For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடார் சமுதாயத்துக்காக முதன் முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதி-கனிமொழி

Google Oneindia Tamil News

சிவகாசி: நாடார் சமுதாயத்துக்காக முதன் முதலாக குரல் கொடுத்தவர் முதல்வர் கருணாநிதி என்று கூறியுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி

நாடார் மகாஜன சங்க நூற்றாண்டு விழா, 69 வது மாநாடு சிவகாசியில் சனிக்கிழமை தொடங்கியது. நேற்று நடந்த 2வது நாள் நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில்,

இந்த விழாவில் பேசியவர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசியலில் போதிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்று கூறினர். தி.மு.க. அரசைப் பொறுத்தமட்டில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் அமைச்சர்களாக உள்ளனர். பொதுவாக பெண்களுக்கு அமைச்சரவையில் பதவி தரப்படுவது இல்லை. அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் மிக சாதாரண துறைகள் தான் அவர்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால் தி.மு.க. அரசு உலக அளவில் பேசப்படும் துறையான தகவல் தொழில்நுட்பத்துறையை நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.

1957ம் ஆண்டு தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, காமராஜர் முதல் அமைச்சராக இருந்தார். அப்போது சாதி பட்டியலை அரசு வெளியிட்டது. அந்த சாதி பட்டியலை பார்த்த முதல் அமைச்சர் கருணாநிதி காமராஜரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். நான் சார்ந்த இசை வேளாளர் சமுதாயத்தை மரியாதையுடன் சாதி பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய சாதியான நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நாடான், சாணான் என்று மரியாதை குறைவாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே? இது எந்த வகையில் நியாயம் என்று கேட்டார்.

அப்போது காமராஜர், கக்கனை பார்த்து என்னவென்று கேட்டார். அப்போது கக்கன் தவறு நேர்ந்து விட்டது. திருத்திக்கொள்கிறோம் என்று சபையிலே தெரிவித்தார். அந்த அளவுக்கு நாடார் சமுதாயத்துக்காக முதன் முதலாக குரல் கொடுத்தவர் முதல் அமைச்சர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த மாநாட்டின் வாயிலாக நிர்வாகிகளுக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். பள்ளி, கல்லூரிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ள நீங்கள் ஏன் ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியை உருவாக்கவில்லை. இதை சங்கத்தினர் கருத்தில் எடுத்துக்கொண்டு ஆவன செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தில் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள் கிடைக்காமல் போய் விடுகிறது. இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இந்த சமுதாயத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பொன்னிலன், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றோரை அழைத்திருக்கலாம். அவர்களது கருத்துகள் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும்.

தி.மு.க. அரசு நாடார் சமுதாயத்தினருக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவங்களை அளித்து வருகிறது. தொடர்ந்து இந்த சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவங்களை அளிக்க தி.மு.க. அரசு பாடுபடும்.

தேர்தல் வருகிறது என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு எந்த திட்டங்களையும் தி.மு.க. அரசு செய்வதில்லை. மக்களுக்கு எது தேவையோ, அதனை உணர்ந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றார் கனிமொழி.

English summary
Nadara Mahajana Sangam conference held in Sivakasi. DMK RS MP Kanimozhi attended the 2nd day function yesterday. While speaking in the function she told that Nadar community recieved its ardent support for the first time from CM Karunanidhi. DMK govt has done a lot for the community including 2 minster posts in the govt, she told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X