்கேற்றது, ரத்ததானம் செய்தது, கண் தான முகாம்களை நடத்தியது, ஏழை மாணவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தது. தாய்க்கும், மகளுக்கும் அடுத்தடுத்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏவும், அரசு தலைமைக் கொறடாவுமான சக்கரபாணியின் மனைவி ராஜலட்சுமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோதா.

பூச்சி முருகன். இவர் திமுக தொழிற்சங்க உறுப்பினர். சமூக சேவகர் என்ற பெயரில் திருவான்மியூரில் இடம் வாங்கியுள்ளார். இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 2.07 கோடியாகும். இவர் சமூக சேவகர் என்ற பெயரில் இடத்தை வாங்கியுள்ளார். ஆனால் இதற்காக எந்த ஒரு சான்றிதழையும் இவர் சமர்ப்பிக்கவில்லையாம்.

பாரதி தென்னரசு - சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த திமுக தலைவர் தென்னரசுவின் மனைவி. சமூக சேவகர் என்ற பெயரில் வாங்கியுள்ளார். ஆனால் சமூக சேவைக்கும், இவருக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் ஆர்டிஐ மூலம் தெரிவித்துள்ளார் கோபாலகிருஷ்ணன்.

மு.க.அழகிரியின் வலது கரங்களில் முக்கியமானவரான மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.எல்.ஏ. மூர்த்தி. இவருக்கு முகப்பேரில் வீடு ஒதுக்கபப்ட்டுள்ளது. இதன் இப்போதைய மதிப்பு ரூ. 4 கோடியாகும். சமூக சேவகராக இவர் காட்டப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு மதுரை மாவட்டத்தில் ஏகப்பட்ட நிலங்கள் இவரது பெயரிலும், மனைவி பெயரிலும் உள்ளன. சொந்த ஊரான வெளிச்சநத்தத்தில் இவருக்கு ஏகப்பட்ட நிலங்களும் உள்ளன.

முதல்வரின் தனி செயலாளர் தேவராஜின் மகள் தீபா, தேனி மாவட்ட கலெக்டர் முத்துவீரனின் மகன் நவீன்குமார், ஜாபர்சேட்டின் மகன் நவீன் இப்ராகிம், முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், திமுக தலைமைக் கழக ஐடி பிரிவு மேலாளர் இளமுகில், இளமுகிலின் சகோதரி இளந்தென்றல், உச்சநீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் கண்ணபிரான், முதல்வரின் பாதுகாப்புப் பிரிவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் கணேசன், வினோதன், இன்னொரு பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான பாண்டியனின் மனைவி மீனா ஆகியோருக்கும் விதிகளுக்குப் புறம்பாக நிலம், வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆர்டிஐ தகவல் தெரிவிக்கிறது.

இது குறித்து தெஹல்கா இதழ் முழு விவரத்தையும் வெளியிட்டுள்ளது.

English summary
The Tamil Nadu Housing Board (TNHB) has a government discretionary quota under which 15% of allotments can be recommended by the CM. Those eligible to get land allotment are, deserted women, widows, social workers; physically challenged persons, ex-servicemen, eminent persons in the field of science, arts, literature, economics, public administration and sports, freedom fighters, government servants with unblemished service records, journalists, university staff, and employees of local bodies. But many of the allottees issued certificates by themselves and got the land. Judges, IG and top ranking IAS officers and DMK men have got the land under CM"s quota.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X