For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் இத்தாலிய குணாதிசயங்களை மறக்காமல் இருக்கிறார் சோனியா-விக்கிலீக்ஸ்

Google Oneindia Tamil News

Sonia
டெல்லி: இந்தியப் பெண்மணியாக மாறி விட்ட போதிலும், தனது இத்தாலிய குணாதிசயங்களை சோனியா காந்தி இன்னும் மறக்கவில்லை என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண ஆளுநர் அர்னால்ட் ஸ்வார்ஷனீகரின் மனைவியான மரியா ஷ்ரீவர் கூறியதாக தகவல் வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

2006ம் ஆண்டு மரியா, இந்தியாவுக்கு வந்திருந்தபோது சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது மரியாவிடம் மனம் விட்டு பல விஷயங்களைப் பேசினார் சோனியா. இந்தப் பேச்சை அப்போது உடன் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரகசியமாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் அனுப்பி வைத்த கடிதத்தை இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி சோனியாவை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார் மரியா. இதுகுறித்த தகவல்...

சோனியா காந்தி இந்தியப் பெண்மணியாகவே மாறி விட்டாலும் கூட அவருக்குள் இருக்கும் இத்தாலிய குணாதிசயங்கள் இன்னும் போகவில்ல. அவரது மேனரிசம், பேச்சு, விருப்பங்கள் உள்ளிட்டவற்றில் இத்தாலிய வாசம் வீசுகிறது. இருப்பினும் இதை தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமும், உறவினர்களிடமும் மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார்.

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய அதிர்ச்சி சம்பவம் (ராஜீவ் காந்தி படுகொலை) அவரை மேலும் உறுதியாக்கியுள்ளது. அதேசமயம், தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேறி பொது வாழ்க்கைக்கு வருவதையும் அதுவே தடுத்து வந்தது. தனது மாமியார் குறித்தும், கணவர் குறித்தும் அவர் பேசும்போதெல்லாம் அவர் பெருகி வந்த உணர்ச்சிகளை அடக்க கடுமையாக போராடியதை உணர முடிந்தது.

தனது பேச்சின்போது தனது கல்யாணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது, தனது குடும்பமும், தனது கணவர் குடும்பமும் செய்த தியாகங்கள் ஆகியவற்றைக் குறித்து அவர் மிகுந்த உணர்ச்சிகரமாக பேசினார். பிரதமர் மன்மோகன் சிங்கின் வேலையில் பாதியை சோனியா செய்வதாகவே அவரது பேச்சுக்கள் உணர்த்துகின்றன.

தான் ராஜீவை கல்யாணம் செய்வதை பெற்றோர் கடுமையாக எதிர்த்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் ராஜீவை கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார் சோனியா. நினைத்தபடி ராஜீவையே கைப்பிடித்தார்.

இந்திரா காந்தி மறைந்த பின்னர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர வேண்டும் என்ற நெருக்குதல் அதிகமாக இருந்தது. ஆனால் ராஜீவுக்கோ அல்லது சோனியாவுக்கோ அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லாமலேயே இருந்துள்ளது.

அரசியல் வேண்டாம் என்றுதான் ஆரம்பத்திலிருந்தே ராஜீவை கேட்டுக் கொண்டிருந்தார் சோனியா. ஆனால் ராஜீவ் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கினார். பின்னர் ராஜீவ் காந்தி பிரதமரானார். ஆனால் சோனியா தொடர்ந்து தனது பிடிவாதத்தை கடைப்பிடித்தார். வெளிச்சத்திற்கு வராமல் அடக்கமாக இருந்து வந்தார். அதையே அவர் விரும்பியும் இருந்தார்.

அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே நான் ராஜீவுடன் சென்றேன் என்று கூறிய சோனியா, அரசியல் தொடர்பானவற்றிலிருந்து தான் விலகியே இருந்ததாக கூறினார். ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் சோனியாவின் பிடிவாதம் தளர்ந்தது. காந்தி குடும்பத்து பெருமையைக் காக்க அரசியலுக்கு வர தீர்மானித்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருந்தது. வலிமையான இந்தியாவை உருவாக்க காங்கிரஸ் பலமாக இருக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தை ஏற்ற சோனியா காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க முடிவு செய்தார். மிகப் பெரிய நெருக்குதல், தொடர் வலியுறுத்தல்கள், கட்டாயங்கள், கோரிக்கைகளுக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்தார் சோனியா. இருப்பினும் அப்போது தனது குழந்தைகளுக்கு தான் அரசியலுக்கு வருவதில் சற்றும் விருப்பமில்லை என்று தெரிவித்தார் சோனியா. இருப்பினும் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் துணை இருப்போம் என்று அவர்கள் தங்களது ஆதரவை தாயாருக்குத் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் தான் சுற்றுப்பயணம் செய்திருப்பதாக பெருமையுடன் கூறிய சோனியா, பல்வேறு தரப்பட்ட மக்களுடன் பேசிப் பழகியதன் மூலம் அவர்களின் பிரச்சினைகள், தேவைகளை தன்னால் உணர, அறிய முடிந்ததாக கூறுகிறார்.

ஏன் உங்களைத் தேடி வந்த பிரதமர் பதவி வாய்ப்பை ஏற்காமல் விட்டீர்கள் என்ற கேள்விக்கு சோனியா பதிலளிக்கவில்லை. மாறாக, இதுகுறித்து நிறையப் பேர் நிறைய முறை கேட்டு விட்டனர். இருப்பினும் ஒரு நாள் நான் புத்தகம் எழுதும்போது நிச்சயம் இதுகுறித்து அதில் தெரிவிப்பேன் என்று மட்டும் கூறினார் சோனியா.

அதேசமயம், பிரதமர் பதவியை ஏற்காமல் போனதற்காக தான் சற்றும் வருந்தவில்லை என்றும், அது தனக்கு ஏமாற்றத்தையோ, வருத்தத்தையோ தரவில்லை என்றும் கூறினார் சோனியா.

இந்தியப் பெண்கள் குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் மிகுந்த கவலை தெரிவித்தார் சோனியா. மேற்கத்திய நாடுகளில் இந்த அளவுக்கு பெண்களுக்குப் பிரச்சினைகள் கிடையாது. ஆனால் இந்தியப் பெண்கள் பல்வேறு விதமான, சிக்கலான, வினோதமான பிரச்சினைகளை சந்திப்பதாக அவர் கவலையுடன் கூறினார். சில அரசியல் கட்சிகள் பெண்களால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்று கருதுவதாகவும் கூறினார் சோனியா.

மேலும், தனது பேச்சின்போது கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக வட இந்தியாவை விட தென் இந்தியாதான் மிகவும் முன்னேற்றமடைந்திருப்பதாகவும், முற்போக்கு உணர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்தார் சோனியா.

English summary
Congress president Sonia Gandhi has promised to write a book detailing the tense moments in 2004 when she stepped aside in favour of Manmohan Singh for the prime ministership after the UPA emerged victorious in general elections. Stating that she is often asked why she turned down the top job, Ms. Gandhi told a visiting U.S. dignitary in New Delhi in 2006 that “I am often asked about this, but tell people that I will write a book some day with the whole story,” according to a secret U.S. cable released by WikiLeaks. The 2006 cable details Ms. Gandhi’s meeting with Maria Shriver, the First Lady of California and wife of Governor Arnold Shwarznegger. It is titled ‘A Garrulous Sonia Gandhi Opens Up to Maria Shriver’
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X