For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: வெளிப்படையாக செயல்படுமாறு ராசாவுக்கு கடிதம் எழுதினேன்-பிரதமர்

By Shankar
Google Oneindia Tamil News

Manmohan Singh
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: வெளிப்படையாக செயல்படுமாறு ராசாவுக்கு கடிதம் எழுதினேன்-பிரதமர்

டெல்லி: தமிழக மீனவர்கள் 106 பேரை சிறைபிடித்த இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் மத்திய அரசு சிக்கியுள்ள நிலையிலும் பிரதமர் மன்மோகன் எதற்கும் பதில் சொல்லாமல் நரசிம்ம ராவ் ஸ்டைலிலே ஆழ்ந்த மெளனம் காத்து வருகிறார். இதனால் எதிர்க்கட்சிகள் அவரைக் கடுமையாக விமர்சி்த்து வருகின்றன.

இந் நிலையில் டெல்லியில் இன்று மன்மோகன் சிங் தனது இல்லத்தில் டிவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:

சமீப காலமாக ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த், ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு, இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் போன்ற பிரச்சனைகளுக்கு மீடியாக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தன. இது சம்பந்தமாக விளக்கம் தரவேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். நாட்டு மக்களுக்கு பதிலைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இந்தியாவை ஊழல் மலிந்த நாடாக கருதிவிட முடியாது. எல்லா மட்டங்களிலும் ஊழலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ, காமன்வெல்த், ஆதர்ஷ் ஊழல் போன்ற அனைத்து பிரச்சனையும் அரசு மிகத் தீவிரமானதாகக் கருதுகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பணவீக்கம் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. இதைக் கட்டுப்படு்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மார்ச் மாதம் முடிவதற்குள் பணவீக்கத்தை 7 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வருவோம். உணவுப் பணவீக்கம் 15 சதவீதமாக இருந்தது. இப்போது 13.07 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயரும் போது விலைவாசி உயர்வும் ஏற்பட்டு விடுகிறது.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தை எதிர்க்கட்சியினர் நடத்த விடாமல் செய்தனர். அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பொறுத்தவரை அது முழுக்க தொலை தொடர்புத் துறை அமைச்சர் சம்பந்தப்பட்டது. அதில், 'முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு'என்ற விதிமுறைகள் கொண்டு வந்தது பற்றியோ அல்லது யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி என்னிடமோ அல்லது அமைச்சரவையிலோ விவாதிக்கவில்லை. இதில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தான் அனைத்து முடிவுகளையும் எடுத்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும் என்று நான் ஆ.ராசாவுக்கு 2007 நவம்பர் மாதமே கடிதம் எழுதினேன்.அந்த கடிதத்துக்கு அன்றே அவர் பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில், நான் கண்டிப்பாக வெளிப்படையான தன்மையை கடைப்பிடிப்பேன். எதிர்காலத்திலும் இதை செய்வேன் என்று கூறியிருந்தார். அவர் கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக ஏதும் நடக்காது என்று கருதியிருந்தேன்.

அதே போல ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் தான் விற்க வேண்டும் என்று தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமோ (TRAI)அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்யவில்லை. இதனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம்தான் செய்யவேண்டும் என்பதை வற்புறுத்த முடியாமல் போய் விட்டது.தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமோ அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்யாததால் ஏலம் தேவையில்லை என்ற முடிவை ராசாவே எடுத்துவிட்டார். ஆனால் அந்த ஒதுக்கீட்டின் பின்னணியோ, அதன் பிறகு நடந்த விஷயங்களோ எனக்குத் தெரியாது.

2வது முறையாக காங்கிரஸ் கூட்டணி பதவியேற்ற போது ராசா மீண்டும் அதே துறையில் அமைச்சராக நியமிக்கப்பட்டதில் காங்கிரசின் பங்கு எதுவும் இல்லை. கூட்டணி கட்சியான திமுக அவரைத் தேர்வு செய்தது. அதில் நாங்கள் தலையிடவில்லை. அந்த நேரத்தில் ராசா பற்றி தவறான விஷயங்கள் எதுவும் என் மனதில் இல்லை.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டது என்பதை கணித்து சொல்வது கடினம். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு நான் பயப்படவில்லை. எந்தக் குழு முன்பும் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.நான் பலவீனமான பிரதமர் என்று சொல்வது சரியல்ல. எனது நடவடிக்கை சரியான திசையிலே செல்கின்றன.

எந்தச் சூழ்நிலையிலும் பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன். எனது பணியை ஒருபோதும் இடையில் விட்டு விட்டு ஓடி விட மாட்டேன். எங்கள் அரசு வலுவான கூட்டணியுடன் செயல்படுகிறது. எல்லா கட்சிகளும் முழு மனதோடு ஆதரவு தருகின்றன. எனவே கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். கூட்டணி ஆட்சி என்பதால் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை நான் மறுக்கவில்லை.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள 106 தமிழக மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இந்தக் கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அதேபோல கேரள சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரசே வெல்லும் என்றார்.

பிரதமர் பேட்டியில் திருப்தியில்லை-பாஜக:

இந் நிலையில் பிரதமர் பேட்டி தொடர்பாக பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங் தனது பேட்டியில் முழுமையான தகவல்களை சொல்லவில்லை. மக்கள் எதிர்பார்த்த விளக்கங்களும் அவரிடம் இருந்து வரவில்லை. காங்கிரஸ் அரசில் நடந்த ஊழல்களை மூடி மறைக்கும் வகையில் அவரது பேட்டி உள்ளது என்றார்.

English summary
Prime Minister Manmohan Singh condemn Sri Lanka for arresting 106 Tamil fishermen yesterday in Indian Ocean.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X