For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டுவசதிவாரிய ஒதுக்கீட்டில் எந்தத் தவறும் நடக்கவில்லை-கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது எல்லா ஆட்சியிலும் இருந்து வரும் நடைமுறைதான். இதில் எந்தவிதமான முறைகேடோ, விதிமீறலோ நடக்கவில்லை, எந்தத் தவறும் நடக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கியுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் - மனைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு விருப்புரிமையின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீடுகள் - மனைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக - கற்பனையாகவும், வேண்டுமென்றே திசை திருப்ப வேண்டுமென்ற உள்நோக்கத்துடனும்; சில நீதியரசர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் பெயர்களைக் குறிப்பிட்டு - ஒரு சில ஏடுகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது ஏதோ இப்போது தி.மு.கழக ஆட்சியிலே மட்டும் நடைமுறைப்படுத்துவது போன்ற தோற்றத்தை அந்தச் சில நாளேடுகள் உருவாக்கிட பெருமுயற்சிகள் செய்கின்றன. அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது கடந்த பல ஆண்டுகளாகவே, நடைபெற்ற எல்லா ஆட்சிக் காலங்களிலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்படும் மனைகள், கட்டப்படும் வீடுகள் அனைத்தும் - அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் - நடைமுறையில் இருந்து வரும் ஒன்றாகும்.

வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகள் ஆகியவற்றில் 85 சதவிகித வீடுகளை வீட்டு வசதி வாரியத்திற்கு விண்ணப்பம் செய்வோருக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மீதியுள்ள 15 சதவிகித வீடுகள் மற்றும் மனைகளை அரசு விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்கிறது. இது எல்லா ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து கடைப்பிடித்து வரப்படும் முறையாகும்.

அரசு தனது விருப்புரிமை ஒதுக்கீடான 15 சதவிகித இடங்களை திருமணம் ஆகாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், சமூக சேவகர்கள், சமூகத்தில் சிறப்பு வாய்ந்தோர், தனியாக வசிக்கும் முதியோர், பொது நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் பணி புரிவோர், மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோர், பத்திரிகையாளர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிவோர், தேசியமயமாக்கப்பட்ட ஈட்டுறுதி நிறுவனங்களில் பணி புரிவோர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாரியங்களில் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைத் தவிர) பணிபுரிவோர், உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரிவோர், ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் ஆகியோர்க்கு, விண்ணப்பங்கள் - கைவசம் உள்ள மனைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அரசினால் விருப்புரிமையைப் பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போலவும், குலுக்கல் முறையிலே விற்பவர்களிடம் பெறப்படும் தொகையை விட இது குறைவானது என்பதைப் போலவும், வேண்டியவர்களுக்கெல்லாம் அரசு இடத்தை இனாமாக வாரிக் கொடுத்து விட்டதைப் போலவும் சில நாளேடுகள் மற்றும் தொலைக்காட்சிகள் இந்தப் பிரச்சினையை திசைதிருப்பக்கூடிய வகையில் செய்திகளை வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - குடியிருப்புகளுக்கு அல்லது மனைகளுக்கு விலை நிர்ணயம் செய்யும்பொழுது; வாரியம் நடைமுறையில் கடைபிடிக்கும் விலை, சந்தை விலை, பத்திரப்பதிவு அலுவலக வழிகாட்டி மதிப்பீட்டு விலை ஆகியவற்றுள் எது அதிகமோ, அதையே இறுதி விலையாக நிர்ணயம் செய்கிறது. அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டிற்கும், வாரிய ஒதுக்கீட்டிற்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணய முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த அரசின் சார்பில் விருப்புரிமை அடிப்படையில் மனை பெற்றோர், அந்தத் தொகை மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து, அந்த மனையையே திரும்ப ஒப்படைக்கின்ற நிலைமையும் உள்ளது.

மேலும், ஒதுக்கீடு பெறுவோர்,வாரிய விதிமுறைகளின்படி விண்ணப்பப் படிவத்தில் தெரிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தரும் உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டே ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

ஒதுக்கீடு பெறுவோர் - மனையின் முழு விலையையும் செலுத்தி, விற்பனைப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டதற்குப் பிறகு - அந்த மனையை எந்த விதமாகக் கட்டிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து வீட்டுவசதி வாரியம் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை.

அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டினால் அரசுக்கோ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கோ எந்த வகையிலும் நிதியிழப்பு இல்லை. எல்லா ஆட்சிக் காலத்திலும் ஒரே மாதிரியான நடைமுறைகளும், விதிமுறைகளும்தான் பின்பற்றப்பட்டு வருகின்றன. விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அல்லது விதிமுறைகளை மீறி அரசு விருப்புரிமை ஒதுக்கீடுகள் நடைபெற்றதாகச் சொல்லப்படும் செய்தி விஷமத்தனமானது.

''விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு ஒதுக்கீடு செய்யும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் - குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டால் - அரசு அதனைப் பரிசீலனை செய்து, உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும்" என்று நேற்றே (7.12.2010) செய்தியாளர்களிடம் வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் விளக்கியுள்ளார்.

வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் இது போல வாடகை வீடுகளே கூட விருப்புரிமை அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த சிலருக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாத இந்தத் தகவலை பெரிதாக்கி உள்நோக்கத்தோடு செய்திகளை சில பத்திரிகையாளர்கள் வெளியிட்ட போதிலும், அனைத்துப் பத்திரிகையாளர்களும் வீட்டு வசதி பெற வேண்டுமென்ற எண்ணத்தோடு கழக அரசு எவ்வெப்போதெல்லாம் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பத்திரிகையாளர்களுக்கே என்று சலுகை விலையில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் வீட்டு மனைகள் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தச் செய்திகளை அந்த இதழாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றுவோர் மறைத்து விட்டு அரசின் மீது களங்கம் சுமத்த முற்படுவது தான் விந்தையிலும் விந்தையாகும். நன்றியோ நன்றி என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
Tamil Nadu CM Karunanidhi refutes TNHB land scam charges. He says, nothing done illegally in allocation of flats and hosing plots to eminent personalities, polticians, social workers and bureaucrats. All the norms are followed in these allocation, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X